அண்மையில் அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியை வைட் வொஷ் செய்த இலங்கை அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், தமது முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வே அணியினர் மிகவும் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி 373 ஓட்டங்களைக் குவித்தனர். இதனால் அவர்கள் பலோவ் ஒன் முறையில் இருந்து தப்பித்துள்ளனர்.
அதேபோன்று, இந்தப் போட்டியில் இன்னும் இரண்டு நாட்களே மீதமிருக்கின்றமையினால் போட்டி சமநிலையில் முடிவடைவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளன.
நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவடையும்பொழுது, ஜிம்பாப்வே அணியினர் 23 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 88 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர். களத்தில் மவோயோ 41 ஓட்டங்களுடனும் மஸகஸ்டா 33 ஓட்டங்களுடனும் இருந்தனர்.
அந்த வகையில் இலங்கை அணியை விட 449 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்த ஜிம்பாப்வே அணியினர், இன்றைய 3ஆவது நாள் ஆட்டத்தை பெறும் எதிர்பார்ப்புடன் ஆரம்பித்தனர்.
எனினும் நேற்று சிறப்பாக ஆடிய மவோயோ, இன்று மேலதிகமாக 4 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் லக்மாலின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் லக்மாலின் அடுத்த ஓவரில் மஸகஸ்டாவும் ஆட்டமிழக்க (33) இலங்கை அணி வீரர்களுக்கு இன்றைய தினத்தில் ஒரு சிறந்த ஆரம்பம் அமைந்தது.
பின்னர் வந்த வீரர்களும் மிக விரைவில் ஆட்டமிழந்து அரங்கு திரும்ப, ஜிம்பாப்வே அணி மிக வேகமாக தனது விக்கெட்டுக்களை இழந்தது. இலங்கை அணி சார்பாக பந்து வீச்சில் லக்மால், ஹேரத் மற்றும் டில்ருவன் பெரேரா ஆகியோர் சிறந்த முறையில் செயற்பட்டனர்.
இன்றைய பகல் போசன இடைவேளையின்போது, ஜிம்பாப்வே அணியினர் 52 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர். களத்தில் பீடர் மோர் 26 ஓட்டங்களுடனும், கிரமர் 10 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பகல் போசன இடைவேளையின் பின்னர் பீடர் மோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது அணிக்கு வேகமாக ஓட்டங்களை சேர்த்தார். அவருக்கு துணையாக கிரமரும் சிறந்த முறையில் ஆடி பங்களிப்பு செய்தார்.
அதிரடியாக ஆடி 84 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடங்கலாக 79 ஓட்டங்களைப் பெற்ற வேளையில் குமாரவின் பந்து வீச்சில் டில்ருவன் பெரேராவிடம் பிடி கொடுத்து பீடர் மோர் ஆட்டமிழந்தார்.
எனினும் மறு முனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிரமர் அரைச்சதம் கடந்தார். இன்றைய தேனீர் இடைவேளையின்போது, அவர் ஆட்டமிழக்காமல் 62 ஓட்டங்களையும், டொனால்ட் 9 ஓட்டங்களையும் பெற்றிருந்த அதேவேளை, ஜிம்பாப்வே அணியினர் 7 விக்கெட்டுக்களை இழந்து 291 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.
அதன் பின்னரும் சிறந்த முறையில் துடுப்பாடிய கிரமர் தனது சதத்தைப் பூர்த்தி செய்து ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்களைப் பெற்றார். அவரோடு இணைந்து ஆடிய டொனால்ட் 42 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் ஆட்டமிழந்தார்.
அதன்படி ஜிம்பாப்வே அணியினர் தமது முதல் இன்னிங்சில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 373 ஓட்டங்களைப் பெற்றனர். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக சுரங்க லக்மால் மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், டில்ருவன் பெரேரா 2 விக்கெட்டுக்களையும் பெற்றனர்.
பின்னர் தமது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த இலங்கை அணியினர் இன்றைய ஆட்ட நிறைவின்போது, 3 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பேதுமின்றி 5 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர். போட்டியின் நான்காவது நாள் ஆட்டம் நாளை தொடரும்.
ஏற்கனவே தமது முதல் இன்னிங்சில் இலங்கை அணியினர் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 537 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
இலங்கை அணி (முதல் இன்னிங்ஸ்): 537(155) – உபுல் தரங்க 110*(208), குசல் பெரேரா 110(121), கெளஷல் சில்வா 94(194), திமுத் கருணாரத்ன 56(110), அசேல குனரத்ன 54(102) கிரேம் கிரமர் 142/4(42), கிரிஸ் 96/2(31), மல்கோம் வோல்லர் 25/1(6)
ஜிம்பாப்வே அணி (முதல் இன்னிங்ஸ்): 291/7(82) – பீடர் மோர் 79(84), கிரேம் கிரமர் 62(128), டொனால்ட் 46(92), மவோயோ 45(93), சுரங்க லக்மால் 69/3(21.5), ரங்கன ஹேரத் 97/3(37) , டில்ருவன் பெரேரா 66/2(18),
இலங்கை அணி (இரண்டாவது இன்னிங்ஸ்): 5/0 (3)