அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி, அங்கு மூன்று T20I போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் அடங்கிய தொடரில் பங்கேற்கவுள்ளது.
முதன்முறையாக அவுஸ்திரேலியா சென்று இருதரப்பு தொடர் ஒன்றில் விளையாடவுள்ள இலங்கை அணி, நாளை மறுதினம் (22) நாட்டிலிருந்து புறப்படவுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்வது உறுதி
பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைமைகள் சரியாக இருப்பது உறுதி செய்யப்பட்…
இரண்டு அணிகளுக்கும் இடையில் நடைபெறவுள்ள மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரானது ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப்புக்கான போட்டித் தொடராக அமையவுள்ளது. ஒருநாள் போட்டிகள் மூன்றும் பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளதுடன், T20I போட்டிகள் அனைத்தும் சிட்னியில் நடைபெறவுள்ளது.
இலங்கை அணியானது 2021ம் ஆண்டு நடைபெறவுள்ள மகளிர் உலகக் கிண்ணத்துக்கான தகுதியை நேரடியாக பெறும் வாய்ப்பை ஏற்கனவே இழந்துள்ளது. இதற்கு முன்னர் நடைபெற்ற ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப்புக்கான 15 போட்டிகளில் ஒரு போட்டியில் மாத்திரமே இலங்கை வெற்றிபெற்றுள்ளது.
முக்கியமாக இந்த தொடரானது 2009ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத்துக்கு பின்னர், அவுஸ்திரேலியாவில் இலங்கை அணி விளையாடவுள்ள முதல் சந்தர்ப்பமாகும். குறிப்பாக, இன்னும் 5 மாதங்களில் அவுஸ்திரேலியாவில் மகளிர் T20I உலகக் கிண்ணம் நடைபெறவுள்ள நிலையில், அங்குள்ள ஆடுகளம் மற்றும் சூழ்நிலைகளை இலங்கை மகளிர் அறிந்துக்கொள்ள சிறந்த வாய்ப்பாகவும் இது பார்க்கப்படுகிறது.
அதேநேரம், அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் T20I போட்டிகளுக்கான 15 பேர்கொண்ட குழாம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஒருநாள் அணிக்கான தலைமைத்துவத்தை சஷிகலா சிறிவர்தன பெற்றுள்ளதுடன், T20I அணியின் தலைவியாக சமரி அதபத்து செயற்படவுள்ளார். அதேநேரம், இந்த குழாத்தின் வீராங்கனைகளுடன் மேலதிக வீராங்கனைகளாக ஐவர் இணைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இந்தப் போட்டித் தொடருக்கு செல்வதற்கு முன்னரான ஊடக சந்திப்பு இன்று நடைபெற்றதுடன், இதில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட ஒருநாள் அணியின் தலைவி சஷிகலா சிறிவர்தன, “இதற்கு முன்னர் அவுஸ்திரேலிய ஆடுகளங்களில் 2009ம் ஆண்டு நான், உதேசிகா பிரபோதனி மற்றும் டிலானி மனோதர ஆகியோர் விளையாடியிருக்கிறோம். எனவே, அந்த அனுபவம் எமக்கு உதவும் என நினைக்கிறோம். அத்துடன், அவுஸ்திரேலிய அணிக்கு கடுமையாக போட்டியை கொடுக்கவும் எண்ணியுள்ளோம்” என்றார்.
அத்துடன், T20I அணியின் தலைவி சமிர அதபத்து குறிப்பிடுகையில், “அடுத்த வருடம் நடைபெறவுள்ள T20I உலகக் கிண்ணத்துக்காக இளம் அணியாக நாம் தயாராகின்றோம். இந்த தொடரும் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. எனவே, நாம் தற்பொழுது சென்று ஆடவுள்ள தொடரானது அவுஸ்திரேலிய ஆடுகளங்கள் தொடர்பில் அறிந்துக்கொள்ள எமக்கு சிறந்த வாய்ப்பாக இருக்கும்” என்றார்.
Photos: Pre-Departure Media Briefing of Sri Lanka Women’s National Team Tour to Australia
இலங்கை அணி இறுதியாக இங்கிலாந்து அணியை தங்களுடைய சொந்த மண்ணில் எதிர்கொண்டிருந்ததுடன், அதன்போது ஒருநாள் மற்றும் T20I தொடர்களை 3-0 என இழந்திருந்தது. அதேபோன்று, அவுஸ்திரேலிய அணிக்கு எதிராகவும் இலங்கை அணி எந்தவொரு வெற்றிகளையும் இதுவரை பதிவுசெய்யவில்லை. இதற்கு முன்னர் விளையாடிய 8 ஒருநாள் மற்றும் 2 T20I போட்டிகள் என அனைத்திலும் இலங்கை அணி தோல்வி கண்டுள்ளமை குறிப்பிடக்கது.
அவுஸ்திரேலியா செல்லவுள்ள இலங்கை மகளிர் ஒருநாள் குழாம்
சஷிகலா சிறிவர்தன, சமரி அதபத்து, ஹர்சித மாதவி, அனுஷ்கா சஞ்சீவனி, ஹன்சிமா கருணாரத்ன, யசோதா மெண்டிஸ், நிலக்ஷி டி சில்வா, டிலானி மனோதர, ஓசாதி ரணசிங்க, இனோகா ரணவீர, சுகந்திகா குமாரி, இனோஷி பெர்னாண்டோ, அச்சினி குலசூரிய, உதேசிகா பிரபோதனி, அமா கான்சனா
மேலதிக வீராங்கனைகள்
ஹன்சி பெரேரா, பிரசாதினி வீரகொடி, சத்யா சந்தீபனி, சச்சினி நிசன்சலா, மதுசிகா மெத்தானந்த
திகதி | போட்டி | Venue | SL Time |
செப்டம்பர் 29 | இலங்கை மகளிர் எதிர் அவுஸ்திரேலியா மகளிர் அணி – முதல் T20I | சிட்னி | 10:00 AM |
செப்டம்பர் 30 | இலங்கை மகளிர் எதிர் அவுஸ்திரேலியா மகளிர் அணி, இரண்டாவது T20I | சிட்னி | 2:30 PM |
ஒக்டோபர் 02 | இலங்கை மகளிர் எதிர் அவுஸ்திரேலியா மகளிர் அணி, மூன்றாவது T20I | சிட்னி | 9:30 AM |
ஒக்டோபர் 05 | இலங்கை மகளிர் எதிர் அவுஸ்திரேலியா மகளிர் அணி, முதல் ஒருநாள் போட்டி | பிரிஸ்பேன் | 5:30 AM |
ஒக்டோபர் 07 | இலங்கை மகளிர் எதிர் அவுஸ்திரேலியா மகளிர் அணி, இரண்டாவது ஒருநாள் போட்டி | பிரிஸ்பேன் | 5:30 AM |
ஒக்டோபர் 09 | இலங்கை மகளிர் எதிர் அவுஸ்திரேலியா மகளிர் அணி, மூன்றாவது ஒருநாள் போட்டி | பிரிஸ்பேன் | 5:30 AM |
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க