ஜிம்பாப்வே அணியுடனான முதல் டெஸ்டின் இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவின்போது ஜிம்பாப்வே அணி மிகவும் சிறந்த முறையில் இன்றைய நாள் ஆட்டத்தை நிறைவு செய்திருப்பதனால் இலங்கை அணி வெற்றி பெறுவதற்கு பெரிதும் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்யை நாள் முடிவில் மொத்தமாக 4 விக்கெட்டுக்களை இழந்து 314 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த இலங்கை அணியினர் பகல் போசன இடைவேளையின்போது 397 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்திருந்தது.
களத்தில் உபுல் தரங்க சிறப்பாக ஆடி தனது அரைச்சதத்தைக் (51) கடந்து களத்தில் இருக்க, மறுமுனையில் அசேல குனரத்னவும் ஆட்டமிழக்காமல் 23 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
பகல் போசன இடைவெளியின் பின்னரும் சிறப்பாக ஆடிய அசேல குனரத்ன தனது முதலாவது சர்வதேச டெஸ்ட் அரைச்சதத்தினைக் பெற்றார். 102 பந்துகளுக்கு முகம்கொடுத்து 54 ஓட்டங்களைப் பெற்ற வேளையில் அவர் ஆட்டமிழக்க, பின்னர் வந்த டில்ருவன் பெரேரா 23 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்து சென்றார்.
பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து செல்ல, இலங்கை அணி 537 ஓட்டங்களிற்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. தனித்து நின்று போராடிய உபுல் தரங்க ஆட்டமிழக்காமல் 208 பந்துகளில் 110 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
பந்து வீச்சில் ஜிம்பாப்வே அணி சார்பாக கிரேம் கிரமர் 42 ஓவர்கள் பந்து வீசி 142 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்டுக்களையும், கிரிஸ் 31 ஓவர்கள் பந்து வீசி 96 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கெட்டுக்களையும் மும்பா, வில்லியம்ஸ் மற்றும் வோல்கர் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பின்னர் தமது முதல் இன்னிங்சை ஆரம்பித்த ஜிம்பாப்வே அணியின் முதல் விக்கெட் வெறும் 5 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் இழக்கப்பட்டது. முதல் விக்கெட்டாக ஷாரியின் விக்கெட்டை இலங்கை அணியின் தலைவர் ரங்கன ஹேரத் LBW முறையில் கைப்பற்றினார்.
எனினும் பின்னர் ஜோடி சேர்ந்த மவோயோ மற்றும் மஸகஸ்டா ஆகியோர் இலங்கை பந்து வீச்சாளர்களை சவாலுக்கு உள்ளாக்கும் விதத்தில் சிறப்பாக செயற்பட்டனர். இவர்கள் இருவரும் இன்றைய நாள் ஆட்டம் முடிவடையும் வரை களத்தில் இருந்து தமது அணிக்கு பெரிய ஒரு வலுவை சேர்த்தனர்.
எனவே இரண்டாம் நாள் ஆட்ட நிறைவின்போது, ஜிம்பாப்வே அணியினர் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 88 ஓட்டங்களைப் பெற்றனர். துடுப்பாட்டத்தில் மவோயோ 41 ஓட்டங்களையும் மஸகஸ்டா 33 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.
பந்து வீச்சில் ரங்கன ஹேரத் 9 ஓவர்கள் பந்து வீசி 29 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.
ஏற்கனவே, நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து ஆடியது. அந்த வகையில் முதல் நாள் ஆட்டத்தில் இலங்கை அணியின் முன் வரிசை வீரர்கள் அனைவரும் அணிக்கு சிறந்த முறையில் பங்காற்றினர்.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான திமுத் கருணாரத்ன 56 ஓட்டங்களையும், கௌஷால் சில்வா 94 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்க, சிறந்த முறையில் அதிரடியாக ஆடிய குஷல் ஜனித் பெரேரா தனது முதலாவது சர்வதேச டெஸ்ட் சதத்தை பெற்றுக்கொண்டார். 121 பந்துகளை எதிர்கொண்ட அவர் 2 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகள் அடங்களாக 110 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் நாளை தொடரும்.
போட்டியின் சுருக்கம்
இலங்கை அணி: 537(155) – உபுல் தரங்க 110*(208), குசல் பெரேரா 110(121), கெளஷல் சில்வா 94(194), திமுத் கருணாரத்ன 56(110), அசேல குனரத்ன 54(102) கிரேம் கிரமர் 142/4(42), கிரிஸ் 96/2(31), மல்கோம் வோல்லர் 25/1(6)
ஜிம்பாப்வே அணி: 81/1(23) – மவோயோ 41(74), மஸகஸ்டா 33(50), ரங்கன ஹேரத் 29/1 (9)