புதிய திட்டங்களுடன் இந்திய டெஸ்ட் தொடரை எதிர்கொள்ளவுள்ளோம் – தினேஷ் சந்திமால்

1376
chandimal

இலங்கை அணியை எதிர்காலத்தில் வழிநடத்துவதற்கு ஜிம்பாப்வே அணியுடனான வெற்றி முக்கியமானதாக இருப்பதாக இலங்கை அணியின் புதிய டெஸ்ட் அணித் தலைவர் தினேஷ் சந்திமால் குறிப்பிட்டார்.

மெதிவ்சின் பதவி விலகல் இலங்கை கிரிக்கெட் அணியை வளர்ச்சி செய்யாது : சனத் ஜயசூரிய

ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற ஜிம்பாப்வேயுடனான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளால் போராடி வெற்றியீட்டியது. இதன்போது இலங்கை 388 என்ற ஓட்ட இலக்கை எட்டியே வெற்றியைப் பதிவு செய்தது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை அணி அதிகூடிய வெற்றி இலக்கை எட்டிய சந்தர்ப்பமாக இது பதிவானது. இதற்கு முன்னர் பி. சரா மைதானத்தில் 2006 ஆம் ஆண்டு நடந்த தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 352 என்ற ஓட்ட இலக்கை எட்டியதே சாதனையாக இருந்தது.

எனினும் செவ்வாய்க்கிழமை (18) முடிவடைந்த போட்டியில் இலங்கை அணி இந்த இலக்கை எட்டுவதில் கடும் சவாலை சந்தித்தது. ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்கள் முக்கிய விக்கெட்டுகளை குறைந்த ஓட்டங்களுக்கு வீழ்த்தி நெருக்கடி கொடுத்தனர்.

உபுல் தரங்க (27), அணித்தலைவர் தினேஷ் சந்திமால் (15) மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் (22) ஆகியோர் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றனர்.

“ஜிம்பாப்வே அணி தற்போது சிறப்பாக உள்ளது. அவர்களை வீழ்த்துவது இலகுவானதல்ல. எனது அணி வீரர்களின் திறமையை பார்த்து தலைவர் என்ற வகையில் மிக்க மிகிழ்ச்சி அடைகிறேன். நான்காவது இன்னிங்ஸில் இலங்கை அணி பெற்ற அதிகூடிய ஓட்டங்கள் இதுவாகும். இது அணியை முன்னோக்கி அழைத்துச் செல்வதில் சாதகமான ஒன்றாகும்” என்று போட்டிக்கு பின்னர் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை அணித் தலைவர் சந்திமால் குறிப்பிட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான இப்போட்டியில் மேலும் ஒன்றரை தினங்கள் எஞ்சியிருக்கும் நிலையிலேயே இலங்கை அணி சவாலான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடியது. இதன்போது இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் விக்கெட்டை பாதுகாத்துக் கொள்வதற்கு பதில் ஓட்டங்களை குவிப்பதிலேயே ஆர்வம் காட்டினர். இதனால் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன அரைச் சதத்திற்கு ஒரு ஓட்டம் இருக்கும்போதும், சிறப்பாக ஆடிவந்த நிரோஷன் திக்வெல்ல 81 ஓட்டங்களைப் பெற்றிருக்கும் போதும் அவதானமற்ற துடுப்பாட்டத்தால் தமது விக்கெட்டை பறிகொடுத்திருந்தனர்.

இது பற்றி சந்திமால் கூறியதாவது,

“நேற்று (திங்கள்) எமக்கு துடுப்பெடுத்தாட கிடைத்தபோது நாம் எமக்குரிய ஆட்டத்தை விளையாடவே தீர்மானித்தோம். இருக்கும் காலத்தை வைத்து எம்மால் துடுப்பெடுத்தாடி போட்டியை சமநிலை செய்ய கடினமாக இருந்தது. அப்படி ஆடினால் நாங்கள் போட்டியில் தோல்வியை சந்திக்க வேண்டி ஏற்படும்.

 

எனவே தமக்குரிய பாணியில் துடுப்பெடுத்தாட நாம் வீரர்களை அறிவுறுத்தினோம். அணித் தலைவர் என்ற வகையில் தவறுகளுக்கு நான் பொறுப்பு ஏற்கிறேன். எனவே தவறுகள் செய்ய பயப்பட வேண்டாம் என்று நான் வீரர்களை அறிவுறுத்தினேன்” என்றார்.

இலங்கை அணியில் போதிய டெஸ்ட் அனுபவம் அற்ற வீரர்களே அணியின் வெற்றிக்கு உதவினர். மத்திய வரிசையில் நிரோஷன் திக்வெல்ல (81), அசேல குணரத்ன (80) ஆகிய இருவரும் பத்து டெஸ்ட் போட்டிகளில் கூட விளையாடியதில்லை.

இலங்கை அணி ஜிம்பாப்வே அணியுடனான ஒருநாள் தொடரில் தோற்ற பின்னர், அணி என்ற வகையில் பெரும் பின்னடைவுகளை சந்தித்திருந்தது. ஜிம்பாப்வே அணியுடனான டெஸ்ட் போட்டி ஆரம்பிப்பதற்கு மூன்று தினங்கள் இருக்கும்போதே தினேஷ் சந்திமால் இலங்கை டெஸ்ட் அணித் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

“எமக்கு வெற்றி ஒன்றே தேவைப்பட்டிருந்தது. இன்று அது எமக்குக் கிடைத்தது. இன்றைய வெற்றியின் பின்னர் வீரர்கள் நல்ல மனநிலையில் உள்ளனர்” என்று சந்திமால் குறிப்பிட்டார்.

எனினும் இலங்கை அணி அடுத்து சவாலான இந்திய அணியை சந்திக்கவுள்ளது. டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியுடன் இலங்கை அணி சொந்த மண்ணில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் ஜுலை மாதம் 26 ஆம் திகதி ஆரம்பமாகும்.

“இந்தியாவுடனான சுற்றுப்போட்டி கடும் சவாலாக இருக்கும். ஆனால் எம்மிடம் திட்டங்கள் உள்ளன. இந்திய அணியுடன் எவ்வாறு விளையாடுவது என்பது குறித்து நாம் எதிர்காலத்தில் திட்டங்களை வகுப்போம். அணித் தலைவராக ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெறும் மனநிலையை வைத்திருப்பதே எனது இலக்கு. எனவே இந்த திட்டத்தோடு போட்டிக்கு, போட்டி விளையாடுவதே எனது நோக்கமாகும்” என்று சந்திமால் குறிப்பிட்டார்.

டெஸ்ட் தரவரிசையில் ஏழாவது இடத்தில் இருக்கும் இலங்கை அணியைவிடவும் இரண்டு இடங்கள் பின்தங்கி கடைசி இடத்தில் உள்ள கிரேம் கிரீமர் தலைமையிலான ஜிம்பாப்வே அணி இலங்கை அணியுடனான டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் வரை சிறப்பாக ஆடியபோதும் ஒருசில தவறுகளால் தொடரைக் கைப்பற்ற முடியாமல் போனது.

“இலங்கை மண்ணில் ஒருநாள் தொடரில் வெற்றிபெற்று, டெஸ்டிலும் வெற்றியை நெருங்கியது எமது அணியின் சிறப்பான ஆட்டமாக இருந்தது. எனினும் எமக்கு கிடைத்த சில வாய்ப்புகளை தவறவிட்டது ஆட்டம் எம்மிடம் இருந்து பறிபோக காரணமானது. என்றாலும், இலங்கை அணி சிறப்பாக ஆடியது” என்று கிரேம் கிரீமர் குறிப்பிட்டார்.

குறிப்பாக ஜிம்பாப்வே அணியின் விக்கெட் காப்பாளர் ரெஜிஸ் சகப்வா மூன்று ஆட்டமிழப்பு வாய்ப்புகளை தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.