இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் பங்கு கொள்ளும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகளால் இலகுவாக வெற்றி பெற்றிருந்தது.
எனினும், இன்று நடைபெறவுள்ள ஜிம்பாப்வே அணியை விட பலமிக்க அணியான மேற்கிந்திய தீவுகளுடனான போட்டியில் அனுபவமற்ற இலங்கை அணி எவ்வாறு அவ்வணியை எதிர்கொள்ளப் போகிறது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணி
டெரன் பிராவோ, மார்லன் சாமுவேல்ஸ், விக்கெட் காப்பாளர் ராம்டின் மற்றும் சகல துறை ஆட்டக்காரர் கிரோன் பொல்லார்ட் போன்ற அனுபவ வீரர்கள் இல்லாத நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி இன்று களமிறங்கவுள்ளது.
சுலைமன் பென் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் பந்து வீச்சியில் இலங்கை அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்த கூடியவர்கள். அணித் தலைவர் ஜேசன் ஹோல்டர் அண்மையில் ஷார்ஜாவில் இடம்பெற்ற பாகிஸ்தானுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தனது அதிரடியான பந்து வீச்சில் ஐந்து விக்கெட்டுக்களை வீழ்த்தி வெற்றிக்கு காரணமாக இருந்தார். எனவே அவரது பந்து வீச்சும் இலங்கை அணிக்கு பாரிய சவாலாக அமையலாம்.
கிரேக் பிரத்வெய்ட், ஷார்ஜாவில் இடம்பெற்ற பாகிஸ்தானுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டில் முதல் இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 142 ஓட்டங்களையும், இரண்டாம் இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 60 ஓட்டங்களையும் விளாசி, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு துடுப்பாட்டத்தில் சிறந்த பங்களிப்பினை வழங்கியிருந்தார்.
எனினும், டெஸ்ட் போட்டிகளில் சராசரியாக 37.52 ஓட்ட வீதத்தினை கொண்டிருக்கும் இவர், பாகிஸ்தான் அணியுடனான மூன்று ஒருநாள் போட்டிகளில் சராசரியாக 28.33 என்ற ஓட்ட வீதத்தினையே பெற்றார்.
எனவே, இலங்கை அணிக்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் அணியினர் தமது பந்து வீச்சையே அதிகமாய் சவாலுக்குட்படுத்தலாம் என்று நம்பப்படுகின்றது.
இலங்கை அணி
இலங்கை அணியை பொறுத்தவரை காயம் காரணமாக அணித் தலைவர் அஞ்சலோ மெதிவ்ஸ் மற்றும் அதிரடி ஆட்ட வீரர் தினேஷ் சந்திமல் ஆகியோர் இத்தொடரில் பங்குபற்றாமை அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோன்று, 189 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட இலங்கை அணியின் தற்போதைய தலைவர் உபுல் தரங்க மற்றும் குசல் பெரேரா தவிர்ந்த ஏனையோர் அனுபவம் அற்ற புதிய வீரர்களாகவே இருக்கின்றனர். எனினும் ஜிம்பாப்வே ஆடுகளங்களில் சிறப்பாக துடுப்பாடிய இளம் வீரர் தனஞ்சய டி சில்வா அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார்.
அனுபவமற்ற நடுத்தர துடுப்பாட்ட வீரர்கள் இதுவரை சவாலான ஓட்ட எண்ணிக்கை ஒன்றினை பெறவோ, அவ்வாறான ஒரு ஓட்ட இலக்கை நோக்கி இரண்டாவது துடுப்பாட்டத்தினையோ மேற்கொள்ளவில்லை. மேற்கிந்திய தீவுகள் அணி கூடிய ஓட்டங்களை பெறும் பட்சத்தில், அந்த இலக்கை அடைவது இலங்கை அணிக்கு சவாலாகவே அமையும். எனினும் அவ்வாறு வெற்றி பெறுவதற்கு நடுத்தர வரிசை துடுப்பாட்ட வீரர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமாகத் தேவைப்படும்.
அணிகளின் குறை நிறைகள்
இதுவரை இரு அணிகளும் 54 ஒருநாள் போட்டிகளில் மோதி உள்ளன. அவற்றில் மேற்கிந்திய தீவுகள் அணி 27 வெற்றிகளையும், இலங்கை அணி 24 வெற்றிகளையும் பெற்றிருக்கின்றன. அதேநேரம், மேற்கிந்திய தீவுகள் அணியுடனான கடைசி ஏழு போட்டிகளில் 6 போட்டிகளில் இலங்கை வெற்றி பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.
இவ்வாண்டில் சுரங்க லக்மால் இலங்கை அணி சார்பாக எட்டு போட்டிகளில் பங்குபற்றி 11 விக்கெட்டுக்களை 26.72 என்ற விகிதத்துடன் வீழ்த்தியுள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அங்குள்ள காலநிலை மற்றும் ஆடுகளத்தின் தன்மைக்கேட்ப இலங்கை துடுப்பாட்ட வீரர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கக் கூடும்.
இது குறித்து கருத்து தெரிவித்த தனஞ்சயன டி சில்வா ”வேகப்பந்தை சமாளிக்க கூடிய திறமை இருக்கிறது. எனினும் ஆடுகளத்தின் தன்மை மற்றும் பந்து வீச்சில் ஏற்படும் ஸ்விங் போன்றவை எங்கள் துடுப்பாட்டத்தை சவாலுக்குட்படுத்தும்” என்று தெரிவித்தார்.
இரு அணிகளினதும் இறுதி 5 ஒருநாள் போட்டி முடிவுகள்
இலங்கை அணி : வெற்றி, தோல்வி, தோல்வி, தோல்வி, வெற்றி
மேற்கிந்திய தீவுகள் அணி : தோல்வி, தோல்வி, தோல்வி, தோல்வி, வெற்றி
இலங்கை குழாம்
உபுல் தரங்க*, தனஞ்சயன டி சில்வா, நிரோஷன் திக்வெல்ல†, நுவான் பிரதீப், அசேல குணரத்ன, ஷெஹான் ஜயசூரிய, நுவன் குலசேகர, லஹிறு குமார, சுரங்க லக்மால், குசல் மெண்டிஸ், சசித் பத்திரண, குசல் ஜனித் பெரேரா, லக்சன் சந்தகன், டசுன் ஷானக, ஜெப்ரி வண்டர்சே
மேற்கிந்திய தீவுகள் அணி
ஜேசன் ஹோல்டர்*, சுலைமன் பென், கிரேக் பிரத்வெய்ட், கார்லோஸ் பிராத்வெய்ட், ஜோனதன் கார்ட்டர், ஜான்சன் சார்ல்ஸ், மிகுவல் கம்மின்ஸ், ஷேன் டோவ்றிச், ஷானோன் கேப்ரியல், ஷை ஹோப், ஏவின் லூயிஸ், ஜேசன் முகமது, சுனில் நரைன், ஆஷ்லி நர்ஸ், ரோவ்மன் பவல்