எமது திட்டத்தை வீரர்கள் செய்யத் தவறினர்: பக்கீர் அலி

143

இலங்கை கால்பந்து அணி துர்க்மெனிஸ்தான் அணிக்கு எதிரான உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியின் முதல் கட்ட மோதலில் தோல்வியுற்றதற்கு சிரேஷ்ட வீரர்கள் விட்ட தவறே காரணம் என இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் நிசாம் பக்கீர் அலி தெரிவித்துள்ளார். 

நேற்று (05) கொழும்பு ரேஸ் கோர்ஸ் சர்வதேச அரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் இலங்கை அணி அதிகமான தடுப்பு ஆட்டத்தை மேற்கொண்ட போதும், போட்டியின் நிறைவில் 2-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்ந்து, சொந்த மைதானத்தில் தோல்வியுடன் தமது பயணத்தை ஆரம்பித்தது. 

துர்க்மெனிஸ்தானிடம் வீழ்ந்தது இலங்கை

பிஃபா உலகக் கிண்ண தகுதிகாண் இரண்டாவது சுற்றில் …..

இந்நிலையில், போட்டியின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் மற்றும் ஊடகவியலாளர்கள் இடையே கடுமையான கேல்விகளும் அதற்கான பதில்களும் பரிமாறப்பட்டன.  

முதலில் தோல்விக்கான காரணத்தை குறிப்பிட்ட பக்கீர் அலி, ”இன்றைய போட்டி எமக்கு மிகவும் கடுமையாக இருந்தது. எமது இடது பின்கள வீரரின் பிழையினாலேயே இரண்டு கோல்களும் பெறப்பட்டன. மிகவும் பலம்மிக்க துர்க்மெனிஸ்தான் அணிக்கு எதிராக இரண்டு கோல்களுடன் போட்டியை நிறைவு செய்தமை எமது அடுத்த போட்டிகளுக்கு சாதகமாக அமையும்.

போட்டிக்கு முன்னரும், உடை மாற்றும் அறையிலும் நாம் போட்டியில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து திட்டமிட்டோம். எனினும், களத்தில் அதனை வீரர்கள் செய்யத் தவறினர்” என்றார். 

Photos: Sri Lanka vs Turkmenistan | 2022 FIFA World Cup Qualifiers

இலங்கை அணியின் தரம் குறித்து விளக்கிய பக்கீர் அலி, ”எதிரணியின் வீரர்களுடன் ஒப்பிடும்பொழுது நாம் அந்த தரத்தில் இல்லை. எமது வீரர்களில் அதிகமானவர்கள் இளம் வீரர்கள். இந்தப் போட்டியில் பெறப்பட்ட அனுபவம் எதிர்கால போட்டிகளுக்கு கைகொடுக்கும்” என்றார். 

துர்க்மெனிஸ்தான் அணி வீரர்களைப் பொறுத்தவரை இலங்கை அணி வீரர்களை விட அளவில் பெரியவர்களாகவும், வலிமை கொண்டவர்களாகவும் இருந்தனர். எனினும், இலங்கை வீரர்கள் அவர்களுடன் மோதி விளையாட முற்பட்டமை இலங்கைக்கு பாதமாகவே அமைந்தது. குறிப்பாக முதல் கோல் பெறப்படுவதற்கும் இதுவே பிரதான காரணியாக இருந்தது.  

அது போன்றே, வீரர்கள் தமக்கான இடங்களில் சிறந்த முறையில் விளையாடாமை மற்றும் போட்டியின்போது அணியில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் என்பன குறித்தும் பக்கீர் அலி தெளிவுபடுத்தினார். 

”பசால் மற்றும் நிரேஷ் முன்னைய போட்டிகளில் சிறந்த முறையில் ஆடினர். அது போன்றே ஆகிப் மற்றும் பசால் இடையே சிறந்த ஒரு இணைப்பு இருந்தது. ஆகிப் நீண்ட தூரத்தில் இருந்து கோலுக்கான முயற்சிகளைப் பெறக்கூடியவர். எனினும், இன்றைய போட்டியில் அவை எதுவும் சிறந்த முறையில் செயற்படவில்லை”.  

இதேவேளை, குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த துர்க்மெனிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் அன்டெ மைஸ், தமக்கு இலங்கையில் கிடைத்த வரவேற்பிற்கும், கவனிப்பிற்கும் நன்றிகளைத் தெரிவித்தார்.