இலங்கை A அணி மற்றும் மேற்கிந்திய தீவுகள் A அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் இறுதிப்போட்டி இன்று கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் இடம்பெற்றது. இதில் சிறப்பான துடுப்பாட்ட வலிமையைக் காட்டிய மேற்கிந்திய தீவுகள் A அணி டக்வத் லூயிஸ் முறையில் 8 ஓட்டங்களினால் வெற்றியீட்டியுள்ளது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தொடரின் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று இலங்கை A அணியை வைட் வாஷ் செய்து மேற்கிந்திய தீவுகள் A அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இன்று மழை காரணமாக 47 ஓவர்களாக குறைக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் A அணியின் அணித்தலைவர், ஜேசன் மொஹம்மட் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.
இந்த போட்டியில் விளையாடுவதற்காக இலங்கை அணியின் பந்து வீச்சாளர் நுவன் குலசேகர, சஜித் பத்திரன ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து நாணய சுழற்சிக்கு அமைவாக துடுப்பாட்டத்தை சட்விக் வால்டன், கைல் ஹோப் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர். மேற்கிந்திய தீவுகள் A அணியின் முதலாவது விக்கெட் 43 ஓட்டங்களை அவர்கள் பெற்றிருந்த நிலையில் பினுர பெர்னாந்துவின் பந்தில் பறிபோனது. இதனால், 7 ஓட்டங்களை பெற்றிருந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கைல் ஹோப் அரங்கு நோக்கி திரும்பினார். இவரை தொடர்ந்து வந்த அசாத் புடடின் ஓட்டம் எதுவும் பெறாமல் குலசேகரவின் பந்தில் ஆட்டமிழக்க சரிவு நிலையை நோக்கி மேற்கிந்திய தீவுகள் A அணி நகர்ந்தது. இந்நிலையில் மேலதிக சொற்ப ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்த வேளையில் மூன்றாவது விக்கெட்டும் குலசேகரவின் பந்தில் பறிபோக, ஒரு கட்டத்தில் 59 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து மேற்கிந்திய தீவுகள் A அணி தடுமாறியது. இந்த தடுமாற்றத்தை சுதாகரீத்துக்கொண்டு களத்தில் நின்ற அணித்தலைவர் ஜேசன் மொஹம்மட், அன்ட்ரு மெக்கார்த்தி ஆகியோர் நிதனமாக ஆடி இருவரும் சதம் கடந்து நான்காவது விக்கெட்டுக்காக 163 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று மேற்கிந்திய தீவுகள் A அணியை வலுவான நிலைக்கு இட்டுச்சென்றனர். இதில் ஜேசன் மொஹம்மட் 108 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் உள்ளடங்களாக 105 ஓட்டங்களையும், அதிரடியாக ஆடிய அன்ட்ரு மெக்கார்த்தி 75 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகள் உள்ளடங்களாக 102 ஓட்டங்களையும் பெற்றனர். இவர்களின் இந்த சிறப்பான ஆட்டத்தின் துணையுடன் 47 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து மேற்கிந்திய தீவுகள் A அணி 305 ஓட்டங்களை பெற்றது.
பந்துவீச்சில் இலங்கை A அணி சார்பாக நுவன் குலசேகர 9 ஓவர்களை வீசி 65 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், பினுர பெர்னாந்து, தசுன் சானாக்க, சஜித் பத்திரன ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதனை தொடர்ந்து வெற்றி இலக்கு எண்ணிக்கை டக்வெத் லூயிஸ் முறையில் மீண்டும் குறைக்கப்பட்டு 47 ஓவர்களிற்கு 303 ஓட்டங்களை பெற வேண்டும் என்ற நிலையில் பெரிய இலக்கை நோக்கி தங்களது துடுப்பாட்டத்தை இலங்கை A அணியினர் தொடர்ந்தனர். தங்களது ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான சந்துன் வீரக்கொடியை இலங்கை A அணி 44 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் ரொன்ஸ்போர்ட் பீட்டோனின் பந்தில் விக்கட் காப்பாளர் சட்விக் இடம் பிடிகொடுக்க வைத்து இழந்தனர். இதனால் 24 பந்துகளில் 2 பவுண்டரிகள் உடன் 20 ஓட்டங்களை பெற்ற நிலையில் அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார்.
இதனை தொடர்ந்து, மற்றைய ஆரம்ப துடுப்பாட்ட வீரருடன் களத்திற்கு வந்த ஷெஹான் ஜயசூரியவுடன் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்காக 46 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். இதன் போது கடந்த போட்டியில் சதமடித்த ஷெஹான் ஜயசூரிய 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார். இவரை தொடர்ந்து ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்த தனுஷ்க குணத்திலக்க ஆட்டமிழந்து வெளியேற இலங்கை A அணியின் நிலைமை சற்று மோசமாக தொடங்கியது. ஆட்டமிழக்கும் போது தனுஷ்க குணத்திலக்க 60 பந்துகளில் 7 பவுண்டரிகள் 1 சிக்ஸர் உள்ளடங்களாக 58 ஓட்டங்களை பெற்றிருந்தார். இதனை தொடர்ந்து, இலங்கை அணி சற்று நிதனமாக துடுப்பெடுத்தாட தொடங்கியிருந்தாலும், 150 ஓட்டங்களை தாண்டியிருந்த போது சடுதியாக சொற்ப ஓட்ட இடைவெளிகளில் 2 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் ஒரு கட்டத்தில் 30.2 ஓவர்களிற்கு 6 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களை பெற்று இக்கட்டான நிலையை அடைந்தது. இந்த நேரத்தில் 7 ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த தசுன் சானாக்க, சஜித் பத்திரன ஜோடி இணைப்பாட்டமாக 51 ஓட்டங்களை பெற்றனர். இதன் போது அதிரடியாக ஆடி 20 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகள் உள்ளடங்களாக 34 ஓட்டங்களை பெற்றிருந்த சஜித் பத்திரன ஆட்டமிழந்து சென்றார். இவரை தொடர்ந்து குலசேகர உடன் தசுன் சானாக்க அணியை வழிநடாத்திக்கொண்டிருக்கும் போது போட்டியின் ஆட்ட நேரம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 38 ஓவர்களிற்கு 7 விக்கெட்டுக்களை இழந்து 248 ஓட்டங்களை இலங்கை A அணி பெற்றிருந்தது. டக்வேத் லூயிஸ் முறைப்படி 38 ஓவர்களிற்கு 257 ஓட்டங்களை இலங்கை அணி பெற்றிருக்க வேண்டும் என்கிற காரணத்தினால் இலங்கை A அணி இந்த போட்டியில் 8 ஓட்டங்களால் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. துடுப்பாட்டத்தில் ஆட்ட நேர முடிவு வரை நின்றிருந்த தசுன் சானக்க 26 பந்துகளில் 1 சிக்ஸர் 3 பவுண்டரிகள் உள்ளடங்களாக 35 ஓட்டங்களையும், மிலிந்த சிறிவர்த்தன 30 பந்துகளில் 1 சிக்ஸர் 2 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 35 ஓட்டங்களையும் இலங்கை A அணி சார்பாக பெற்றிருந்தனர்.
பந்து வீச்சில் மேற்கிந்திய தீவுகள் A அணி சார்பாக ரொன்ஸ்போர்ட் பீட்டன் 7 ஓவர்களை வீசி 38 ஓட்டங்களுக்கும், கெஸ்ரிக் வில்லியம்ஸ் 9 ஓவர்களை வீசி 74 ஓட்டங்களுக்கும் தலா 2 விக்கெட்டுகளையும், வீரசாமி பெர்மாள், ஜேசன் மொஹம்மட், டேமியன் ஜகோப்ஸ் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
போட்டியின் சுருக்கம்
மேற்கிந்திய தீவுகள் A: 305/5 (47) – ஜேசன் மொஹம்மட் 105(108), அன்ட்ரு மெக்கார்த்தி 102(75), நுவான் குலசேகர 65/2(9)
இலங்கை A: 248/7 (38) – தனுஷ்க குணத்திலக்க 58(60), மிலிந்த சிறிவர்த்ன 35(30), ரொன்ஸ்போர்ட் பீட்டோன் 38/2(7), கெஸ்ரிக் வில்லியம்ஸ் 74/2(9)
போட்டி முடிவு – மேற்கிந்திய தீவுகள் A அணி டக்வத் லூயிஸ் முறையில் 8 ஓட்டங்களால் வெற்றி