சுற்றுலா இலங்கை மற்றும் அயர்லாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப்புக்கான இந்த தொடரின் முதல் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இலங்கை அணிக்கு வழங்கியது.
T20I தொடரிலிருந்து விலகியிருந்த சமரி அதபத்து ஒருநாள் தொடரில் களமிறங்கியிருந்தார். எனினும் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
ஊக்க மருந்து பாவித்த குற்றச்சாட்டில் தடையினைப் பெறும் டிக்வெல்ல
எனினும் இளம் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனையான விஷ்மி குணரத்ன துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க தொடங்கியிருந்தார். இவர் ஹர்சிதா சமரவிக்ரம மற்றும் ஹாசினி பெரேரா ஆகியோருடன் சிறந்த இணைப்பாட்டங்களை பகிர்ந்தார்.
இதில் ஹாசினி பெரேராவுடன் 122 ஓட்டங்களை இணைப்பாட்டமாக விஷ்மி குணரத்ன பகிர்ந்ததுடன், தன்னுடைய கன்னி ஒருநாள் சதத்தையும் பதிவுசெய்தார். இவர் 98 பந்துகளில் 101 ஓட்டங்களை விளாசியதுடன், ஹாசினி பெரேரா 46 ஓட்டங்களை பெற்று அரைச்சதத்தை தவறவிட்டார்.
இவர்கள் இருவரை தவிர்த்து ஏனைய வீராங்கனைகள் துடுப்பாட்ட ஆரம்பங்களை பெற்றுக்கொண்ட போதும், பாரிய ஓட்டங்களுக்கு செல்ல முடியவில்லை. எனவே 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 260 ஓட்டங்களை இலங்கை அணி பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் ஒர்லா பிரெண்டெர்கெஸ்ட் 3 விக்கெட்டுகளை அதிகபட்சமாக வீழ்த்தினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி ஆரம்பம் முதல் சிறப்பாக ஓட்டங்களை குவிக்க தொடங்கியது. முதல் விக்கெட் 20 ஓட்டங்களுக்கு இழக்கப்பட்ட போதும், மத்தியவரிசையில் களமிறங்கிய ஒர்லா பிரெண்டெர்கெஸ்ட் மறுமுனையில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஒர்லா பிரெண்டெர்கெஸ்ட் ஒரு பக்கத்தில் தனியாளாக ஓட்டங்களை குவிக்க ஏனைய வீராங்கனைகள் அவருக்கான பங்களிப்புகளை வழங்கினர். இறுதிவரை ஆட்டமிழக்காமல் ஓட்டங்களை குவித்த ஒர்லா பிரெண்டெர்கெஸ்ட் அயர்லாந்து அணியின் வெற்றியை இலகுவாக்கினார்.
சிட்னி தண்டர் அணியுடன் மீண்டும் இணையும் சமரி அதபத்து!
இதில் இலங்கை அணியின் களத்தடுப்பில் பிடியெடுப்புகள் மற்றும் ரன்-அவுட் வாய்ப்புகள் தவறவிடப்பட அதனை பயன்படுத்திக்கொண்ட அயர்லாந்து அணி சற்று தடுமாற்றங்களை எதிர்கொண்டாலும் 49.2 ஓவர்கள் நிறைவில் வெற்றியிலக்கை அடைந்தது.
இதில் ஆரம்பம் முதல் சிறப்பாக ஆடிய ஒர்லா பிரெண்டெர்கெஸ்ட் 107 பந்துகளில் 10 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 122 ஓட்டங்களை விளாசினார். இவருக்கு அடுத்தப்படியாக ஹெமி ஹண்டர் 42 ஓட்டங்களையும், ஷாராஹ் போர்பஸ் 30 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் கவீஷா டில்ஹாரி 54 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதேவேளை முதல் ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்றுள்ள அயர்லாந்து அணி தொடரில் 1-0 என முன்னிலை வகித்துள்ளதுடன், இரண்டாவது ஒருநாள் போட்டி ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<