சுற்றுலா இலங்கை மகளிர் அணிக்கெதிரான சர்வதேச T20 கிரிக்கெட் தொடரை அவுஸ்திரேலிய மகளிர் அணி 3-0 என வீழ்த்தி வெள்ளையடிப்பு முறையில் தொடரை கைப்பற்றியுள்ளது.
ஏற்கனவே 2-0 என தொடரைக் கைப்பற்றியிருந்த நிலையில் சிட்னியில் இன்று (2) நடைபெற்ற இந்த தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் 132 ஓட்டங்களால் அவுஸ்திரேலிய மகளிர் அணி அபார வெற்றியை தனதாக்கியுள்ளது.
சமரி அதபத்துவின் சாதனை சதம் வீண் : முதல் T20i ஆஸி வசம்
அவுஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் விஜயம் செய்துள்ள ……..
போட்டியின் நாணய சூழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய அவுஸ்திரேலிய அணிக்கு அலைய்சா ஹீலி மற்றும் பெத் மூனி ஆகியோர் சிறந்த ஆரம்பத்தை வழங்கியிருந்தனர். இருவரும் இணைந்து 5.4 ஓவர்களில் 59 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், பெத் மூனி 14 ஓட்டங்களுடன் சமரி அத்தபத்துவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து இரண்டாவது விக்கெட்டுக்காக ரசேல் ஹைய்னெஸ்சுடன் இணைந்து 109 ஓட்டங்களை அலைய்சா ஹீலி இணைப்பாட்டமாக பெற்றிருந்தார். ரசேல் ஹைய்னெஸ் 37 பந்துகளில் 41 ஓட்டங்களைக் குவித்தார்.
போட்டியின் ஆரம்பம் முதல் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த அலைய்சா ஹீலி 61 பந்துகளில் 7 சிக்ஸர்கள் 19 பௌண்டரிகள் அடங்கலாக 148 ஓட்டங்களைக் குவித்தார். இதன்மூலம், மகளிர் போட்டியில் அதிக ஒட்டங்களைப் பெற்ற வீரராங்கனை என்ற உலக சாதனையை அவர் படைத்தார்.
இதன்மூலம் சக வீராங்கனை மெக் லன்னிங் இங்கிலாந்து அணிக்கெதிராக இரண்டு மாதங்களுக்கு முன்னர் நிலைநாட்டியிருந்த 133 ஓட்டங்கள் என்ற சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
சர்வதேச T20 போட்டிகளில் அதிகபட்சமாக தாம் பெற்றிருந்த 90 ஓட்டங்கள் என்ற மைல் கல்லையும் அவர் இன்று இலகுவாக கடந்துள்ளார். இன்றைய போட்டியில் அதி விரைவான அரைச்சதம் மற்றும் விரைவான சதத்தைப் பெற்ற இரண்டாவது வீராங்கனை என்ற சாதனையையும் ஹீலி நிலைநாட்டியுள்ளார்.
முதலில் 25 பந்துகளை எதிர்கொண்டு அவர் அரைச்சதத்தை கடந்ததுடன், 46 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.
இவ்வாறு, ஒரு உலக சாதனை உட்பட தொடர் அதிரடிகளுடன் ஆஸி வீராங்கனைகள் 20 ஓவர்கள் நிறைவில் 226 ஓட்டங்களைக் குவித்தனர். இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் சமரி அத்தபத்து மாத்திரம் 27 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பின்னர், 227 ஓட்டங்கள் என்ற பாரிய வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை மகளிர் அணியின் விக்கெட்டுக்கள் சீரான இடைவெளியில் இழக்கப்பட்டன. இலங்கை அணி சார்பில் சமரி அதபத்து 30 ஓட்டங்களையும் ஹர்சிதா மாதவி 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இவர்களைத் தவிர ஷஷிக்கலா ஸ்ரீவர்தன 11 ஓட்டங்களைப் பெற்றதுடன், ஏனையவர்கள் ஒற்றையிலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
பந்துவீச்சில் நிக்கோலா மற்றும் ரைய்லா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் மேகன் மற்றும் ஜோர்ஜியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். போட்டியின் சிறப்பாட்டகாரராக அலைய்சா ஹீலி தெரிவுசெய்யப்பட்டார்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<