இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் இன்று ஆரம்பித்துள்ள வலைப்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரில் தங்களுடைய முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொண்டிருந்த இலங்கை அணி 79 – 49 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியை தழுவியுள்ளது.
லிவர்பூல் நகரின் எம்&எஸ் வங்கி அரங்கத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியானது ஆரம்பம் முதல் விறுவிறுப்பாக அமைந்திருந்தது. உலக வலைப்பந்தாட்ட தரவரிசையில் 18வது இடத்திலிருக்கும் இலங்கை அணி 13வது இடத்திலிருக்கும் ஜிம்பாப்வே அணிக்கு ஆரம்பத்தில் சமபலமான போட்டியை கொடுத்தது.
உலகின் அதிசிறந்த வீராங்கனை தர்ஜினியின் வாழ்க்கைப் பயணம்
இலங்கையின் வலைப்பந்து நாமத்தை…
எனினும், முதற்தர வீராங்கனைகளை உள்ளடக்கிய ஜிம்பாப்வே அணி முதற்பாதியில் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தியிருந்தது. முதல் 5 புள்ளிகள் சமனிலையில் பகிரப்பட்ட போதும், அதன் பின்னர் ஜிம்பாப்வே அணி முன்னேறி, முதல் கால் பகுதியை 19 – 14 என தங்கள் வசப்படுத்தியது.
அதன் பின்னர் ஆரம்பித்த இரண்டாவது காற்பகுதியில் ஜிம்பாப்வே அணிக்கு நெருக்கடியை கொடுக்கத் தொடங்கிய இலங்கை அணி சற்று புள்ளிகளில் முன்னேற்றங்களை கண்டு, 21-22 என்ற நிலையை நெருங்கியது. ஆனாலும், இரண்டாவது காற்பகுதியின் பிற்பகுதியில் சிறப்பாக ஆடிய ஜிம்பாப்வே அணி முன்னிலையை 38ஆக அதிகரித்துக்கொள்ள, இலங்கை அணி 29 புள்ளிகளுடன் முதல் பாதியை நிறைவுசெய்துக்கொண்டது.
இதில் முதல் பாதி முழுவதும் கோல் ஷூட்டராக இருந்த தர்ஜினி சிவலிங்கம் மாத்திரமே புள்ளிகளை பெற்றுக்கொடுத்திருந்த நிலையில், குறித்த திட்டத்தை மாற்றியமைத்த இலங்கை அணி, இரண்டாவது பாதியில் கோல் அட்டேக் வீராங்கனையான துலங்கி வன்னித்திலக்கவையும் கோல் பெறும் முயற்சிகளை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர்.
இந்த திட்டம் இலங்கை அணியின் புள்ளிக்குவிப்புக்கு ஏதுவாக அமைய, மூன்றாவது காற்பகுதியில் இலங்கை அணி முதல் இரண்டு காற்பகுதிகளையும் விட சிறப்பாக ஆடியது. இந்த காற்பகுதியில் இலங்கை அணி சவால் கொடுத்த போதும், துரதிஷ்டவசமாக ஜிம்பாப்வே அணி 15-13 என மூன்றாவது காற்பகுதி நிறைவில் முன்னிலைப்பெற்று 53-42 என ஆதிக்கம் செலுத்தியது.
குறித்த மூன்று காற்பகுதிகளிலும் சற்று சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி நான்காவது காற்பகுதியில் முழுமையான பின்னடைவை சந்தித்தது. இந்த காற்பகுதியில் அபாரமாக ஆடிய ஜிம்பாப்வே அணி 26 புள்ளிகளை பெற்றுக்கொள்ள, மறுமுனையில் இலங்கை அணியால் வெறும் 7 புள்ளிகளை மாத்திரமே பெறமுடிந்தது.
இதன் அடிப்படையில், முதல் காற்பகுதியில் 19-14, இரண்டாவது காற்பகுதியில் 19-15, மூன்றாவது காற்பகுதியில் 15-13 மற்றும் நான்காவது காற்பகுதியில் 26-07 என 79-49 என்ற புள்ளிகள் கணக்கில் ஜிம்பாப்வே அணி வெற்றிக்கொண்டது.
இலங்கை அணி சார்பாக அதிகபட்சமாக தர்ஜினி சிவலிங்கம் தனக்கு கிடைத்த 45 வாய்ப்புகளில் 44 புள்ளிகளை பெற்றுக்கொடுத்ததுடன், ஜிம்பாப்வே அணியின் ஜொய்ஸ் தகைட்ஷா தனக்கு கிடைத்த 62 வாய்ப்புகளில் 59 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார்.
இதேவேளை, இலங்கை அணி தங்களுடைய அடுத்தப் போட்டியில் வடக்கு அயர்லாந்து அணியை நாளை (13) எதிர்கொள்ளவுள்ளது.
இன்று (12) நடைபெற்ற ஏனைய போட்டிகளின் முடிவுகள்
- மலாவி எதிர் நியூசிலாந்து – நியூசிலாந்து அணி 64-45 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி
- பார்படோஸ் எதிர் சிங்கபூர் – பார்படோஸ் அணி 69-34 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி
- அவுஸ்திரேலியா எதிர் வடக்கு அயர்லாந்து – அவுஸ்திரேலிய அணி 88-24 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி
- ஜமைக்கா எதிர் பீஜி – ஜமைக்கா அணி 71-18 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி
- தென்னாபிரிக்கா எதிர் ட்ரினிடெட் & டொபேகோ – தென்னாபிரிக்க அணி 40-26 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி
>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<