இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையில் சென். லூசியாவில் நடைபெற்று வருகின்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தின் போது இலங்கை அணியின் வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டது.
இதனையடுத்து அதிருப்தி அடைந்த இலங்கை வீரர்கள் குறித்த போட்டியை புறக்கணிப்பதற்கு தீர்மானித்திருந்த போதிலும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலையீட்டுடன் அந்த முயற்சி போராட்டமாக மாறி மீண்டும் போட்டிகளை நடத்துவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்ததாக க்ரிக் பஸ் இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேற்கிந்திய தீவுகளுக்கு கடின இலக்கொன்றை நிர்ணயிக்கும் முயற்சியில் இலங்கை
சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் …
இந்நிலையில், இரண்டாவது நாள் போட்டி தொடர்பான வீடியோ காட்சிகளை ஆய்வு செய்த போட்டி நடுவர்களான அலீம் தாரும், இயென் கவுல்டும் பந்தை மர்மபொருளால் தேய்த்து இருப்பதற்கான அடையாளத்தை கண்டுபிடித்தனர்.
இந்த தகவலை இலங்கை அணி முகாமைத்துவத்துக்கு தெரிவித்த நடுவர்கள் மூன்றாவது நாள் போட்டிக்கு முன்பாக வேறு பந்து பயன்படுத்தப்படும் என்று கூறினர். அதற்காக மேற்கிந்திய தீவுகளுக்கு மேலதிகமாக 5 ஓட்டங்களையும் வழங்குவதாக அறிவித்தனர்.
இதனால் அதிருப்தி அடைந்த இலங்கை வீரர்கள் மூன்றாவது நாள் ஆட்டத்திற்கு மைதானத்துக்கு வரவில்லை. நடுவர்கள் மற்றும் துடுப்பாட்ட வீரர்கள் மைதானத்துக்கு வருகை தந்த போதிலும், இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க, முகாமையாளர் அசங்க குருசிங்க மற்றும் அணித் தலைவர் தினேஷ் சந்திமால் ஆகியோர் உடைமாற்றும் அறையில், போட்டி மத்தியஸ்தர் ஜவஹல் ஸ்ரீநாத்துடன் காரசாரமான வாக்குவாததத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து, தமக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்த இலங்கை வீரர்கள் பின்னர் மைதானத்துக்கு வருகைதந்த போதிலும், சர்வதேச கிரிக்கெட் விதிமுறைகளுக்கு அமைய பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக மேற்கிந்திய தீவுகளுக்கு மேலதிகமாக ஐந்து ஓட்டங்கள் பெனால்டியாக வழங்கப்பட்டதாக போட்டி மத்தியஸ்தர் அறிவித்தார். இதனையடுத்து மீண்டும் அதிருப்தி கொண்ட இலங்கை வீரர்கள் மைதானத்துக்குள்ளேயே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பந்தை சேதப்படுத்திய விடயத்தில் தினேஷ் சந்திமால் மீது குற்றத்தை நிரூபித்துள்ள ஐ.சி.சி.
மேற்கிந்திய தீவுகளுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பந்தின் தன்மையை …
எனினும், பின்னர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் தொலைபேசியில் சந்திமால், சந்திக்க ஹத்துருசிங்க மற்றும் அணியின் முகாமையளார் அசங்க குருசிங்க ஆகியோர் கலந்துரையாடிய பின்னர் சுமார் 2 மணி நேரத்துக்கு பின்னர் போட்டி ஆரம்பமானது.
நீதிமன்ற தடை உத்தரவின் காரணமாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தல் பிற்போடப்பட்டுள்ள இந்த தருணத்தில், இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் அதன் அனைத்து பொறுப்புக்களும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் செயற்பட்டு வருகின்றது. தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சரான பைசர் முஸ்தபா ஜனாதிபதி சட்டத்தரணி ஆவார்.
இந்நிலையில், அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இலங்கை கிரிக்கெட் சபை,
‘இதுவொரு தேவையற்ற குற்றச்சாட்டு. எமது அணி வீரர்கள் எந்தவித தேவையற்ற சம்பவத்திலும் ஈடுபடவில்லை. இதனால் வீரர்களை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் கிரிக்கெட் சபை மேற்கொள்ளும். இதேவேளை இந்த போட்டியில் இலங்கை அணி விளையாடும் என்றாலும், குற்றச்சாட்டுக்கெதிரான போராட்டம் அமைதியாக இடம்பெறும்‘ எனவும் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் சனிக்கிழமை போட்டி நிறைவுபெற்ற பின்னர் வீடியோ ஆதாரங்களை ஆராய்ந்த நடுவர் குழாம் மற்றும் போட்டி மத்தியஸ்தர்கள், இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமால் பந்தை சேதப்படுத்தவில்லை என தெரிவித்திருந்தாலும், பந்தை சேதப்படுத்த முற்பட்டார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
பந்து சேதப்படுத்தல் சர்ச்சையைத் தாண்டி மூன்றாம் நாள் ஆதிக்கம் இலங்கை வசம்
சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே சென். லூசியா நகரில் …
அத்துடன், இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது இலங்கை வீரர் தனஞ்சய டி சில்வா பந்தின் தன்மையை மாற்ற முயற்சித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டதோடு , போட்டி நடுவர் இயென் கவுல்ட்டும் பந்தை பரிசோதித்துப் பார்த்தார். பிறகு வளையத்தை வைத்து பந்தின் வடிவத்தை சோதனை செய்த நடுவர்கள் இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமாலையும் ஆலோசனைக்கு அழைத்துப் பேசினர்.
ஆனால், பந்தின் தன்மையை அணித் தலைவர் சந்திமால் தான் ஏதோ இனிப்பு வகையொன்றைப் பயன்படுத்தி மாற்றியிருப்பதாக ஐ.சி.சி நேரடியாக குற்றம் சுமத்தியுள்ளது. போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தின் இறுதித் தருவாயில், சந்திமால் இனிப்பு வகையொன்றை தனது காற்சட்டை பையிலிருந்து எடுத்து, வாயில் இட்டு சாப்பிட்டுள்ளார். எனினும் பந்தில் குறித்த இனிப்பு வகை தடவப்படுவதற்கு முன்னர் நடுவர்கள் குறித்த விடயத்தினை கண்டுபிடித்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.
இதனால் சந்திமாலின் மீது பந்தை சேதப்படுத்த முயன்றதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. எனினும் இது இரண்டாம் நிலை குற்றம் என்பதால், சந்திமாலுக்கு போட்டிக்கட்டணத்தில் 100 அல்லது 50 சதவீதம் அபராதம் விதிக்கப்படலாம். இல்லையென்றால் அவருக்கு குற்றப்புள்ளிகளை வழங்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், நேற்றைய நான்காவது நாள் போட்டி நிறைவடைந்த பிறகு இடம்பெற்ற விசாரணையில் கலந்துகொண்டிருந்த தினேஷ் சந்திமால், பந்தின் தன்மையை மாற்றுவதற்கு மேற்கொண்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்துள்ளார்.
எனினும், இதுதொடர்பான முழுமையான விசாரணை அறிக்கைகள் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டி நிறைவடைந்த பின்னர்தான் அறிவிக்கப்படும் என ஐசிசி சுட்டிக்காட்டியுள்ளது.
எதுஎவ்வாறாயினும், குறித்த விடயத்துக்காக இலங்கை அணி போட்டியை புறக்கணித்து இருந்தால் போட்டி நடுவர்களின் ஏகோபித்த முடிவுக்கு அமைய மேற்கிந்திய தீவுகளுக்கு வெற்றியை வழங்கியிருக்கலாம்.
முன்னதாக கடந்த 2006ஆம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைறெ;ற டெஸ்ட் போட்டியின் போது பாகிஸ்தான் அணி பந்தை சேதப்படுத்தியதாக போட்டி நடுவர் டெரல் ஹெயாரால் குற்றச்சாட்டப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இன்ஸமாம் உல் ஹக் தலைமையிலான பாகிஸ்தான் அணி களமிறங்க மறுத்ததைத் தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு வெற்றி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…