ஜிம்பாப்வே அணியுடனான டெஸ்ட் போட்டியின் ஐந்தாவதும் இறுதியுமான நாளான இன்று களமிறங்கிய இலங்கை அணி, பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நிரோஷன் டிக்வெல்ல மற்றும் அசேல குணரத்னவின் அபார துடுப்பாட்டத்தினால் கடும் போராட்டத்துக்குப் பின்னர் 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி வெற்றி இலக்காக நிர்ணயித்திருந்த 377 ஓட்டங்களை எட்டி பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியிருந்தமையே இதுவரையில் இறுதி இன்னிங்சிற்காக இலங்கை மண்ணில் விரட்டப்பட்ட அதி கூடிய ஓட்ட எண்ணிக்கையாக இருந்தது.
இலங்கை அணியை டெஸ்டிலும் வீழ்த்தி சாதனை படைக்குமா ஜிம்பாப்வே?
இந்த நிலையில் இலங்கை அணியை சவாலுக்குட்படுத்தும் வகையில் ஜிம்பாப்வே அணி 388 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்திருந்தது. குறித்த இலக்கை அடைய நேற்றைய தினம் களமிறங்கியிருந்த இலங்கை அணி, ஆட்ட நேர நிறைவின் போது மூன்று விக்கெட் இழப்பிற்கு 170 ஓட்டங்களை பெற்றிருந்தது.
நேற்றைய தினம் களமிறங்கியிருந்த இலங்கை அணி முதல் விக்கெட்டுக்காக 58 ஓட்டங்களை பெற்றிருந்தது. உபுல் தரங்க 27 ஓட்டங்களுக்கும், திமுத் கருணாரத்ன துரதிஷ்டவசமாக அரைச் சதத்தை ஒரு ஓட்டத்தால் தவறவிட்ட நிலையிலும் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து களமிறங்கிய குசல் மெண்டிஸ் சிறப்பாக துடுப்பாடிய நிலையில், மறுமுனையில் ஆடிய அணித் தலைவர் தினேஷ் சந்திமால் 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
133 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், குசல் மெண்டிசுடன் இணைந்துகொண்ட முன்னாள் அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்டங்களை குவித்தார்.
தொடர்ந்து, ஐந்தாவதும் இறுதி நாளுமான இன்றைய தினம் களமிறங்கிய குசல் மெண்டிஸ் மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோர் நான்காவது விக்கெட்டுக்காக 45 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டிருந்தனர். இந் நிலையில், சூழல் பந்துக்கு உகந்த இந்த களத்தில் கிராம் கிரிமரின் சூழல் பந்து வீச்சில் குசல் மெண்டிஸ் 66 ஓட்டங்களுக்கு விக்கெட் காப்பாளர் ரேகிஸ் சக்கப்வாவிடமும், 25 ஓட்டங்களை பெற்றிருந்த மெதிவ்சும் சக்கப்வாவிடமே பிடி கொடுத்தும் ஆட்டமிழந்தனர்.
எனவே, 203 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியான சூழ்நிலையில், நிரோஷன் டிக்வெல்லவுடன் இணைந்துகொண்ட அசேல குணரத்ன 6ஆவது விக்கெட்டுக்காக பெறுமதிமிக்க 121 ஓட்டங்களை பெற்று அணியின் ஓட்டங்களை உயர்த்தியதோடு அணியை வலுவான நிலைக்கு வழி நடத்தினார்.
5 விக்கெட் இழப்பிற்கு 286 ஓட்டங்களை பதிவு செய்திருந்த நிலையில் சோன் வில்லியம்ஸின் சூழல் பந்து வீச்சின் மூலம் கிடைக்கப்பெற்ற பிடியெடுப்பொன்றினை விக்கெட் காப்பாளர் தவற விட்டதன் காரணமாக 63 ஓட்டங்களை பெற்றிருந்த நிரோஷன் டிக்வெல்லவுக்கு அதிஷ்டவசமாக தொடர்ந்து துடுப்பாடும் வாய்ப்பு கிடைத்தது.
அதற்கு அடுத்த ஓவரிலேயே இரண்டு பௌண்டரிகளை அடுத்தடுத்து விளாசி தனது விக்கெட்டின் பெறுமதியை ஜிம்பாப்வே அணியினருக்கு திக்வெல்ல உணர்த்தினார்.
அதனைத் தொடர்ந்து அசேல குணரத்னவின் கடின பிடியெடுப்பொன்று மீண்டும் தவறவிடப்பட்டதனால் அதன் மூலம் அதிஷ்டவசமாக அசேல குணரத்ன பௌண்டரியொன்றை பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில் அபாரமாக துடுப்பாடிக்கொண்டிருந்த நிரோஷன் டிக்வெல்ல 92வது ஓவரின் போது சோன் வில்லியம் வீசிய இரண்டாவது பந்தினை ரிவேர்ஸ் ஸ்வீப் முறையில் அடிக்க முற்பட்டபோது, துரதிஷ்டவசமாக எதிர்பாராத வகையில் அவரது கையுறையில் பட்ட பந்து விக்கெட் காப்பாளர் ரேகிஸ் சக்கப்வாவிடம் நேரடியாக சென்றமையினால் பெறுமதிமிக்க 81 ஓட்டங்களுடன் களத்திலிருந்து வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்து வெற்றியீட்டுவதற்கு மேலும் 65 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் இணைந்த அசேல – டில்ருவான் பெரேரா ஜோடி ஆட்டமிழக்காமல் 67 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டு, அணியின் வெற்றியை உறுதி செய்தனர். எனவே இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் சொந்த மண்ணில் அதி கூடிய இலக்கை விரட்டிய சாதனையையும் பதிவு செய்தது.
இறுதிவரை பொறுமையாக துடுப்பாடிய அசேல 6 பௌண்டரிகள் உள்ளடங்கலாக 80 ஓட்டங்களையும், அவருடன் ஓட்டங்களை பெற்றுக்கொள்வதுக்கு பங்களிப்பு வழங்கிய டில்ருவான் பெரேரா 4 பௌண்டரிகள் உட்பட 29 ஓட்டங்களையும் பதிவு செய்தனர்.
போட்டியின் ஆட்ட நாயகனாக 125 ஓட்டங்கள் மற்றும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த அசேல குணரத்ன தெரிவு செய்யப்பட்ட அதேவேளை, தொடரின் நாயகனாக 249 ஓட்டங்களுக்கு 11 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த ரங்கன ஹேரத் தெரிவு செய்யப்பட்டார்.
ஜிம்பாப்வே அணியுடனான தொடர் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி காலியில் ஆரம்பமாகவுள்ளது.