தென் கொரியா, லெபனானுடன் Defensive முறையில் ஆடவுள்ள இலங்கை அணி

FIFA World cup 2022

283

பிபா கால்பந்து உலகக் கிண்ணத் தொடருக்கான ஆசியப் பிராந்திய அணிகளை தெரிவு செய்யும் பூர்வாங்க தகுதிகாண் சுற்றுத்தொடர் மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான ஆசிய கால்பந்து சம்பியன்ஷிப் தொடருக்கான தகுதிகாண் என்பவற்றில் எஞ்சியுள்ள இரண்டு மோதல்களிலும் இலங்கை அணி தடுப்பாட்ட (Defensive) முறையினையே மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 

இலங்கை தேசிய கால்பந்து அணியின் தயார்படுத்தல் மற்றும் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள உலகக் கிண்ணத் தொடருக்கான ஆசியப் பிராந்திய அணிகளை தெரிவு செய்யும் பூர்வாங்க தகுதிகாண் சுற்றுத்தொடர் மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான ஆசிய கால்பந்து சம்பியன்ஷிப் தொடருக்கான தகுதிகாண் போட்டிகளுக்கான தயார்படுத்தல் குறித்து விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு ZOOM செயலி ஊடாக செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்றது. 

கால்பந்து உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றிலிருந்து விலகும் வடகொரியா

இலங்கை அணி இந்த தகுதிச் சுற்றில் தென்கொரியா, துர்க்மெனிஸ்தான், லெபனான் மற்றும் வட கொரியா ஆகிய அணிகளுடன் குழு H இல் போட்டியிட்டது. இதற்கு முன்னர் இடம்பெற்ற அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ள இலங்கை அணி குழுவுக்கான தரப்படுத்தலில் இறுதி இடத்தில் உள்ளது. 

எனினும், வட கொரிய அணி இந்த தொடரில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளது. எனவே, இலங்கை அணி தமது எஞ்சிய போட்டிகளில் லெபனான் மற்றும் தென் கொரியா அணிகளுடன் மாத்திரமே விளையாடவுள்ளது. இலங்கை அணி மோதும் போட்டிகள் இரண்டும் முறையே ஜுன் மாதம் 5ஆம் மற்றும் 9ஆம் திகதிகளில் தென் கொரியாவின் கொயங் அரங்கில் இடம்பெறவுள்ளன.

இந்த நிலையில், குறித்த ஊடக  சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கும்போதே இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் அமிர் அலஜிக் மற்றும் அணியின் தலைவர் சுஜான் பெரேரா ஆகியோர் தமது ஆட்ட முறைமை குறித்து இவ்வாறு தெரிவித்தனர். 

அணியின் தயார்படுத்தல்கள் குறித்து கருத்து தெரிவித்த தலைமைப் பயிற்றுவிப்பாளர் அமிர் அலஜிக், கொவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் எமது தேசிய அணியின் தயார்படுத்தல்களுக்கு பெரிதும் தடையாக இருந்தது. நாம் வதிவிடப் பயிற்சிகளை மேற்கொண்டாலும் எனது திட்டங்களை முழுமையாக செயற்படுத்துவதற்கு வாய்ப்புக்கள் உரிய முறையில் கிடைக்கவில்லை. எனினும், எமது அணியில் இணைந்துள்ள வெளிநாட்டு லீக்குகளில் ஆடுகின்ற வீரர்களையும் பயன்படுத்தி, எதிர்வரும் போட்டிகளில் தடுப்பாட்ட முறைமையில் விளையாடுவதற்கே நாம் திட்டமிட்டுள்ளோம்” என்றார். 

 கால்பந்து புகைப்படங்கள் 

எனினும், இலங்கையில் கால்பந்து விளையாட்டு மிகவும் மோசமான நிலையில் உள்ளது, இலங்கை வீரர்கள் மிக மோசமான உடற்தகுதி (Fitnees) கொண்டவர்கள், இலங்கையில் சிறந்த ஒரு மைதானம்கூட இல்லை மற்றும் இலங்கையில் இடம்பெற்ற உள்ளூர் கால்பந்து தொடர்கள் திறமையை இனம்காணும் விதத்தில் இடம்பெறவில்லை என்றும் இலங்கை கால்பந்து துறையை விமர்சித்த அமிர் அலஜிக் எதிர்வரும் சாப் கிண்ண தொடருக்கு வெளிநாடுகளில் விளையாடிவரும் ஏனைய இலங்கை வீரர்களையும் இணைக்க வேண்டும் என்று  தெரிவித்தார்.  

அதேபோன்று, கால்பந்து வீரர்களின் திறமையினை தொழில்நுட்ப முறையில் தரவுகளுடன் இனங்காணும் Catapult கருவி தற்போது அமிர் அலஜிக் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு இலங்கை தேசிய கால்பந்து அணியில் பயன்படுத்தப்படுகின்றது. இதன்மூலம் வீரர்கள் குறித்து அதிக விடயங்கள் அறிந்துகொள்ளப்பட்டுள்ளதாகவும் தலைமைப் பயிற்றுவிப்பாளர் தெரிவித்தார். 

குறித்த ஊடக சந்திப்பின்போது கருத்து தெரிவித்த சுஜான் பெரேரா, அணியில் வெளிநாட்டு லீக்களில் விளையாடும் வீரர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமையினால் பெரிய ஒரு மாற்றத்தை காணலாம் என நம்புவதாகத் தெரிவித்தார். 

அங்கு மேலும் கருத்து தெரிவித்த சுஜான், நாம் அடுத்து மோதவுள்ள இரண்டு அணிகளும் பிபா தரவரிசையில் உயர் நிலையில் உள்ள இரண்டு அணிகள். எனவே, அணியின் பின்கள வீரர்களுக்கு அதிக பொறுப்பு உள்ளது. அணியென்று பார்க்கும்போது அவர்களது வீரர்களுக்கும் எமக்கும் பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது. 

மாற்றங்களுடன் மீண்டும் பயிற்சிகளை ஆரம்பித்த இலங்கை கால்பந்து அணி

போட்டியின்போது நாம் 70 வீதம் போன்று தடுப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ள வேண்டியது கட்டாயம். எமக்கு நிறைய பொறுப்புகள் தரப்பட்டுள்ளன. எந்த எந்த இடத்தில் வீரர்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

அணியைப் பொருத்தவரை முன்னர் இருந்த அணிகளை விட சற்று பலமான அணியொன்று எம்மிடம் உள்ளது. வீரர்கள் நாட்டுக்காக விளையாட பெரிதும் அர்ப்பணிப்புடன் தயார் நிலையில் உள்ளனர். அடுத்த போட்டிகளில் நாம் வெற்றி பெறுவோம் என்று உறுதியாக நாள் சொல்லவில்லை. எனினும், சிறந்த ஒரு போட்டியைக் கொடுப்போம் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தார். 

தேசிய அணி வீரர்களின் சம்பள விடயம் மற்றும் ஒப்பந்தம் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த சுஜான், அவை குறித்து உரிய தரப்பினரிடம் கதைக்கப்பட்டுள்ளது என்றும் அடுத்த சில மாதங்களில் இதற்கான தீர்வு கிடைக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார். 

 கடந்த வருட ஆரம்பத்தில் இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக கடமைகளை ஆரம்பித்த அமிர் அலஜிக்கிற்கு லெபனான் அணியுடன் இடம்பெறவுள்ள முதல் போட்டியானது, இலங்கை அணியுடனான தனது முதல் சர்வதேசப் போட்டியாகும். இவரது பயிற்றுவிப்பின்கீழ் இலங்கை அணி இதுவரையில் எந்தவொரு சர்வதேச அணியுடனும் பயிற்சி ஆட்டம் ஒன்றையாவது விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<