தென்னாபிரிக்க அணிக்கு எதிராக SSC மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி 199 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று, தொடரை 2-0 என கைப்பற்றியது.
கடந்த காலங்களில் பல தோல்விகளுக்கும், சவால்களுக்கும் முகங்கொடுத்து வந்த இலங்கை அணியின் திடீர் வெற்றிக்கு என்ன காரணம்? ஆடுகளங்கள்தான் காரணம் என்றால், இன்றைய நான்காவது நாள் ஆட்டத்தில் தென்னாபிரிக்க அணியின் புவ்மா மற்றும் தீனுஸ் டி பிரைன் ஆகியோரின் 123 ஓட்ட, இணைப்பாட்டம் எப்படி பெறப்பட்டது என்ற கேள்வி எம்முன் தோன்றுகிறது. அணியின் வெற்றிக்கு ஆடுகளங்கள் ஓரளவு காரணமாக இருந்தாலும், வீரர்களின் முழு முயற்சியே வெற்றிக்கு முக்கிய காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
மாய சுழலினால் தென்னாபிரிக்காவை வைட் வொஷ் செய்த இலங்கை
மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டித் தொடர்களில் இலங்கை அணியின் ஆதிக்கம் சற்று குறைந்திருந்தாலும், டெஸ்ட் தொடர்களில் அவர்களது வெளிப்பாடு அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கை கொடுப்பதாகவே இருந்தது. 2017 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து எட்டு டெஸ்ட் தொடர்களில் விளையாடியுள்ள இலங்கை அணி நான்கு தொடர்களில் வெற்றியீட்டியும், 2 தொடர்களிலும் தோல்வியைத் தழுவியுள்ளதுடன், இரண்டு தொடர்களை சமநிலை செய்துள்ளது. இதில் முக்கியமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றிய அணி என்ற பெருமையை, தினேஷ் சந்திமால் தலைமையிலான இலங்கை அணி பெற்றதுடன், இறுதியாக மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற வேகப்பந்துக்கு சாதகமான மைதானங்களில் போட்டியிட்டு, தொடரை 1-1 என சமப்படுத்தியமை அதிகம் பேசப்பட்ட தொடர்களாக அமைந்திருந்தன.
எனினும் இதற்கு மேலும், தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரின் வெற்றி அதிகமாக பேசப்படுவதற்கான காரணம் கடந்த கால வரலாறுகள் தான் என்றால் அதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை. தென்னாபிரிக்க அணியுடன் பத்து தொடர்களில் விளையாடியுள்ள இலங்கை அணி இரண்டு தொடர்களில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளது. இதில் ஒரு தொடரில் சமநிலையும் பெற்றிருந்தது. இந்த நிலையில் குறிப்பிட்ட மோசமான வரலாற்றை மாற்றியமைக்குமா? என்ற எதிர்பார்ப்பின் வெளிப்பாடு இன்று இலங்கை அணிக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்துள்ளது. அதுவும் தரப்படுத்தலில் இரண்டாவது இடத்திலிருக்கும் தென்னாபிரிக்க அணியை, அனுபவங்கள் குறைந்த பல வீரர்களுடன் இலங்கை அணி வீழ்த்தியிருப்பது கட்டாயமாக பேசப்பட வேண்டிய ஒரு விடயம்தான்.
இவ்வாறு கடின உழைப்புடன் முன்னேறிய இலங்கை அணி வெற்றிபெற இந்த காரணங்கள் மிகப்பெரிய பங்காற்றியிருந்தன.
1. நம்பிக்கை அளித்த திமுத் கருணாரத்னவின் துடுப்பாட்டம்
இலங்கை டெஸ்ட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான திமுத் கருணாரத்னவின் துடுப்பாட்டம் தொடர் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. இவர் 2 டெஸ்ட் போட்டிகளிலும் 118.66 என்ற சராசரியில் 356 ஓட்டங்களை குவித்திருந்தார். காலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு அணிகளின் துடுப்பாட்ட வீரர்களும் தடுமாறிய நிலையில், முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 158 ஓட்டங்களை குவித்ததுடன், இரண்டாவது இன்னிங்ஸில் 60 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியின் வெற்றியை தனியாளாக இருந்து பெற்றுக்கொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று முடிவுக்கு வந்த SSC டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில், தென்னாபிரிக்க அணியின் கேஷவ் மஹராஜ் பந்து வீச்சில் அசத்திய நிலையில், குறித்த இன்னிங்ஸில் 53 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த கருணாரத்ன, அடுத்த இன்னிங்ஸில் 85 ஓட்டங்களை பெற்று, சதத்தை தவறவிட்டார். எனினும் வெற்றிக்கான ஓட்டங்களை குவித்த இவர், தென்னாபிரிக்க தொடரில் தொடர்ச்சியாக நான்கு அரைச்சதங்களை விளாசி அசத்தினார். இதன்படி தொடர்ச்சியாக அரைச்சதம் அடித்த, இலங்கை அணியின் ஐந்தாவது வீரராகவும் இவர் பதிவானார்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் உபாதை காரணமாக விளையாடாமல் இருந்த திமுத் கருணாரத்ன, உபாதையிலிருந்து திரும்பியதுடன், தனியொருவராக துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை குவித்ததுடன், இலங்கை அணிக்கு தொடர் வெற்றியையும் பெற்றுக்கொடுத்தமை பாராட்டப்பட வேண்டிய விடயமாகும்.
2. ஆடுகளங்களுக்கு ஏற்ப நேர்த்தியான அணித் தெரிவு
இலங்கை அணி தொடரை 2-0 என கைப்பற்றியமைக்கு பிரதான காரணமாக அணியின் இறுதி பதினொருவர் தெரிவு செய்யப்பட்டமையை குறிப்பிட முடியும்.
தென்னாபிரிக்காவை வீழ்த்த தந்திரோபாயங்களை கையாளுகிறதா இலங்கை?
அதாவது காலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி, ரங்கன ஹேரத், டில்ருவான் பெரேரா மற்றும் லக்ஷான் சந்தகன் ஆகிய முதற்தர சுழல் பந்து வீச்சாளர்களுடன், ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மாலை இணைத்திருந்தது. அணியின் தேர்வுக்கு ஏற்ப முதல் டெஸ்ட்டின் 17 விக்கெட்டுகள் சுழல் பந்து வீச்சாளர்களால் பெறப்பட்டது. முக்கியமாக முதல் டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாபிரிக்க அணியை 73 ஓட்டங்களுக்கு சுழல் பந்து வீச்சாளர்கள் சுருட்டியிருந்தனர்.
ஆனால் தென்னாபிரிக்க அணி தங்களுடைய மூன்று முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களை அணிக்குள் கொண்டுவந்தமையானது ஓரளவு உதவினாலும் (10 விக்கெட்டுகள்), வெற்றிக்கான வாய்ப்பினை ஏற்படுத்தவில்லை. இரண்டாவது டெஸ்ட்டில் துடுப்பாட்ட வீரர் ஒருவரை அணிக்குள் கொண்டு வந்த தென்னாபிரிக்க அணி சுழல் பந்து வீச்சாளர் ஷம்சியை கைவிட்டது. இந்த மாற்றமானது தென்னாபிரிக்க அணியின் நம்பிக்கைக்கு முட்டுக்கட்டையாகவும் இருந்தது. SSC மைதானத்தில் இலங்கை சுழல் பந்து வீச்சாளர்கள் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்த, தென்னாபிரிக்க அணி தங்களது பிழையை உணர்ந்துகொண்டு, ஏமாற்றத்துக்கு முகங்கொடுத்தது,
இலங்கை அணி தங்களுடைய முதல் போட்டியைப் போன்று அதே திட்டத்தில் களமிறங்கினாலும், இளம் சுழல் பந்துவீச்சாளர் அகில தனஞ்சயவை (7 விக்கெட்டுகள்) களமிறக்கி அதிலும் வெற்றிகண்டது.
3. சுராங்க லக்மாலின் சிறப்பான தலைமைத்துவம்
இலங்கை டெஸ்ட் அணித்தலைவர் தினேஷ் சந்திமாலின் தடையை தொடர்ந்து தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள சுரங்க லக்மால் அணியை சிறப்பாக வழி நடத்துவதை காணக்கூடியதாக இருந்தது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியிலும் சரி, காலியில் நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் சரி தலைவர் என்ற ரீதியில் அவரது ஒத்துழைப்பை செவ்வனே செய்துமுடித்திருந்தார்.
காலியில் சுழல் பந்துக்கு சாதகமான மைதானத்தில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய லக்மால், துடுப்பாட்டத்திலும் முதல் இன்னிங்ஸில் 33 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்து, தலைவர் என்ற பொறுப்பை வெளிக்காட்டினார். தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் சுழல் பந்துவீச்சாளர்கள் மீது நம்பிக்கை வைத்த இவர், இரண்டாவது இன்னிங்ஸில் பந்து வீசாமல் அணியை வழிநடத்தினார்.
இதேபோன்று SSC மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சுழல் பந்து வீச்சாளர்களை வைத்து வியூகம் அமைத்த லக்மால், இரண்டாவது இன்னிங்ஸில் மாத்திரம் வெறும் இரண்டு ஓவர்களை வீசியிருந்தார். அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருந்தாலும், பந்தை தனது கையில் எடுக்காமல், ஆடுகளத்துக்கு ஏற்ப பந்து வீச்சாளர்களை கையாண்டமை அவருடைய தலைமைத்துவத்தை காட்டுவதுடன், அணியின் வெற்றிக்கும் வழிவகுத்தது.
4. தென்னாபிரிக்காவை அடக்கியாண்ட சுழல் பந்துவீச்சாளர்கள்
இந்த தொடர் முழுவதும் தங்களது சுழல் மாயாஜாலத்தால் தென்னாபிரிக்காவை கதிகலங்க வைத்த இலங்கையின் சுழல் பந்துவீச்சாளர்கள் 40 விக்கெட்டுகளில், மொத்தமாக 37 விக்கெட்டுகளை தங்கள் வசப்படுத்தியிருந்தனர். இதில் காலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் லக்மால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
துடுப்பாட்ட வீரர்களுக்கு எவ்வித வாய்ப்பையும் கொடுக்காத சுழல் பந்து வீச்சாளர்கள் தென்னாபிரிக்க அணியை 73 ஓட்டங்களுக்கு சுருட்டியதுடன், 126 மற்றும் 124 என்ற குறைந்த ஓட்டங்களுக்கும் அவர்களை திணறச் செய்தமை குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து குணதிலக்க இடைநிறுத்தம்
முதல் டெஸ்ட் போட்டியில் டில்ருவான் பெரேரா அசத்த, அவருக்கு ரங்கன ஹேரத் மற்றும் சந்தகன் ஆகியோர் ஒத்துழைப்பை வழங்கினர். இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இளம் வீரர் தனஞ்சய டி சில்வா முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி நம்பிக்கை கொடுக்க, ரங்கன ஹேரத் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது அனுபவத்தை வெளிக்காட்டியிருந்தார்.
இந்த தொடரில் டில்ருவான் பெரேரா மொத்தமாக 16 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், ரங்கன ஹேரத் 12 விக்கெட்டுகளையும், அகில தனஞ்சய ஒரு போட்டியில் 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தமை இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சின் வலிமையை டெஸ்ட் போட்டிகளில் எடுத்துக்காட்டியுள்ளது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<