விஷ்மி குணரத்ன மற்றும் கவிஷா தில்ஹாரியின் அபார ஆட்டத்தின் உதவியால் தென்னாபிரிக்கா மகளிர் அணிக்கு எதிரான 2ஆவது T20i போட்டியில் இலங்கை மகளிர் அணி 7 விக்கெட்டுகளால் அபார வெற்றியீட்டியது.
போர்செப்ஸ்ட்ரூமில் நேற்று (28) நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த தென்னாபிரிக்கா மகளிர் அணி 20 ஓவர்களுக்கும் 8 விக்கெட்டுகளை இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றது.
அந்த அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனை Anneke Bosch 32 பந்துகளில் 4 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 50 ஓட்டங்களையும், Marizanne Kapp 36 பந்துகளில் 44 ஓட்டங்களையும் எடுத்தார்.
பந்துவீச்சில் அச்சினி கௌஷல்யா 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்நிலையில் பதிலெடுத்தாட வந்த இலங்கை அணியின் தலைவி சமரி அத்தபத்து 6 ஓட்டங்களுடன் மீண்டும் ஏமாற்றம் கொடுத்தார். எனினும், மற்றுமொரு ஆரம்ப வீராங்கனையான விஷ்மி குணரத்ன மற்றும் கவிஷா தில்ஹாரியும் 4ஆவது விக்கெட்டுக்காக மேற்கொண்ட அபார இணைப்பாட்டத்தின் உதவியால் இலங்கை மகளிர் அணி 18.5 ஓவர்களில் 3 வி;க்கெட் இழப்பிற்கு 138 ஓட்டங்களை எடுத்து வெற்றயீட்டியது.
- முதல் T20i போட்டியில் இலங்கை மகளிர் அணிக்கு தோல்வி
- அடுத்தடுத்த வெற்றிகளைப் பதிவு செய்த இலங்கை U19 மகளிர் கிரிக்கெட் அணி
- மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில்
திறமையாகத் துடுப்பெடுத்தாடிய விஷ்மி குணரத்ன 57 பந்துகளில் 9 பௌண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 65 ஓட்டங்களையும், கவிஷா தில்ஹாரி 28 பந்துகளில் 4 பௌண்டறிகளுடன் ஆட்டமிழக்காமல் 45 ஓட்டஙகளையும் எடுத்தனர்.
தென்னாபிரிக்காவின் பந்துவீச்சில் Tumi Sekhukhune, Chloe Tryon மற்றும் adine de Klerk ஆகிய மூவரும் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தியிருந்தனர்.
இதன்படி, 7 விக்கெட்டுகளால் வெற்றயீட்டிய இலங்கை மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட T20i தொடரை 1க்கு 1 என சமப்படுத்தியுள்ளது.
போட்டியின் ஆட்டநாயகி விருதை விஷ்மி குணரத்ன பெற்றுக் கொண்டார்.
இரு அணிகளுக்குமிடையிலான தொடரை தீர்மானிக்கின்ற 3ஆவது மற்றும் கடைசி T20i போட்டி ஏப்ரல் 03ஆம் திகதி ஈஸ்ட் லண்டனில் நடைபெறவுள்ளது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<