இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள மகளிர் உலகக் கிண்ணத்திற்குரிய தகுதி காண் கிரிக்கெட் சுற்றுப் போட்டிகளின் இரண்டாம் கட்ட ஆட்டமான சுப்பர் – 6 போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்று முடிந்த இலங்கை மற்றும் தென்னாபிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டியில், இலங்கை அணியினை தென்னாபிரிக்கா 9 விக்கெட்டுக்களால் வீழ்த்தி, சுப்பர் 6 போட்டிகளில் தனது முதலாவது வெற்றியினை பதிவு செய்துள்ளது.
பாகிஸ்தான் மகளிர் அணிக்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கை
இதனால், இத்தொடரில் இந்தியாவுடன் மாத்திரமே தோல்வியினை சந்தித்த இலங்கை மகளிர் அணிக்கு, அதனையடுத்து இறுதியாக விளையாடிய நான்கு போட்டிகளிலும் பெற்ற தொடர் வெற்றியினை இப்போட்டியில் நீடிக்க முடியாமல் போயுள்ளது.
P. சரவணமுத்து மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுக்கொண்ட இலங்கை அணித் தலைவி இனோக்கா ரணவீர, சொந்த மைதானத்தின் சாதகங்களினை கருதி முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்தார்.
இதன்படி மைதானம் வந்த இலங்கை மகளிர் அணி போட்டியின் இரண்டாவது ஓவரிலேயே, ஆரம்பத் துடுப்பாட்ட வீராங்கனையான சாமரி அத்தபத்துவின் விக்கெட்டை ஓட்டம் எதுவும் பெறாமல் பறிகொடுத்தது. எனினும், களத்தில் நின்ற ஏனைய ஆரம்பத் துடுப்பாட்ட வீராங்கனை நிப்புனி ஹன்சிக்கா மற்றும் புதிய வீராங்கனை சாமரி பொல்கம்பொல ஜோடி, இரண்டாவது விக்கெட்டுக்காக 67 ஓட்டங்களினைப் பகிர்ந்தது.
இரண்டாவது விக்கெட்டினை தொடர்ந்து தென்னாபிரிக்க மகளிர் அணியின் பந்து வீச்சில் தடுமாறிய இலங்கை, ஓட்டங்கள் குவிப்பதில் சிக்கல்களை எதிர் கொண்டதுன் குறைவான ஓட்டங்களுடன் தமது துடுப்பாட்ட வீராங்கனைகளின் விக்கெட்டுக்களையும் இழந்தது.
பின்னர் வந்த துடுப்பாட்ட வீராங்கனைகளில் ஹாசினி பெரேரா மாத்திரமே 20 ஓட்டங்களினை கடந்தார். முடிவில், இலங்கை மகளிர் அணி 50 ஓவர்களிற்கு 9 விக்கெட்டுக்களை இழந்து 142 ஓட்டங்களினை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
இலங்கை அணியில் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனையாக வந்திருந்த நிப்புனி ஹன்சிக்கா, தென்னாபிரிக்க பந்து வீச்சினை ஓரளவு சமாளித்து 6 பவுண்டரிகளுடன் 48 ஓட்டங்களினை அதிக பட்சமாகப் பெற்றார்.
இலங்கை மகளிர் அணியின் இறுதி 8 விக்கெட்டுக்களையும் 57 ஓட்டங்களிற்குள் சுருட்டிய தென்னாபிரிக்க மகளிர் அணியின் பந்து வீச்சில், சுழல் மங்கை சுனே லூஸ் 40 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை சாய்த்தார். மறுமுனையில் மற்றைய சுழல் வீராங்கனை டேன் வேன் நியெக்கெர்க் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.
பின்னர், வெற்றிக்காக 143 ஓட்டங்களினை 50 ஓவர்களில் அடைவதற்கு துடுப்பாடிய தென்னாபிரிக்க மகளிர் அணி, 36.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 145 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கினை அடைந்தது.
இதில், முன்னதாக சிறப்பாக பந்து வீசிய சுனே லூஸ் ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களினைப் பெற்றதுடன், ஆரம்பத் துடுப்பாட்ட வீராங்கனையாகக் களமிறங்கியிருந்த லோரா வொல்ட்வார்ட்டும் ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்டார்.
தென்னாபிரிக்க மகளிர் அணியில் பறிபோன ஒரேயொரு விக்கெட்டினை, பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் சிறப்பாக செயற்பட்டிருந்த எஷானி லொக்குசூரியகே கைப்பற்றியிருந்தார்.
இப்போட்டியில், பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டம் ஆகிய இரண்டு துறைகளிலும் சிறப்பாக செயற்பட்ட காரணத்திற்காக சுனே லூஸ் போட்டியின் ஆட்ட நாயகியாக தெரிவு செய்யப்பட்டார்.
சுப்பர் 6 சுற்றுத் தொடரில், இலங்கை மகளிர் அணி அடுத்து 19ஆம் திகதி பங்களாதேஷ் அணியினை எதிர்கொள்கின்றது.