இன்று (13) சுகததாஸ உள்ளக அரங்கில் இடம்பெற்ற ஆசிய கரப்பந்து சம்பியன்ஷிப் தொடருக்கான தகுதிகான் போட்டியில் உஸ்பகிஸ்தானை 3-0 என இலகுவாக வீழ்த்திய இலங்கை குறித்த தொடருக்கு தகுதியினைப் பெற்றுக் கொண்டது.
நீண்ட இடைவெளியின் பின்னர் இலங்கை கரப்பந்தாட்ட அணி பங்குகொண்ட இந்தப் போட்டிக்கு, மீண்டும் சிரேஷ்ட வீரர் ஜனித சுரத் அழைக்கப்பட்டதோடு, அவர் அணியின் தலைவராகவும் செயற்பட்டார்.
இந்தப் போட்டியினை தேசிய அணிக்கான தனது கன்னிப் போட்டியாக ஆடிய இளம் வீரர் தரூஷ ஷமத் முதல் செட்டிலேயே களமிறக்கப்பட்டார்.
>> ஒலிம்பிக்கில் பார்வையார்களுக்கு தடை
எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட முதல் செட்டில் இரு அணி வீரர்களும் கடுமையான போட்டியைக் கொடுத்தனர். எனவே, இந்த செட்டின் இறுதிவரை இரு அணியினரும் புள்ளிகளை சம அளவில் வைத்து முன்னேறினர். எனினும், இறுதியில் இலங்கை அணி 25–23 என முதல் செட்டைக் கைப்பற்றியது.
எனினும், இரண்டாவது செட்டில் இலங்கை வீரர்கள் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தியமைனால், இந்த செட்டை 25-13 என இலகுவாகக் கைப்பற்றி போட்டியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
முக்கியமான மூன்றாவது செட்டின் ஆரம்பம் முதல் 20 புள்ளிகள் வரை உஸ்பகிஸ்தான் வீரர்கள் முன்னிலையுடன் சென்றுகொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் 6 புள்ளிகள் வித்தியாசத்தில் பின்னிலையில் இருந்த இலங்கை வீரர்கள் பிற்பகுதியில் ஆக்ரோசமான ஒரு ஆட்டத்தைக் காண்பித்தனர்.
இதன் விளைவாக மிகவும் விறுவிறுப்பாக சென்ற இந்த செட்டினை 25-22 என இலங்கை அணி கைப்பற்றி, போட்டியை 3-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி கொண்டது.
இந்தப் போட்டியில் இளம் வீரர்களாக விளையாடிய மஹேல இந்தீவர மற்றும் தரூஷ ஷமத் ஆகியோர் சிறந்த திறமையினை வெளிப்படுத்தியதுடன், ஜனித சுரத் தனது அனுபவத்தின்மூலம் இலங்கை அணிக்கு சிறந்த முறையில் முக்கிய புள்ளிகளைப் பெற்றுக் கொடுத்தார்.
இந்த வெற்றியின்மூலம் இலங்கை அணி இந்த வருடம் ஜப்பானில் இடம்பெறவுள்ள ஆசிய கரப்பந்து சம்பியன்ஷிப் தொடருக்கு தெரிவாகியுள்ளது.
>> இந்தப் போட்டியை மீண்டும் பார்வையிட <<