இன்றைய இரண்டாவது ஒருநாள் போட்டியில் துடுப்பாட்டம், பந்து வீச்சு ஆகிய இரண்டிலும் சிறப்பாக செயற்பட்ட இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி இலங்கை அணியினரை 122 ஓட்டங்களால் தோற்கடித்து, தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கின்றது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியினர் இலங்கை மகளிர் அணியுடன் நான்கு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகின்றனர். ஏற்கனவே, முதல் போட்டி தோல்வியில் நிறைவடைந்த நிலையில் இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கோடு இலங்கை மகளிர் அணி விளையாடியது.
இன்று காலை ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகிய இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணித்தலைவி இனோகா ரணவீர முதலில் இங்கிலாந்து மகளிர் அணியினரை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்திருந்தார்.
இதனடிப்படையில், ஹீத்தர் நைட் தலைமையிலான இங்கிலாந்து மகளிர் அணி லாரன் வின்பீல்ட், டில்லி பீமொன்ட் ஆகிய ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கணைகளுடன் தங்களது துடுப்பாட்டத்தினை ஆரம்பம் செய்தனர்.
ஆரம்பம் முதல் சற்று நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்திய இங்கிலாந்து மகளிர் அணியின் முதலாவது விக்கெட் அவர்கள் 53 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில், மனேல் குமாரியின் சுழலில் பறிபோனது. இதனால் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனையாக வந்திருந்த டில்லி பீமொன்ட் 28 ஓட்டங்களை பெற்ற நிலையில் அரங்கு நோக்கி திரும்பினார்.
இதனை அடுத்து அணித்தலைவி ஹீத்தர் நைட் மற்றைய ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கணையான லாரன் வின்பீல்ட் உடன் இணைந்து அணியை நல்ல நிலைக்கு கொண்டு சென்றார். அரைச்சதம் கடந்து 72 பந்துகளிற்கு 6 பவுண்டரிகள் உடன் 51 ஓட்டங்களை லாரன் வின்பீல்ட் பெற்றதுடன், அணித்தலைவி ஹீத்தர் நைட் 58 பந்துகளிற்கு 3 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகள் உள்ளடங்களாக 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தார்.
பின்னர், நிதானமான ஆட்டத்தில் இருந்து சற்று விலகி எல்லைகளை கடந்து பந்தை பதம் பார்க்க ஆரம்பித்த இங்கிலாந்து மகளிர் அணியின் அதிரடி வீராங்கனைகளான நட்டாலி ஸ்க்கீவர், அமன்டா எல்விஸ் ஆகியோரின் அதிரடியின் துணையோடு இங்கிலாந்து மகளிர் அணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 295 ஓட்டங்களை பெற்றது.
அதிரடியாக விளையாடிய நட்டாலி ஸ்க்கீவர் 27 பந்துகளிற்கு 1 சிக்ஸர் மற்றும் 9 பவுண்டரிகளை விளாசி அரைச்சதம் கடந்து 51 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார். மற்றொரு அதிரடி வீராங்கனையான அமன்டா எல்விஸ்சும் 36 பந்துகளிற்கு 8 பவுண்டரிகளுடன் 46 ஓட்டங்களை விளாசி அசத்தியிருந்தார்.
பந்து வீச்சில் இலங்கை மகளிர் அணி சார்பாக அணித்தலைவி இனோகா ரணவீர 10 ஓவர்களை வீசி 48 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். இவருடன் சேர்த்து அமா காஞ்சனாவும் 49 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார். இவர்களுடன் சேர்த்து சிரோமலா வீரக்கொடி 2 விக்கெட்டுக்களையும், மனேல் குமாரி 1 விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதனை, தொடர்ந்து 296 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கினை நோக்கி களமிறங்கிய இலங்கை மகளிர் அணியின் முதலாவது விக்கெட் 13.5 ஓவர்கள் நிறைவில் 50 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் பறிபோனது.
இதன்போது, சாமரி அதபத்து 19 ஓட்டங்களுடன் மைதானத்தை விட்டு வெளியேறினார். இவரின் விக்கெட்டுடன், கடந்த போட்டியைப் போன்று இலங்கை மகளிர் அணியினரின் ஓட்டங்கள் பெறும் வேகம் குறையத் தொடங்கியது. அதேவேளை, மறுமுனையில் அடுத்தடுத்து வந்த வீராங்கனைகள் குறைந்த ஓட்ட எண்ணிக்கையுடன் ஆட்டமிழந்து வெளியேற, 48.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 173 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. எனவே 122 ஓட்டங்களினால் இலங்கை மகளிர் அணி படுதோல்வியடைந்தது.
இலங்கை மகளிர் அணி சார்பாக அதிகபட்சமாக ஹாசினி பெரேரா 90 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரிகள் 1 சிக்ஸர் உள்ளடங்களாக 35 ஓட்டங்களையும், நிபுனி ஹன்சிக்கா 43 பந்துகளை சந்தித்து 4 பவுண்டரிகள் உள்ளடங்களாக 32 ஓட்டங்களையும், சாமரி பொல்கம்பெல 47 பந்துகளிற்கு 5 பவுண்டரிகள் உள்ளடங்களாக 33 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில், இலங்கை மகளிர் அணியினை கட்டுப்படுத்த உதவிய டேனியல் ஹசெல் 10 ஓவர்களை வீசி 38 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுக்களையும், லாரா மார்ஸ் 35 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டுக்களையும், பெத் லங்ஸ்ட்டன், நட்டாலி ஸ்க்கீவர், டேனியல் வியட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இங்கிலாந்து மகளிர் அணி முன்னிலை வகிக்கும் இந்த தருணத்தில் இரண்டு அணிகளும் மோதும் மூன்றாவது ஒரு நாள் போட்டி எதிர்வரும் 15ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகின்றது.
போட்டி சுருக்கம்
இங்கிலாந்து மகளிர் அணி: 295/10(50) – ஹீத்தர் நைட் 53(58), நட்டாலி ஸ்க்கீவர் 51(27), இனோக்கா ரணவீர 48/3(10), அமா காஞ்சனா 49/3(10)
இலங்கை மகளிர் அணி: 173/10(48.5) – ஹாசினி பெரேரா 35(90), சாமரி பெல்கம்பொல 33(47), டேனியல் ஹசேல் 38/3(10), லாரா மார்ஸ் 35/2(10)
போட்டி முடிவு – இங்கிலாந்து மகளிர் அணி 122 ஓட்டங்களால் வெற்றி