தென்னாபிரிக்கா மகளிர் அணிக்கு எதிராக பெனோனியில் நேற்று (27) நடைபெற்ற முதல் T20i போட்டியில், இலங்கை மகளிர் அணி 79 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது.
தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட T20i மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது.
இந்த நிலையில், நேற்று பெனோனியில் நடைபெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி, முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 195 ஓட்டங்களை எடுத்தது. மகளிருக்கான T20i போட்டியில் தென்னாபிரிக்கா அணி குவித்த 2ஆவது அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.
ஆந்த அணிக்காக துடுப்பாட்டத்தில் வானவேடிக்கை நிகழ்த்திய அணித்தலைவி Laura Wolvaardt 63 பந்துகளில் 102 ஓட்டங்களைக் குவித்தார். T20i போட்டிகளில் அவரது கன்னி சதம் இதுவாகும். இதுதவிர, Laura உடன் 2ஆவது விக்கெட்டுக்காக 116 ஓட்டங்களைப் பெற உதவிய Marizanne Kapp 40 பந்துகளில் 60 ஓட்டங்களைக் குவித்தார்.
இலங்கை அணியின் பந்துவீச்சை பொருத்தவரை அச்சினி குலசூரிய 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில்
- டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனன்ஜய, கமிந்து!
- பங்களாதேஷ் குழாத்தில் இணையும் முன்னணி வீரர்!
196 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு சமரி அத்தபத்து ஒரு ஓட்டத்துடனும், விஷ்மி குணரத்ன 8 ஓட்டங்களுடனும் ஏமாற்றம் கொடுத்தனர்.
எனினும், தொடர்ந்து வந்த ஹர்ஷிதா சமரவிக்ரம (38) மற்றும் ஹசினி பெரேரா (30) ஆகிய இருவரும் மாத்திரம் நம்பிக்கை கொடுத்த போதிலும் தொடர்ந்து வந்த வீராங்கனைகள் ஒற்றை இலக்கத்துடன் வெளியேறினர். இதனால் இலங்கை மகளிர் அணி 18.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 119 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து தோல்வியைத் தழுவியது.
தென்னாபிரிக்கா மகளிர் அணியின் பந்துவீச்சில் Tumi Sekhukhune, Annerie Dercksen ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தியிருந்தனர்.
தென்னாபிரிக்கா மகளிர் அணிக்காக சதமடித்து அசத்திய போட்டியின் ஆட்டநாயகியாக தெரிவானார்.
இவ்விரு அணிகளுக்குமிடையிலான 2ஆவது T20i போட்டி நாளை மறுதினம் (30) இல் நடைபெறவுள்ளது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<