இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி கடந்த செப்டம்பர் மாதம் அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியுடனான ஒரு நாள் போட்டித் தொடரில் படுதோல்வியடைந்தது.
தொடர் தோல்விகளால் துவண்ட இலங்கை மகளிர் அணியுடன் நான்கு ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து மகளிர் அணி இலங்கை வந்திருக்கின்றது. குறித்த தொடரின் முதல் போட்டி இன்று SSC மைதானத்தில் நடைபெறுகிறது.
15 பேர் கொண்ட இங்கிலாந்து மகளிர் அணியை ஹீத்தர் நைட் வழிநடத்தும் அதேநேரம், இலங்கை மகளிர் அணிக்கு இனோகா ரனவீர தலைமை தாங்குகின்றார். சர்வதேச போட்டிகளில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ள இலங்கை மகளிர் அணிக்கு இத்தொடரில் வெற்றி பெற்றுக்கொள்வது முக்கியமாக இருப்பதோடு பாரிய சவாலாகவும் இருக்கிறது.
அதேநேரத்தில், உலகக் கிண்ண தகுதிச் சுற்றுக்கான போட்டிகளில் தமக்கான மூன்று ஒருநாள் போட்டிகள் மீதமுள்ள நிலையில், அதில் ஒரு போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் இங்கிலாந்து அணி, அடுத்த வருடம் இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் மகளிர் கிரிக்கெட் உலக கிண்ணத்துக்கு தகுதி பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளும்.
இங்கிலாந்து அணி, இறுதியாக மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணியுடனான 5 ஒருநாள் போட்டிகளை கொண்ட தீர்க்கமான தொடரில் 3-2 என்ற கணக்கில் வெற்றியீட்டியது. இந்நிலையிலேயே இலங்கை அணியுடனான போட்டியிலும் வெற்றி பெறும் நோக்கில் அவ்வணி களமிறங்கவுள்ளது.
இங்கிலாந்து – இலங்கை மகளிர் அணியின் தொடர் குறித்த ஊடக சந்திப்பு புகைப்படங்கள்
அதே சமயத்தில் இலங்கை மகளிர் அணி, சொந்த மண்ணில் இப்போட்டிகளை எதிர்கொண்டாலும் கடந்த செப்டம்பர் மாதம் அவுஸ்திரேலியாவுடனான நான்கு ஒரு நாள் போட்டிகள் மற்றும் T20 போட்டிகளில் படுதோல்வியடைந்தமையினால் இப்போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இத்தொடர் குறித்து நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அவுஸ்திரேலிய அணியுடனான தோல்வி குறித்து அணித் தலைவி இனோகா ரனவீர கருத்து தெரிவிக்கும்பெழுது,
”நாம் தோல்வியுற்று ஏமாற்றமளித்ததை ஏற்றுக்கொள்கிறோம். அதேநேரம் தோல்விகளில் தொடர்ந்துகொண்டிருக்காமல் எதிர்வரும் போட்டிகளில் சவால்களை எதிர்நோக்கி ஒரே அணியாக வெற்றி கொள்ள எதிர்பார்த்துள்ளோம்.
கடந்த மூன்று வாரங்களாக கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டோம் கூடிய ஓட்டங்களை பெற்று இங்கிலாந்து அணியை சவாலுகுட்படுத்துவோம். இதற்காக நாங்கள் எங்களை தயார் செய்துள்ளோம்” என்று கூறினார்.
முதல் தடவையாக அணித்தலைவியாக விளையாடுவது குறித்து என்ன உணருகின்றீர்கள் என்று கேட்டதற்கு, ”அணியில் விளையாடும் அனைவரும் தலைவர்களே, நான் பந்து வீசும்போது நானே தலைவர், அதனால் சிறந்த முறையில் பந்து வீசுவேன். அதேபோல், ஏனைய வீராங்கனைகளும் விளையாடும்போது அவர்களும் அணியின் தலைவர் போன்று சிறப்பாக செயல்பட வேண்டும். இப்போட்டிகளில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம். வெற்றி பெறுவது எமது பொறுப்பாகும். எங்களது முழு பலத்தையும் பிரயோகித்து வெற்றி பெற முயற்சிப்போம்” என்று மேலும் தெரிவித்தார்.
இலங்கை மகளிர் அணி
இனோகா ரனவீர (தலைவி), பிரசாதினி வீரக்கொடி (துணைத் தலைவி), டிலானி மனோதரா, நிலக்ஷி சில்வா, அமா கான்ஷனா, ஹசினி பெரேரா, ஷாமரி பொல்கம்பொல, ஷாமரி அத்தபத்து, நிபுனி ஹன்சிகா, சிறிபாலி வீரக்கொடி, சுகன்திக குமாரி, ஒஷாதி ரனசிங்க, ஹன்சிம கரனாரத்ன, அஷினி குலசூரிய
ஏனைய வீராங்கனைகள் – இனோஷி பெர்னாண்டோ, லசன்தி மதுஷனி, அனுஷ்கா சன்ஜீவனி மற்றும் மல்ஷாஷிஹானி
இங்கிலாந்து மகளிர் அணி
ஹீத்தர் நைட் (அணித் தலைவி), தம்மி போமோன் கேத்ரீன் பிரன்ட், ஜோர்ஜியா எல்விஸ், ஜென்னி கன், அலெக்ஸ் ஹார்ட்லி, டேனியல் ஹஸல், ஆமி ஜோன்ஸ் (விக்கெட் காப்பாளர்), பெத் லங்ஸ்தன், லாரா மார்ஷ், நடாலி சீவர், லாரன் வின்பீல்ட், பிரான் வில்சன், டேனியல் யாட்
பயிற்சி முகாமிற்கான ஏனைய வீரர்கள்
ஜோர்ஜியா ஆடம்ஸ், கேட் கிராஸ், ஆலிஸ் டேவிட்சன் ரிச்சர்ட்ஸ், சோபியா டன்க்லி, சோஃபி ஏக்லேஸ்டன், ஜோர்ஜியா ஹென்னெச்சி, ஹன்னா ஜோன்ஸ், எம்மா லாம்ப், ப்ரயோனி ஸ்மித்.
போட்டிகள் இடம்பெறும் தினங்கள்
1ஆவது ஒருநாள் போட்டி – நவம்பர் 09ஆம் திகதி காலை 10 மணி – SSC மைதானம்
2ஆவது ஒருநாள் போட்டி – நவம்பர் 12ஆம் திகதி காலை 10 மணி – பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானம்
3ஆவது ஒருநாள் போட்டி – நவம்பர் 15ஆம் திகதி – காலை 10 மணி – பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானம்
4ஆவது ஒருநாள் போட்டி – நவம்பர் 17ஆம் திகதி – காலை 10.00மணி – பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானம்