பத்து வருடங்களுக்கு முன்னர் நீங்கள் நாள் தோறும் வெளிவருகின்ற செய்தி நாளிதழ்களை வாசித்துக் கொண்டிருப்பதாக கற்பனை செய்யுங்கள். அப்போது நீங்கள் விளையாட்டுச் செய்திகளை பார்த்திருப்பீர்களேயானால் “சங்கக்காரவுக்கு மற்றுமொரு சதம்“, ”உலக சாதனையை நெருங்கும் முரளிதரன்“ போன்ற தலைப்புகளில் அமைந்த இலங்கை கிரிக்கெட் அணியினை சார்ந்த நல்ல செய்திகளையே பார்க்க கூடியதாக இருந்திருக்கும்.
குசல் பெரேராவின் இரண்டாவது அரைச்சதத்துடன் முடிவடைந்த பயிற்சிப் போட்டி
cஇலங்கை கிரிக்கெட் அணிக்கும், மேற்கிந்திய தீவுகள்..
ஆனால், அனுபவ வீரர்களின் ஓய்வுகளுக்குப் பின்னர் இலங்கை அணியின் நிலையே இன்று தலைகீழாக மாறியிருக்கின்றது. கத்துக்குட்டி நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வே அணியுடன் கடந்த ஆண்டு சொந்த மண்ணில் வைத்து முதல் தடவையாக ஒரு நாள் தொடரினை பறிகொடுத்த இலங்கை அணி, பங்களாதேஷ் அணியினாலும் வரலாற்றில் முதல்தடவையாக டெஸ்ட் போட்டியொன்றில் தோற்கடிக்கப்பட்டிருந்தது. அதோடு, கடந்த ஆண்டில் மோசமான பதிவுகளை காட்டிய கிரிக்கெட் ஜாம்பவானாகவும் இலங்கை மாறியிருந்தது.
எனினும், புதிய பயிற்சியாளரான சந்திக்க ஹதுருசிங்கவின் ஆளுகையில் கீழ் இலங்கை அணி மெல்ல மெல்ல தனது வழமையான ஆட்டத்திற்கு திரும்புவதை நாம் அண்மைய நாட்களில் பார்க்க முடியுமாக இருக்கின்றது. இப்படியாக புதிய அத்தியாயம் ஒன்றினை மீண்டும் எதிர்பார்த்திருக்கும் இலங்கை அணிக்கு அடுத்த சவாலாக மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடர் அமைகின்றது.
பத்து ஆண்டுகளுக்கு பின்னர் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை அணி ஒரு பகலிரவு டெஸ்ட் உட்பட மொத்தமாக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றது. இந்த டெஸ்ட் தொடரின் முன்னோட்டத்தினை நாம் இங்கு நோக்குவோம்.
இலங்கை – மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் போட்டிகள் வரலாறு
இலங்கை கிரிக்கெட் அணி டெஸ்ட் அந்தஸ்தினைப் பெற்றுக் கொண்டு ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் அதாவது 1993 ஆம் ஆண்டில் மேற்கிந்திய தீவுகளுடன் முதல் டெஸ்ட் போட்டியில் மோதியிருந்தது. மொரட்டுவையில் நடைபெற்ற குறித்த போட்டியில் இலங்கை அணியினை அர்ஜுன ரணதுங்கவும், மேற்கிந்திய தீவுகளை ரிச்சி ரிச்சர்ட்சனும் வழிநடாத்தியிருந்தனர். மிகவும் எதிர்பார்ப்புக்களோடு நடைபெற்று முடிந்த இந்த டெஸ்ட் போட்டி சமநிலை அடைந்திருந்தது.
குறித்த போட்டியோடு சேர்த்து இரண்டு அணிகளும் இதுவரையில் மொத்தமாக 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருப்பதுடன், அதில் இலங்கை அணி 8 வெற்றிகளினையும் மேற்கிந்திய தீவுகள் அணி 3 வெற்றிகளினையும் பதிவு செய்திருக்கின்றது. ஆறு போட்டிகள் சமநிலை அடைந்திருக்கின்றன.
மேற்கிந்திய தீவுகளுக்கு இறுதியாக 2008 ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரொன்றில் விளையாடுவதற்காக சென்றிருந்த இலங்கை அணி, இரண்டு போட்டிகள் கொண்ட குறித்த தொடரினை 1-1 என சமநிலைப்படுத்தியிருந்தது. இதேவேளை 2015 ஆம் ஆண்டு, கடைசியாக இலங்கை மண்ணில் வைத்து இரண்டு அணிகளும் டெஸ்ட் தொடரொன்றில் மோதியிருந்தன. இந்த டெஸ்ட் தொடரினை 2-0 என இலங்கை அணி கைப்பற்றியிருந்தது.
இலங்கை அணி
மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியே ஆதிக்கம் காட்டியிருப்பதாக கடந்த கால வரலாறுகள் கூறியிருக்கின்றன. எனினும், மேற்கிந்திய தீவுகளில் வைத்து எந்த டெஸ்ட் தொடரும் இலங்கை அணியினால் இதுவரையில் வெற்றி கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இலங்கை அணிக்கு இந்த தொடர் பெரும் சவால்களில் ஒன்று என்பதில் சந்தேகம் ஏதுமில்லை.
இலங்கை அணி அண்மைய நாட்களில் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் மோசமாக செயற்பட்டிருந்தாலும், கிரிக்கெட் விளையாட்டின் நீண்ட வடிவமான டெஸ்ட் போட்டிகளில் குறிப்பிடும் படியான நல்ல பதிவுகளையே காட்டியிருக்கின்றது. இதற்கு இலங்கையின் அண்மைய டெஸ்ட் சுற்றுப்பயணங்களான பாகிஸ்தான், இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுடனான தொடர்களை சான்றுகளாக குறிப்பிட முடியும். ஐ.சி.சி. இன் டெஸ்ட் தரவரிசையில் ஆறாவது இடத்தில் இருக்கும் இலங்கைக்கு சாதனைகள் புரிய ஒரு வாய்ப்பினை இத்தொடர் வழங்கியிருக்கின்றது.
தினேஷ் சந்திமாலின் சதத்தோடு பயிற்சிப் போட்டியின் முதல் நாளில் இலங்கை ஆதிக்கம்
மேற்கிந்திய தீவுகளுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட்..
இத் தொடரில் விளையாடும் இலங்கை குழாத்தினை எடுத்துப் பார்க்கும் போது, ரங்கன ஹேரத்தை தவிர யாரும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கவில்லை. எனவே, புதிய சவாலாக அமையும் இந்த சுற்றுப் பயணத்தில் இலங்கை அணியின் துடுப்பாட்டத்தினை பலப்படுத்தக்கூடிய முக்கிய வீரராக அணித்தலைவர் தினேஷ் சந்திமாலை குறிப்பிட முடியும்.
டெஸ்ட் போட்டிகளில் கடந்த ஆண்டில் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஓட்டங்களினை (1003) குவித்த அவர் இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னர் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற பயிற்சிப் போட்டியிலும் சதம் ஒன்றினை விளாசியிருந்தார்.
சந்திமால் போன்று இலங்கை அணிக்காக கடந்த ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் ஆயிரத்திற்கும் மேலான ஓட்டங்களினை (1031) குவித்த ஆரம்ப துடுப்பாட்ட வீரரான திமுத் கருணாரத்னவுக்கு காயம் காரணமாக இத் தொடரில் விளையாட முடியாத நிலை உருவாகியிருக்கின்றது. இது ஒரு பாரிய இழப்பாகும். திமுத் கருணாரத்னவினை இலங்கையில் நடைபெற்ற உள்ளூர் முதல்தர தொடரில் திறமையினை வெளிப்படுத்திய மஹேல உடவத்த பிரதியீடு செய்யப்பட்டிருக்கின்றார்.
சந்திமால் தவிர இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் ஜொலிக்க கூடியவர்களாக தனஞ்சய டி சில்வா, ரொஷேன் சில்வா போன்றோரினை குறிப்பிட முடியும். தனது தந்தையின் மரணத்தினால் இலங்கை அணியுடன் மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமாகாத தனஞ்சய, தற்போது இலங்கை அணியுடன் இணைந்திருக்கின்றார். அண்மையில் நடைபெற்று முடிந்த இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுடனான டெஸ்ட் தொடர்களில் சதம் விளாசிய தனஞ்சயவிடம் இருந்து இம்முறையும் சிறப்பான ஆட்டத்தினை இலங்கை எதிர்பார்க்கின்றது.
தனஞ்சய டி சில்வா போன்று ரொஷேன் சில்வாவும் இலங்கை அணிக்கு நம்பிக்கை தரக்கூடிய வீரராக இருக்கின்றார். டெஸ்ட் போட்டிகளில் ஐந்து இன்னிங்சுகளில் மாத்திரமே ஆடியிருக்கும் ரோஷேன் அதில் ஒரு சதம் உட்பட, மூன்று அரைச்சதங்களை விளாசியிருக்கின்றார். அதோடு அண்மையில் நடைபெற்று முடிந்த “சுபர் – 4” மாகாண தொடரில் ரொஷேன் 178.33 என்கிற துடுப்பாட்ட சராசரியோடு 535 ஓட்டங்களினைக் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மறுமுனையில் அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் குசல் பெரேரா ஆகியோரும் இலங்கையின் டெஸ்ட் அணிக்கு மீண்டும் திரும்பியிருக்கின்றனர். இதில், அதிக அனுபவம் கொண்டவரான மெதிவ்ஸ் தனது காயத்தில் இருந்து குணமாகியதன் பின்னர் நான்கு மாதங்களுக்குப்பிறகு இலங்கை அணிக்கு விளையாடவுள்ளார். மெதிவ்ஸிற்கு டெஸ்ட் போட்டிகளில் 5,000 ஓட்டங்களினை பூர்த்தி செய்ய இன்னும் 86 ஓட்டங்களே தேவையாக இருக்கின்றது.
அதோடு, மேற்கிந்திய தீவுகளில் கடந்த வெள்ளிக்கிழமை (01) இடம்பெற்று முடிந்த பயிற்சிப் போட்டியிலும் மெதிவ்ஸ் சிறப்பான ஆட்டத்தினைக் காட்டியிருந்தார். தனது அனுபவம் கலந்த திறமையினை மெதிவ்ஸ் இத்தொடரில் வெளிப்படுத்துவார் எனில், இலங்கை அணிக்கு அது மிகப் பெரிய பலமாக அமையும்.
இதேவேளை, அண்மைய காலங்களில் திறமையினை நிரூபித்துவரும் குசல் பெரேராவும் ஒன்றரை வருடங்களுக்குப் பின்னர் இந்த தொடர் மூலம் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் சந்தர்ப்பத்தினைப் பெற்றிருக்கின்றார். குசல் பெரேரா மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற பயிற்சிப் போட்டியின் இரண்டு இன்னிங்சுகளிலும் அரைச்சதம் பெற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இளம் வீரர்களான நிரோஷன் திக்வெல்ல மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோரினால் இலங்கையின் துடுப்பாட்டத்துறை இன்னும் பலப்படுத்தப்படுகின்றது.
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை அணிடன் இணையும் தனஞ்சய
இலங்கையின் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களில்..
இலங்கை அணியின் பந்துவீச்சினை எடுத்துப்பார்க்கும் போது, மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் அனுபவம் கொண்ட சுரங்க லக்மால் மற்றும் ரங்கன ஹேரத் போன்றோருக்கு வேலைப்பளுவை குறைக்கும் நோக்கில் இரண்டு போட்டிகளில் மாத்திரமே விளையாட சந்தர்ப்பம் வழங்க தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. இதனால், இரண்டு மேலதிக வேகப்பந்துவீச்சாளர்கள் இத்தொடருக்காக வேண்டி அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர்.
இதில் இலங்கை அணியின் சுழல் துறையினை ரங்கன ஹேரத்தோடு சேர்ந்து அகில தனஞ்சய, ஜெப்ரி வன்டர்செய் மற்றும் தில்ருவான் பெரேரா ஆகியோர் முன்னெடுப்பர். மறுமுனையில், வேகப்பந்துவீச்சுத் துறையின் முன்னோடியாக சுரங்க லக்மால் இருக்க அவருக்கு லஹிரு கமகே, லஹிரு குமார மற்றும் அசித்த பெர்னாந்து மற்றும் கசுன் ராஜித ஆகியோர் பங்களிப்பு வழங்குவர். இதில், அறிமுக வீரர்களாக இருக்கும் அசித்த பெர்னாந்து மற்றும் கசுன் ராஜித ஆகியோர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பான பதிவுகளை காட்டியமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை குழாம்
தினேஷ் சந்திமால் (அணித் தலைவர்), சுரங்க லக்மால் அஞ்செலோ மெதிவ்ஸ், குசல் மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, தனஞ்சய டி சில்வா, மஹேல உடவத்த, ரொஷேன் சில்வா, நிரோஷன் திக்வெல்ல, ரங்கன ஹேரத், தில்ருவான் பெரேரா, அகில தனஞ்சய, ஜெப்ரி வன்டர்சே, லஹிரு கமகே, லஹிரு குமார, கசுன் ராஜித, அசித்த பெர்னாந்து.
மேற்கிந்திய தீவுகள் அணி
கிரிக்கெட் உலகினை முன்னொரு காலத்தில் ஆட்சி செய்த அணிகளில் ஒன்றான மேற்கிந்திய தீவுகள், டெஸ்ட் போட்டிகள் என்று வரும் போது இப்போதைய நாட்களில் குறிப்பிடும்படியான சிறப்பான பதிவுகளை காட்டவில்லை என்றே கூறமுடியும். கடந்த நான்கு ஆண்டுகளுக்குள் மேற்கிந்திய தீவுகளினால் ஜிம்பாப்வே, பங்களாதேஷ் தவிர்ந்த ஏனைய கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கு எதிராக எந்தவொரு டெஸ்ட் தொடர் வெற்றியினையும் பதிவு செய்யவில்லை. அதோடு டெஸ்ட் தரவரிசையில் மேற்கிந்திய தீவுகள் அணியினர் ஒன்பதாவது இடத்திலும் இருக்கின்றனர். ஆனால், இவற்றை வைத்து மேற்கிந்திய தீவுகள் அணி அவர்களது சொந்த மண்ணில் பலம் குறைந்தவர்களாக இருப்பர் என மதிப்பிட முடியாது.
சகலதுறை வீரர் ஜேசன் ஹோல்டரினால் தலைமை தாங்கப்படும் மேற்கிந்திய தீவுகள் அணி அதிகமான இளம் வீரர்களினையே கொண்டிருக்கின்றது. இதில் துடுப்பாட்டத்தினை பலப்படுத்தும் வீரர்களாக கிரைக் ப்ரத்வைட், கெய்ரன் பொவேல், சிம்ரோன் ஹெட்மேயர், ரொஸ்டன் சேஸ் மற்றும் சாய் ஹோப் போன்றோரினை குறிப்பிட முடியும். இவர்களில் ப்ரத்வைட் 3,000 இற்கு கிட்டவான டெஸ்ட் ஓட்டங்களை பெற்ற அனுபவத்தினை கொண்டிருக்கின்றார். 1,620 டெஸ்ட் ஓட்டங்களைப் பெற்றிருக்கும் கெய்ரன் பொவேல் இலங்கை அணியுடன் இடம்பெற்ற பயிற்சிப் போட்டியில் அரைச்சதம் விளாசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் தவிர டேவோன் ஸ்மித், ஜஹ்மர் ஹமில்டன் போன்ற வீரர்களுக்கும் மேற்கிந்திய தீவுகள் அணியில் விளையாட சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. இதில், அறிமுக விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான ஜஹ்மர் ஹமில்டன் கடந்த பெப்ரவரி மாதம் இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் இடம்பெற்ற முதல்தர கிரிக்கெட் தொடரில் மூன்று இன்னிங்சுகளில் விளையாடி ஒரு சதம், அரைச்சதம் உட்பட மொத்தமாக 199 ஓட்டங்களினை குவித்திருந்ததார்.
இதேவேளை, 2015 ஆம் ஆண்டிலேயே இறுதியாக மேற்கிந்திய தீவுகளுக்கு விளையாடிய டெவோன் ஸ்மித் 2017-18 ஆம் ஆண்டுக்கான உள்ளூர் முதல்தர தொடரொன்றில் ஆறு சதங்கள் உள்ளடங்களாக 84.23 என்கிற துடுப்பாட்ட சராசரியுடன் 1095 ஓட்டங்களினை விளாசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேற்கிந்திய தீவுகளின் பந்துவீச்சுதுறையினை எடுத்துப்பார்த்தால் இத்தொடரில் அவ்வணி அதிகம் வேகப்பந்து வீச்சாளர்களினையே நம்பியிருக்கின்றது. அணியின் பந்துவீச்சினை முன்னெடுக்கும் முக்கிய வீரராக கெமர் ரோச் காணப்படுகின்றார். வலதுகை வேகப்பந்து
வீச்சாளரான கெமர் ரோச் 29.13 என்கிற சராசரியுடன் 147 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. கெமர் ரோச்சோடு அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர், சன்னோன் கேப்ரியல் மற்றும் மிகுவேல் கம்மின்ஸ் ஆகியோர் ஏனைய வேகப்பந்துவீச்சாளர்களாக இருக்கின்றனர்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு சுழல் பந்துவீச்சாளராக பலம் சேர்ப்பதில் முக்கிய நபராக நூறு டெஸ்ட் விக்கெட்டுக்களுக்கு மேல் சாய்த்துள்ள தேவேந்திர பீஷு இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கிந்திய தீவுகள் குழாம்
ஜேசன் ஹோல்டர் (அணித் தலைவர்), தேவேந்திர பீஷூ, க்ரைக் ப்ராத்வைட், ரோஸ்டன் சேஸ், மிகுவேல் கம்மின்ஸ், சேன் டோவ்ரிச், சனோன் கேப்ரியல், ஜஹ்மர் ஹமில்டன், சிம்ரோன் ஹெட்மேயர், ஷாய் ஹோப், கெய்ரன் பவல், கேமர் ரோச், டேவோன் ஸ்மித்.
இலங்கை அணியின் மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப் பயணத்தின் போட்டி அட்டவணை
முதலாவது டெஸ்ட் போட்டி – ஜூன் 6 தொடக்கம் ஜூன் 10 வரை, ட்ரினிடாட்
இரண்டாவது டெஸ்ட் போட்டி – ஜூன் 14 தொடக்கம் ஜூன் 18 வரை, சென். லூசியா
மூன்றாவது டெஸ்ட் போட்டி – ஜூன் 23 தொடக்கம் ஜூன் 27 வரை, பார்படோஸ் (பகலிரவுப் போட்டி)