பங்களாதேஷில் நடைபெற்று வரும் முக்கோண ஒரு நாள் தொடரின் நான்காவது போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் ஜிம்பாப்வே அணியினை வீழ்த்தியிருப்பதுடன், தொடரில் முதல் வெற்றியினை பதிவு செய்து இறுதிப் போட்டிக்கான வாய்ப்பினையும் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
சகீப் அல் ஹஸனின் சகலதுறை ஆட்டத்தினால் இலங்கைக்கு படுதோல்வி
பங்களாதேஷில் நடைபெற்று வரும் முக்கோண ஒரு நாள் தொடரில் இலங்கை…
டாக்காவில் தொடங்கிய இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணித் தலைவர் கிரேம் கீரிமர் முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்திருந்தார்.
இந்த முக்கோணத் தொடரில் பங்களாதேஷுடன் வெள்ளிக்கிழமை (17) இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி படுதோல்வியடைந்திருந்தது. இதன் காரணமாக தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பினை உயிர்ப்பாக வைத்திருக்க இலங்கை அணி ஜிம்பாப்வேயுடன் கட்டாயம் வெற்றிபெற வேண்டிய சூழ்நிலையில் இந்த மோதலில் களமிறங்கியிருந்தது.
இன்றைய போட்டிக்கான இலங்கை குழாத்துக்கு சினமன் சுழல் வீரர் லக்ஷான் சந்தகன் அழைக்கப்பட வனிது ஹஸரங்கவுக்கு அணியில் இருந்து ஓய்வளிக்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து இலங்கை அணிக்கெதிராக தம்முடைய இறுதி ஆறு ஒரு நாள் போட்டிகளிலும் நான்கு வெற்றிகளை சுவீகரித்த ஜிம்பாப்வே அணி இப்போட்டியிலும் நல்ல முடிவு ஒன்றினை எதிர்பார்த்தவாறு துடுப்பாட்டத்தினை தொடங்கியது.
ஜிம்பாப்வே அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் நிதானம் கலந்த அதிரடியோடு தமது தரப்புக்கு துவக்கம் ஒன்றினை வழங்கியிருந்தனர். எனினும், இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான திசர பெரேரா சிறப்பான வியூகங்களுடன் செயற்பட்ட காரணத்தினால் ஜிம்பாப்வே அணியின் ஆரம்ப வீரர்களை பெரிய துடுப்பாட்ட இன்னிங்ஸ் ஒன்றை பெற இயலாதவாறு ஓய்வறை அனுப்பினார்.
ஹத்துருசிங்க மாயாஜால வித்தைக்காரர் அல்ல – திசரவின் விளக்கம்
இலங்கை அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளராக வந்துள்ள சந்திக்க…
திசர பெரேரா ஆரம்பத்திலேயே தந்த அழுத்தத்திற்கு லக்ஷான் சந்தகனும் உரம் போட ஜிம்பாப்வே அணி ஒரு கட்டத்தில் 73 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. ஜிம்பாப்வே அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்வரிசை வீரர்களான ஹமில்டன் மசகட்ஷா, சிக்கந்தர் ராசா ஆகிய வீரர்கள் 20 ஓட்டங்களையேனும் தாண்டாது ஓய்வறை நடந்திருந்தனர்.
இப்படியாக தத்தளிப்பில் தவித்த ஜிம்பாப்வே அணியினை மத்திய வரிசை வீரர்களான ப்ரன்டன் டைலர் மற்றும் மால்கோம் வால்லர் ஆகியோர் நான்காம் விக்கெட்டுக்காக சிறந்த இணைப்பாட்டம் (66) ஓன்றினை வழங்கி மீட்டனர். டைலர் இதில் தனது 33ஆவது ஒரு நாள் அரைச் சதத்தினை கடந்திருந்தார்.
இவர்கள் இருவரினதும் விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட ஜிம்பாப்வே மீண்டும் சரிவுப்பாதையில் சென்றது. இதனை தடுக்க ஜிம்பாப்வே அணித் தலைவர் கிரேம் கீரிமர் துடுப்பாட்ட ரீதியாக முயற்சி ஒன்றினை எடுத்த போதிலும் அது பலனளிக்காது போனது. முடிவில் ஜிம்பாப்வே அணி 44 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 198 ஓட்டங்களினைப் பெற்றுக் கொண்டது.
ஜிம்பாப்வே அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக ப்ரன்டன் டைலர் மொத்தமாக 88 பந்துகளுக்கு 6 பெளண்டரிகள் அடங்கலாக 58 ஓட்டங்களை குவித்திருந்ததோடு கீரிமரும் 34 ஓட்டங்களுடன் அணிக்கு வலுச்சேர்த்திருந்தார்.
முன்னேற்றகரமான பந்துவீச்சினை இன்றைய நாளில் வெளிக்காட்டியிருந்த இலங்கை வீரர்களில் திசர பெரேரா 33 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், நுவான் பிரதீப் 3 விக்கெட்டுக்களையும் லக்ஷான் சந்தகன் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.
18 இலங்கை வீரர்களுக்கே ஐ.பி.எல் இறுதி ஏலத்திற்கு வாய்ப்பு
இந்திய கிரிக்கெட் சபையினால் நடத்தப்பட்டு வருகின்ற ஐ.பி.எல் தொடரின்…
இதனையடுத்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 199 ஓட்டங்களை 50 ஓவர்களில் பெறுவதற்கு பதிலுக்கு இலங்கை அணி தமது துடுப்பாட்டத்தினை ஆரம்ப வீரர்களான உபுல் தரங்க, குசல் பெரேரா ஆகியோருடன் துவங்கியது.
இலகு இலக்கு ஒன்றினை எட்டும் இந்தப் பயணத்தில் உபுல் தரங்க வெறும் 17 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார். எனினும், ஏனைய ஆரம்ப வீரரான குசல் பெரேரா, குசல் மெண்டிசுடன் இணைந்து இரண்டாம் விக்கெட்டுக்காக நல்லதொரு இணைப்பாட்டத்தினை (70) கட்டியெழுப்பி இலக்கை நெருங்க முயற்சி மேற்கொண்டிருந்தார்.
இவர்களது இணைப்பாட்டத்துடன் போட்டியின் ஆதிக்கத்தை இலங்கை எடுத்த நிலையில், இந்த இன்னிங்சின் 22ஆவது ஓவரினை வீசிய வேகப்பந்து வீச்சாளர் ப்ளெஸ்ஸிங் முசாரபனி குசல் பெரேராவின் விக்கெட்டினை கைப்பற்றினார். பெரேரா ஆட்டமிழக்கும் போது 4 பெளண்டரிகள் ஒரு சிக்ஸர் அடங்கலாக 49 ஓட்டங்களுடன் அரைச் சதத்தினை தவறவிட்டிருந்தார்.
பெரேராவின் விக்கெட்டினை அடுத்து குறுகிய நேரத்துக்குள் முசராபனி, சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய குசல் மெண்டிசின் விக்கெட்டினையும், புதிய துடுப்பாட்ட வீரராக வந்த நிரோஷன் திக்வெல்லவின் விக்கெட்டினையும் கைப்பற்ற இலங்கை அணி 117 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து பதற்றத்தினை காட்டியிருந்தது. மெண்டிஸ் இப்போட்டியில் 36 ஓட்டங்களை குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
துரித கதியிலான இந்த விக்கெட்டுக்கள் காரணமாக இலங்கை அணிக்கு அழுத்தங்கள் அதிகரித்திருந்தது. இந்த நிலையில் துடுப்பாட வந்த அணித் தலைவர் தினேஷ் சந்திமால் பொறுமையான முறையில் ஓட்டங்கள் சேர்த்தார். சந்திமாலுக்கு அதிரடி துடுப்பாட்ட வீரரான திசர பெரேரா கைகொடுக்க 44.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்த இலங்கை அணி 202 ஓட்டங்களுடன் வெற்றி இலக்கினை அடைந்தது.
FIFA உலகக் கிண்ணத்தை பார்வையிட 1,500 இலங்கையர்களுக்கு வாய்ப்பு
FIFA உலகக் கிண்ண கால்பந்து தொடருக்கான வெற்றிக் கிண்ணத்தினை…
இதில் இலங்கை அணியின் வெற்றியினை சிக்ஸர் ஒன்றுடன் உறுதி செய்த திசர பெரேரா 26 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பெளண்டரி அடங்கலாக 39 ஓட்டங்களுடனும், தினேஷ் சந்திமால் 38 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் நின்றிருந்தனர்.
ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சில் இலங்கை அணிக்கு ஒரு கட்டத்தில் அச்சுறுத்தல் தந்த ப்ளெஸ்ஸிங் முசராபனி 52 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.
போட்டியின் ஆட்ட நாயகன் விருது சகலதுறைகளிலும் அசத்தி இந்த முக்கோண ஒரு நாள் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பினை இலங்கை அணிக்கு தக்கவைத்துக் கொள்ள உதவிய திசர பெரேராவுக்கு வழங்கப்பட்டிருந்தது.
இலங்கை கிரிக்கெட் அணி இந்த சுற்றுத்தொடரில் அடுத்ததாக, பங்களாதேஷ் அணியினை மீண்டும் வரும் 25ஆம் திகதி எதிர்கொள்கின்றது.
ஸ்கோர் விபரம்
முடிவு – இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி