இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் இன்று (24) நடைபெற்ற உலகக் கிண்ணத்துக்கான முதலாவது பயிற்சிப்போட்டியில், திமுத் கருணாரத்ன மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோர் அரைச்சதங்கள் கடந்தும் இலங்கை அணி 87 ஓட்டங்களால் தோல்வியத் தழுவியது.
கார்டிப் மைதானத்தில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. போட்டியில், முக்கியமாக ஸ்கொட்லாந்து தொடரில் அணியுடன் இணைந்திருக்காத வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க, இதுவரை அணியுடன் இணையாத நிலையில், அவர் இல்லாமல் இலங்கை அணி களமிறங்கியது. எனினும், தசைப்பிடிப்பு உபாதை காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக போட்டிகளில் பங்கேற்காத குசல் பெரேரா மீண்டும் அணிக்கு திரும்பியிருந்தார்.
உலகக் கிண்ணத்திற்கு முன்னரே அவிஷ்க பெர்னாண்டோவுக்கு உபாதை
இங்கிலாந்து ஆடுகளங்கள் துடுப்பாட்ட வீரர்களுக்கு அதிக சாதகத்தை கொண்டிருக்கும் என்ற எதிர்பார்ப்பு இந்த போட்டியில் நிஜமாகியிருந்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய எய்டன் மர்க்கரம் மற்றும் ஹஷிம் அம்லா வேகமாக ஓட்டங்களை குவிக்க தொடங்கினர். எனினும், இவர்கள் அரைச்சத இணைப்பாட்டத்தை நெருங்கிய போது, சுரங்க லக்மால் தனது ஸ்விங் பந்தின் மூலம் எய்டன் மர்க்ரமை ஆட்டமிழக்கச் செய்தார்.
பின்னர், ஹஷிம் அம்லாவுடன் ஜோடி சேர்ந்த தென்னாபிரிக்க அணித் தலைவர் பெப் டு ப்ளெசிஸ் இலங்கை வேகப்பந்து வீச்சாளர்களிடம் இருந்த அழுத்தத்தை குறைத்து ஓட்ட வேகத்தை அதிகரித்தார். இலங்கை அணியின் சுழல் பந்து வீச்சாளர்கள் முற்றுமுழுதாக ஏமாற்றத்தை வழங்க, துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் அரைச்சதம் கடந்தனர்.
இதற்கிடையில், இசுரு உதானவால் வீசப்பட்ட 18 ஆவது ஓவரில் டு ப்ளெசிஸ் அடித்த பந்தினை தடுக்கச் சென்ற இலங்கை அணியின் இளம் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ தடுக்கி விழுந்ததில் காலில் உபாதை (ஸ்டெச்சர் மூலம் வெளியேற்றப்பட்டார்) ஏற்பட்டது. ஸ்கொட்லாந்து தொடரில் அணியின் ஆரம்ப துடுப்பாட்டத்துக்கு வலுசேர்த்திருந்த இவரது உபாதை அணிக்கு ஏமாற்றத்தை வழங்கியது.
அவிஷ்க பெர்னாண்டோவின் உபாதை ஒரு பக்கம் அணிக்கு நெருக்கடியை கொடுக்க, தென்னாபிரிக்க அணியின் ஓட்டக்குவிப்பு இலங்கை அணியின் பந்து வீச்சை சோதனைக்குள்ளாக்கியது. இரண்டாவது விக்கெட்டுக்கான இணைப்பாட்டம் சதத்தை கடக்க, ஜீவன் மெண்டிஸின் அனுபவம் அணிக்கு கைகொடுத்தது. 65 ஓட்டங்களை பெற்றிருந்த ஹஷிம் அம்லா, மெண்டிஸின் சுழலில் பிடிப்பட்டார்.
தொடர்ந்து அடுத்த ஓவரில் பகுதிநேர பந்து வீச்சாளராக அழைக்கப்பட்ட தனன்ஜய டி சில்வா, அதிரடியாக துடுப்பெடுத்தாடிய டு ப்ளெசிஸை (88) பிடியெடுப்பு மூலமாக (லக்மால்) வெளியேற்றினார். இலங்கை அணி பாதியில் போட்டியை தங்கள் பக்கம் திருப்ப தொடங்கியது. புதிதாக களமிறங்கிய வென் டெர் டஸன் ஓட்டங்களை குவிக்க, அவரை தொடர்ந்து களமிறங்கிய டேவிட் மில்லரை இசுரு உதான ஆட்டமிழக்கச் செய்தார். தொடர்ந்து 41 ஓட்டங்களை பெற்றிருந்த வென் டெர் டெஸன், நுவன் பிரதீப்பின் பௌன்சரில் வெளியேறினார்.
இந்த இரண்டு ஆட்டமிழப்புகளிலும் பந்து வீச்சாளர்களின் பங்கை விட, களத்தடுப்பாளர்களின் பங்கு அதிகமாகவே இருந்தது. டேவிட் மில்லர் மின்னல் வேகமாக அடித்த பந்தை திமுத் கருணாரத்ன இலாவகமாக பிடித்துக்கொண்டதுடன், தனன்ஜய டி சில்வா வென் டெர் டஸனின் பிடியெடுப்பை டைவிங் செய்து பிடித்துக்கொண்டார். இந்த இரண்டு பிடியெடுப்புகளும் இலங்கை அணியின் களத்தடுப்பை வலிமையாக காட்டியது.
தென்னாபிரிக்க அணியின் முன்வரிசை வீரர்கள் பெற்றுக்கொடுத்த ஓட்ட வேகத்தை பொருத்தவரை அந்த அணி ஒரு கட்டத்தில் 400 ஓட்டங்களை பெறும் என எதிர்பார்க்கப்பட்ட போதும், இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள் இன்னிங்ஸின் பிற்பகுதியில் சிறப்பாக செயற்பட்டிருந்தனர். எனினும், இறுதி 3 ஓவர்களில் தென்னாபிரிக்க அணி ஓட்ட வேகத்தை அதிகரிக்க 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 338 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். தென்னாபிரிக்க அணியின் பின்வரிசை வீரர்களில் எண்டைல் பெஹலுக்வாயோ 35 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொள்ள, பந்து வீச்சில் சுரங்க லக்மால் மற்றும் நுவன் பிரதீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர், 339 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பாடக் களமிறங்கிய இலங்கை அணி தங்களுடைய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ உபாதை அடைந்திருந்தமையால், ஆரம்ப ஜோடியில் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. குசல் ஜனித் பெரேரா மற்றும் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர். எனினும், துரதிஷ்டவசமாக இரண்டு மாதங்களுக்கு பின்னர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பிய குசல் ஜனித் பெரேரா ஓட்டங்களின்றி அவர் முகங்கொடுத்த இரண்டாவது பந்தில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து இலங்கை அணிக்கு தனது அனுபவத்தின் மூலமாக ஓட்டங்களை பெற்றுக்கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட லஹிரு திரிமான்ன 10 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து லுங்கி என்கிடியின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இலங்கை அணி 10 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து மோசமான ஆரம்பத்தை பெற்றிருந்தது.
எவ்வாறாயினும் அணித் தலைவர் என்ற ரீதியில் நிதானமான ஆட்டத்தை திமுத் கருணாரத்ன வெளிப்படுத்த, மறுமுனையில் குசல் மெண்டிஸ் நிதானமாக ஆரம்பித்து, பின்னர் வேகமாக ஓட்டங்களை பெற முற்பட்டார். இவரின் சிறந்த துடுப்பாட்டத்துடன் இலங்கை அணி முதல் 10 ஓவர்களில் மதிக்கத்தக்க ஓட்டங்களை பெற்றது. எனினும், துரதிஷ்டவசமாக குசல் மெண்டிஸ் 37 ஓட்டங்களுடன் எண்டைல் பெஹலுக்வாயோவின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, இலங்கை அணி 72 ஓட்டங்களுக்கு தனது 3 ஆவது விக்கெட்டை இழந்தது.
இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோர் தங்களுடைய அனுபவத்தால் ஓட்டங்களை நிதானமாக உயர்த்தினர். திமுத் கருணாரத்ன ஸ்கொட்லாந்து அணிக்கு எதிராக அரைச்சதம் கடந்ததுடன், இந்தப் போட்டியிலும் தொடர்ச்சியாக தனது இரண்டாவது அரைச்சதத்தை கடந்தார். இவர்கள் இருவரும் நான்காவது விக்கெட்டுக்காக 98 ஓட்டங்களை பகிர்ந்த வேளையில், திமுத் கருணாரத்ன 87 ஓட்டங்களுடன் ககிஸோ ரபாடாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
உலகக் கிண்ண விஷேட தூதுவராக மஹேல ஜயவர்தன
திமுத் கருணாரத்னவின் விக்கெட் வீழ்த்தப்பட்ட பின்னர் இலங்கை அணி முற்றுமுழுதாக தடுமாறியது. குறிப்பாக அஞ்செலோ மெதிவ்ஸ் மாத்திரம் அரைச்சதம் கடக்க, ஏனைய துடுப்பாட்ட வீரர்களில் ஜீவன் மெண்டிஸ் மாத்திரமே இரட்டை இலக்க ஓட்டங்களை (18) அடைந்தார். அஞ்செலோ மெதிவ்ஸ், திமுத் கருணாரத்னவுக்கு அடுத்தபடியாக 64 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, இலங்கை அணி 42.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 251 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
எவ்வாறாயினும், இந்தப் போட்டியில் உபாதைக்கு உள்ளாகியிருந்த அவிஷ்க பெர்னாண்டோ துடுப்பெடுத்தாடவில்லை என்பதுடன், பந்து வீசும் போது உபாதைக்குள்ளான இசுரு உதானவும் துடுப்பெடுத்தாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படி முதலாவது உலகக் கிண்ண பயிற்சிப்போட்டியில் இலங்கை அணி 87 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளதுடன், இரண்டாவது பயிற்சிப்போட்டியில் எதிர்வரும் 27 ஆம் திகதி அவுஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. இதேவேளை, தென்னாபிரிக்க அணி தங்களுடைய அடுத்த பயிற்சிப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்வரும் 26 ஆம் திகதி எதிர்கொள்கிறது.
போட்டியின் சுருக்கம்
தென்னாபிரிக்கா – 338/7 (50) – பெப் டு ப்ளெசிஸ் 88, ஹஷிம் அம்லா 65, ரஸ்ஸி வென் டெர் டஸன் 40, சுரங்க லக்மால் 63/2, நுவன் பிரதீப் 77/2
இலங்கை – 251 (42.3) – திமுத் கருணாரத்ன 87, அஞ்செலோ மெதிவ்ஸ் 64, குசல் மெண்டிஸ் 37, எண்டைல் பெஹலுக்வாயோ 36/4, லுங்கி என்கிடி 12/2
முடிவு – தென்னாபிரிக்க அணி 87 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<