மகளிர் உலகக் கிண்ணத்திற்கான குழு நிலைப்போட்டிகள் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்றது. இதில் இன்று நிறைவடைந்த இலங்கை மகளிர் அணி மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், இலங்கை மகளிர் அணியை 7 விக்கெட்டுகளால் வீழ்த்தி இங்கிலாந்து தொடரில் முன்னேறியுள்ளது.
டான்டன் கவுண்டி மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவி இனோகா ரணவீர முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்தார்.
நாணய சுழற்சி முடிவுகளிற்கு அமைவாக மைதானம் விரைந்த இலங்கை மகளிர் அணி, மெதுவான ஆரம்பம் ஒன்றினை வெளிக்காட்டியிருந்தது.
இலங்கை மகளிர் அணியின் முதல் விக்கெட்டாக, இங்கிலாந்தின் வலது கை வேகப் பந்துவீச்சாளரான நட்டாலி ஸ்க்கீவர் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனை நிப்புனி ஹன்சிக்காவினை 17 ஓட்டங்களுடன் ஓய்வறைக்கு அனுப்பியிருந்தார்.
இதனையடுத்து, இலங்கை சார்பாக துடுப்பாட வந்த சமரி அட்டபத்து வெறும் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். இதனால், அவுஸ்திரேலிய மகளிர் அணியுடனான போட்டி போன்று இந்த போட்டியிலும் சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த சமரி அனைவரிற்கும் ஏமாற்றம் அளித்திருந்தார்.
எனினும், மற்றைய ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனை ஹசினி பெரேரா மற்றும் வலது கை துடுப்பாட்ட வீராங்கனை சஷிகலா சிறிவர்தன ஆகியோர் சற்று நிதானமாக ஆடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.
இதில், ஹசினி பெரேரா 63 பந்துகளில் 6 பவுண்டரிகள் அடங்கலாக 46 ஓட்டங்களையும் சஷிகலா சிறிவர்தன 47 பந்துகளில் 33 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.
லக்ஷன் சந்தகனின் மாய சுழலின் பின்னணியில் இருப்பது என்ன?
தொடர்ந்து, மத்திய வரிசையில் மந்த கதியில் துடுப்பாடிய இலங்கை மகளிர் அணி வீராங்கனைகளில் அமா காஞ்சனாவைத் தவிர யாரும், முப்பது ஓட்டங்களைக் கூட தாண்டியிருக்கவில்லை.
இதனால், முடிவில் இலங்கை மகளிர் அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 204 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று துடுப்பாடியிருந்த பின்வரிசை வீராங்கனையான அமா காஞ்சனா 39 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் இரண்டு பவுண்டரிகள் அடங்கலாக 34 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
இங்கிலாந்து மகளிர் அணியின் பந்து வீச்சில், வலதுகை வேகப் பந்துவீச்சாளர் லோரா மார்ஷ் இலங்கையின் 4 விக்கெட்டுகளை 45 ஓட்டங்களுக்கு பதம் பார்த்திருந்ததோடு, நட்டாலி ஸ்க்கீவர் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.
இலங்கை மகளிர் அணியின் முதல் இன்னிங்சினை அடுத்து, வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 205 ஓட்டங்களை 50 ஓவர்களில் பெறுவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து மகளிர் அணி, ஆரம்பத்தில் இரண்டு விக்கெட்டுகளை அமா காஞ்சனாவின் வேகத்திற்கு பறிகொடுத்திருந்தது.
எனினும், மூன்றாம் விக்கெட்டிற்காக ஜோடி சேரந்த இங்கிலாந்து மகளிர் அணியின் தலைவி ஹீத்தர் நைட் மற்றும் சாரா டெய்லர் ஆகியோர் மிகவும் சாதுர்யமான அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தி 148 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்தனர்.
இதனால், 30.2 ஓவர்களில் இங்கிலாந்து மகளிர் அணி 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 206 ஓட்டங்களுடன் வெற்றி இலக்கினை அடைந்தது.
இதில், இங்கிலாந்து மகளிர் அணியின் அணித் தலைவி ஹீத்தர் நைட் 76 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 82 ஓட்டங்களையும், ஆட்டமிழக்காமல் நின்றிருந்த சாரா டெய்லர் 67 பந்துகளில் 11 பவுண்டரிகள் அடங்கலாக 74 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.
இலங்கை மகளிர் அணியின் பந்து வீச்சில், அமா காஞ்சனா 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், சமரி அட்டபத்து ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றியிருந்தனர்.
இம்முறை மகளிர் உலகக் கிண்ணத்தில், இலங்கைக்கு இது மூன்றாவது தொடர் தோல்வியாகும். இலங்கை அணியானது இத்தொடரில் அடுத்ததாக இந்திய மகளிர் அணியை ஜூலை மாதம் 5 ஆம் திகதி எதிர்கொள்கின்றது.
போட்டியின் சுருக்கம்
இலங்கை – 204/8 (50) – ஹசினி பெரேரா 46(63), சஷிகலா சிறிவர்தன 33(47), அமா காஞ்சனா 34*(39), லோரா மார்ஷ் 45/4(10), நட்டாலி ஸ்க்கீவர் 32/2(8)
இங்கிலாந்து – 206/3 (30.2) – ஹீத்தர் நைட் 82(76), சாரா டெய்லர் 74*(67), அமா காஞ்சனா 38/2(6)
முடிவு – இங்கிலாந்து மகளிர் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி