பங்கபந்து கபடி சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம்

Bangabandhu Cup International Kabaddi Tournament 2022

191

பங்களாதேஷில் நடைபெற்ற பங்கபந்து கபடி சம்பியன்ஷிப் தொடரில் வரவேற்பு நாடான பங்களாதேஷ் அணி சம்பியனாகத் தெரிவாக, லீக் சுற்றில் அதிக புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட இலங்கை அணி வெண்கலப் பதகத்தை சுவீகரித்துக் கொண்டது.

பங்கபந்து சர்வதேச கபடி சம்பியன்ஷிப் தொடர் பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் கடந்த 16ஆம் திகதி ஆரம்பமாகியது. இம்முறை போட்டித் தொடரில் பங்களாதேஷ், இலங்கை, இங்கிலாந்து, கென்யா, நேபாளம், ஈராக், மலேஷியா மற்றும் இந்தோனேஷியா உள்ளிட்ட எட்டு நாடுகள் பங்குபற்றின.

இந்தப் போட்டித் தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் மலேஷியா மற்றும் இங்கிலாந்து அணிகளை வீழ்த்திய இலங்கை அணி, 3ஆவது போட்டியில் நடுவரின் தவறான தீர்ப்பு மற்றும் புள்ளிகளைப் பதிவேற்றுவதில் இடம்பெற்ற தவறுகளால் பங்களாதேஷிடம் 2 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது.

எனினும், அரை இறுதிப் போட்டியில் பிரபல கென்யாவிடம் 49க்கு 29 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதன்படி, லீக் சுற்றில் அதிக புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட இலங்கை அணிக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது.

இறுதியாக கடந்த ஆண்டு நடைபெற்ற பங்கபந்து கபடி சம்பியன்ஷிப் தொடரிலும் இலங்கை அணி வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே, இந்தப் போட்டித் தொடரின் லீக் சுற்றில் இலங்கை அணி விளையாடிய 3 போட்டிகளிலும் ஆட்டநாயகன் விருதினை தட்டிசென்றது.

இதில் மலேஷியா மற்றும் பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டியில் அம்பாறை மதீனா விளையாட்டுக் கழகத்தின் நட்சத்திர வீரர் அஸ்லம் சஜா ஆட்டநாயகனாகத் தெரிவாக, இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் மட்டக்களப்பைச் சேர்ந்த எல். தனுஷன் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இந்தப் போட்டித் தொடருக்காக பங்களாதேஷ் பயணமாகிய இலங்கை குழாத்தில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆறு வீரர்களும், வட மாகாணத்தைச் சேர்ந்த 2 வீரர்களும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பங்கபந்து சர்வதேச கபடி சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் கென்யாவை 34-31 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்திய பங்களாதேஷ் அணி சம்பியானாகத் தெரிவாகியது.

 >> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<