இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியுடனான இறுதி ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் இங்கிலாந்து மகளிர் அணி தொடரின் நான்கு போட்டிகளிலும் வெற்றிபெற்று இலங்கை மகளிர் அணியினரை வைட் வாஷ் செய்து ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.
நேற்று ஆர்.பிரேமதாச சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகி, மழை காரணமாக நிறுத்தப்பட்டு இன்று மீண்டும் நடைபெற்று முடிந்த, இப்போட்டியில், சுழல் பந்து வீச்சாளர்களின் துணையுடன் இலங்கை மகளிர் அணியை 162 ஓட்டங்களால் படுதோல்வியடையச்செய்து இங்கிலாந்து மகளிர் அணியினர் இந்த வெற்றியினை சுவீகரித்தனர்.
நேற்று ஆரம்பமாகிய இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து மகளிர் அணியின் தலைவி ஹீத்தர் நைட், முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தார். இதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீராங்கனைகள் ஆரம்பம் முதலே இலங்கை மகளிர் அணியின் சுழல் பந்து வீச்சினை சமாளிக்க முடியாமல் சொற்ப ஓட்டங்களுடனும், ஓட்டம் எதுவும் பெறாமலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
Photos: Sri Lanka Women vs England Women – 4th ODI
Photos of the Sri Lanka Women vs England Women – 4th ODI
இதன் காரணமாக ஒரு கட்டத்தில், 58 ஓட்டங்களிற்கு 6 விக்கெட்டுக்களை இழந்து இக்கட்டான நிலைக்கு இங்கிலாந்து மகளிர் அணி சென்றது. இருப்பினும், 7ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த நட்டாலி ஸ்க்கீவர் மற்றும் டேனியல் ஹசேல் ஆகியோரின் நிதானமான இணைப்பாட்டத்தின் காரணமாக, சரிவடைந்த இங்கிலாந்து மகளிர் அணியின் ஓட்ட எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கப்பட்டது.
இவர்களுடன் ஏனைய இறுதி துடுப்பாட்ட வீராங்கனைகளினதும் முயற்சியின் காரணமாக, இங்கிலாந்து மகளிர் அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து எதிரணிக்கு சவால் விடும் வகையில் 240 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணியினை மீண்டும் தூக்கி நிறுத்த உதவிய டம்மி பீமொன்ட் 77 ஓட்டங்களை பெற்றதுடன் டேனியல் ஹசேல் 45 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக இறோஷினி பிரியதர்சினி, இனோக ரணவீர ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து இலங்கை மகளிர் அணி, மழை காரணமாக நேற்று நிறுத்தப்பட்ட நிலையில் இருந்து, அதாவது இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சிற்கான துடுப்பாட்டத்தினை இன்று வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 241 ஓட்டங்களை பெறுவதற்காக களமிறங்கியது.
நிப்புனி ஹன்சிக்கா, ஷாமரி அத்தபத்து ஆகியோருடன் இன்று ஆட்டத்தை தொடங்கிய இலங்கை அணி ஆரம்பத்தில் சற்று நிதமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியது. எனினும், தனது முதலாவது விக்கெட்டினை 18 ஓட்டங்களில் பறிகொடுத்துது.
அதன் பின்னர் இங்கிலாந்து மகளிர் அணியின் சுழல் பந்து வீச்சினை சமாளிக்க முடியாமல் சொற்ப ஓட்டங்களுக்குள் அடுத்தடுத்த விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த இலங்கை மகளிர் அணி 33.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து வெறும் 78 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 162 ஓட்டங்களினால் படுதோல்வியடைந்தது.
துடுப்பாட்டத்தில், இலங்கை மகளிர் அணி சார்பாக பிரசாதினி வீரக்கொடி மாத்திரம் அதிகபட்சமாக 32 ஓட்டங்களை பெற்றார். ஏனைய, வீராங்கனைகளில் ஒருவரை தவிர மற்றைய வீராங்கணைகள் யாவரும் 10 ஓட்டங்களை விட குறைவான ஓட்ட எண்ணிக்கையே பெற்றனர்.
பந்து வீச்சில், இலங்கையை நெருக்கடிக்குள்ளாக்கிய இங்கிலாந்தின் லாரா மார்ஸ் 21 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியதுடன், துடுப்பாட்டத்தில் ஏற்கனவே இங்கிலாந்து அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்த டேனியல் ஹேசல் 21 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுக்களையும், நட்டாலி ஸ்க்கீவர் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்.
இலங்கை மகளிர் அணி, ஏற்கனவே அவுஸ்திரேலியா மகளிர் அணியுடனும் படுதோல்வியடைந்து இந்த தொடரிலும் தோல்வியடைந்துள்ளது. இந்நிலையில், இம்மாத இறுதியில் ஆரம்பமாகும் மகளிர் அணிகளிற்கிடையிலான ஆசிய கிண்ணத்தில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி எதனை சாதிக்கும் என்ற கேள்வி இலங்கை ரசிகர்கள் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.
போட்டியின் சுருக்கம்
இங்கிலாந்து மகளிர் அணி: 240/9(50) – நட்டாலி ஸ்க்கீவர் 77(74), டேனியல் ஹசேல் 45(64), லாரா மார்ஸ் 36(64), இரோசினி பிரியதர்சினி 28/3(10), இனோக்கா ரணவீர 38/3(10)
இலங்கை மகளிர் அணி: 78/10(33.1) – பிராசாதினி வீரக்கொடி 32(67), லாரா மார்ஸ் 21/4(10), டேனியல் ஹசேல் 21/3(8.1), நட்டாலி ஸ்க்கீவர் 9/2(5)
போட்டி முடிவு – இங்கிலாந்து மகளிர் அணி 162 ஓட்டங்களால் வெற்றி