ஜிம்பாப்வேயில் ஒழுங்கு செய்யப்பட்ட மகளிர் உலகக் கிண்ண தகுதிகாண் தொடர் கொவிட்-19 வைரஸின் புதிய திரிபு (New Variant) ஏற்படுத்திய அச்சம் காரணமாக இரத்துச் செய்யப்பட்டதனை அடுத்து, இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 2022ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கிண்ணத்தொடரில் விளையாடும் வாய்ப்பினை துரதிஷ்டவசமாக இழந்திருக்கின்றது.
>>இலங்கை – மேற்கிந்திய தீவுகள் இடையிலான மகளிர் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டி ஒத்திவைப்பு
நியூசிலாந்தில் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தொடரின் எஞ்சிய மூன்று அணிகளையும் தெரிவு செய்கின்ற நோக்கில், எட்டு நாடுகள் பங்குபெறும் மகளிர் உலகக் கிண்ணத்தின் தகுதிகாண் தொடரானது ஜிம்பாப்வேயில் ஒழுங்கு செய்யப்பட்டு தொடரின் போட்டிகள் சிலவும் நடைபெற்றிருந்தன.
இவ்வாறான நிலையில் ஜிம்பாப்வே அமைந்திருக்கும் இடமான தெற்கு ஆபிரிக்காவில் கொவிட்-19 வைரஸின் புதிய திரிபு வேகமாக பரவி வருவதனை அடுத்து, இந்த தொடர் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தினால் (ICC) உடனடியாக இரத்துச் செய்யப்பட்டிருப்பதுடன், இந்த தொடரில் பங்குபற்றிய அணிகளான பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகியவை 2022ஆம் ஆண்டின் உலகக் கிண்ணத்தொடருக்கு, ஒருநாள் போட்டிகளுக்கான மகளிர் கிரிக்கெட் அணி தரவரிசையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதில் பங்களாதேஷ் மகளிர் அணிகளுக்கான ஒருநாள் தரவரிசையில் 5ஆம் இடத்திலும், பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகியவை முறையே 7ஆம், 8ஆம் இடங்களிலும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
>>அபுதாபி T10 லீக்கில் கலக்கும் வனிந்து ஹஸரங்க
இந்நிலையில் இந்த தொடரில் குழு A இல் போட்டியிட்ட அயர்லாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகள் 2022ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கிண்ணத்தொடரில் விளையாடும் வாய்ப்பினை, ஒருநாள் மகளிர் அணி தரவரிசையில் முறையே 9ஆம், 10ஆம் இடங்களில் காணப்பட்டமையினால் இழந்திருக்கின்றன.
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி, இந்த தகுதிகாண் தொடரில் தமது முதல் போட்டியில் நெதர்லாந்திற்கு எதிராக இலகுவாக வெற்றியொன்றினைப் பதிவு செய்திருந்ததோடு, இலங்கை இன்று தமது அடுத்த போட்டியில் மேற்கிந்திய தீவுகளுடன் விளையாடவிருந்த நிலையில் குறித்த போட்டி இலங்கை மகளிர் அணியில் வீராங்கனைகள் சிலருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்ட காரணத்தினால் இரத்துச் செய்யப்பட்டிருந்தது.
எனினும் அடுத்த மகளிர் உலகக் கிண்ணத்திற்கு நேரடித்தகுதி பெறும் அணிகளை தெரிவு செய்வதற்காக 2022 தொடக்கம் 2025 வரையிலான காலப்பகுதியில் நடைபெறவுள்ள, மூன்றாவது பருவகாலத்திற்கான ICC இன் மகளிர் சம்பியன்ஷிப்பிற்கு அயர்லாந்து அணியுடன் இணைந்து இலங்கை தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது. மொத்தம் 10 அணிகள் ஆடவுள்ள இந்த சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை, அயர்லாந்து ஆகிய நாடுகளுடன் இணைந்து 2022ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கிண்ணத்தொடரில் பங்கேற்கின்ற அணிகளும் (அவுஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, பங்களாதேஷ், பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள்) தெரிவு செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை மகளிர் 2022ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கிண்ணத்தொடர் அடுத்த ஆண்டின் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் (நியூசிலாந்தில்) நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<