உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அரையிறுதி வாய்ப்புக்காக போராடிக்கொண்டிருக்கும் இலங்கை அணி, நாளைய தினம் (28) அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்திருக்கும் தென்னாபிரிக்க அணியை டர்ஹாமில் அமைந்துள்ள ரிவர்சைட் மைதானத்தில் எதிர்கொள்கிறது.
இம்முறை உலகக் கிண்ணம் ஆரம்பிக்கும் தருணத்தில் எவ்வித எதிர்பார்ப்புகளும் இன்றி களமிறங்கியிருந்த இலங்கை அணி, 2 வெற்றிகள், 2 கைவிடப்பட்ட போட்டிகள் மற்றும் 2 தோல்விகள் என 6 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. தொடரின் ஆரம்பத்தில் இலங்கை அணி தடுமாறியிருந்த போதும், இறுதியாக பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை வீழ்த்தி அதீத நம்பிக்கையுடன் தென்னாபிரிக்க அணியை எதிர்கொள்ள தயாராகியுள்ளது.
அடுத்தப் போட்டியில் வெற்றிபெற இலங்கை என்ன செய்ய வேண்டும்?
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் …….
கடந்த போட்டியில் இலங்கை அணியின் துடுப்பாட்டத்தை விடவும், அவர்களது பந்துவீச்சு அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தது. அத்துடன், அஞ்செலோ மெதிவ்ஸின் நிதான துடுப்பாட்டமும் வெற்றிக்கு வழி வகுத்திருந்தது. குறிப்பாக, இந்தப் போட்டியில் மெதிவ்ஸ், லசித் மாலிங்க மற்றும் விக்கெட்டினை கைப்பற்றாவிட்டாலும் பந்துவீச்சில் அழுத்தம் கொடுத்திருந்த திசர பெரேரா ஆகிய அனுபவ வீரர்களின் பங்களிப்பு வரவேற்க தக்கதாக மாறியிருந்தது.
இவ்வாறு அனுபவ வீரர்கள் முன்மாதிரியாக தங்களது பங்களிப்பை மிகச்சிறப்பாக வழங்கியிருந்த நிலையில், அடுத்த போட்டியில் இளம் வீரர்கள் தங்களுடைய பங்களிப்பை வழங்குவதற்கான உத்வேகம் ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றியை பெற்றிருந்த போதும், அணியின் சில நகர்வுகளில் எதிர்வரும் போட்டிகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆரம்ப போட்டிகளில் இலங்கை அணியின் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்கள் சோபிக்க தவறியிருந்த போதிலும், கடந்த போட்டியில் மெண்டிஸ், மெதிவ்ஸ் மற்றும் தனன்ஜய டி சில்வா ஆகியோர் ஓட்டக்குவிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
எனினும், தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் சோபிக்க தவறியிருந்த இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் மீண்டும் தங்களுடைய ஓட்டக்குவிப்பை ஆரம்பிக்க வேண்டும். அதேநேரம், ஒவ்வொரு போட்டிகளிலும் தனித்தனியாக ஓட்டங்களை குவித்திருந்த துடுப்பாட்ட வீரர்கள், நாளைய போட்டியில் அணியாக இணைந்து ஓட்டங்களை குவிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றது.
அதேநேரம், 6வது இடத்தில் அடிக்கடி மாற்றங்களை ஏற்படுத்தும் போதும், வாய்ப்புகளை ஜீவன் மெண்டிஸ் மற்றும் மிலிந்த சிறிவர்தன ஆகியோர் பயன்படுத்திக்கொள்ள தவறுகின்றமை இலங்கை அணிக்கு மற்றுமொரு சிக்கலாக மாறியிருக்கின்றது. தற்போது அணிக்கான முக்கியமான போட்டிகள் நெருங்கும் தருணத்தில் இவர்கள் தங்களுடைய பங்களிப்பை கட்டாயம் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
தென்னாபிரிக்க அணியை பார்க்கும் போது, உலகக் கிண்ணத் தொடர் ஆரம்பிக்கும் முன்னர் எதிர்பார்க்கப்பட்ட அணியாக இருந்த போதும், பின்னர், ஏமாற்றத்துக்குள்ளான அணியாக மாறியிருந்தது. அதுமாத்திரமின்றி உலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பை இழந்த இரண்டாவது அணியாகவும் தென்னாபிரிக்க அணி பதிவானது.
Photo Album : Sri Lanka vs England | ICC Cricket World Cup 2019 – Match 27
இப்போதுவரை தங்களுடைய 7 போட்டிகளில் விளையாடியுள்ள தென்னாபிரிக்க அணி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளதுடன், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டிருந்தது. இவ்வாறு தோல்விகளுக்கு மத்தியில் உலகக் கிண்ணத்தில் விளையாடி வரும் தென்னாபிரிக்க அணி இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் தங்களுடைய முழு பலத்தையும் வெளிப்படுத்தி இலங்கைக்கு சவால் கொடுக்க காத்திருக்கிறது.
இது இவ்வாறிருக்கையில், நாளைய போட்டி நடைபெறவுள்ள ரிவர்சைட் மைதானம் இலங்கை அணிக்கு கடந்த காலங்களில் சாதகம் வழங்கியுள்ள மைதானமாக அமைந்துள்ளது. இதுவரையில், இந்த மைதானத்தில் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி (இங்கிலாந்துக்கு எதிராக) குறித்த போட்டிகள் இரண்டிலும் வெற்றிபெற்றுள்ளது. அதனால், வெற்றியின் நம்பிக்கையுடன் உள்ள இலங்கை அணி, மைதானத்தின் மீதுள்ள நம்பிக்கையுடனும் தென்னாபிரிக்க அணியை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணிகளதும் ஒருநாள் போட்டி மோதல்கள்
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணியின் கடந்தகால ஒருநாள் முடிவுகளை பார்க்கும் போது, தென்னாபிரிக்க அணி அதிகம் சாதகம் கொண்ட அணியாக உள்ளது. அதேநேரம், உலகக் கிண்ணத் தொடர்களில் இரண்டு அணிகளும் மோதியுள்ள 5 போட்டிகளில் இலங்கை ஒரு வெற்றியையும், தென்னாபிரிக்க அணி 3 வெற்றிகளையும் பெற்றுள்ளன.
அதுமாத்திரமின்றி இறுதியாக இலங்கை அணி தென்னாபிரிக்க அணியை எதிர்கொண்டு விளையாடிய ஒருநாள் தொடரில் 0-5 என வைட்வொஷ் முறையில் தோல்வியை சந்தித்திருந்தது. அதனால், இந்தப் போட்டி இலங்கை அணிக்கு மிக சவாலான போட்டியாக அமையும். எனினும், தென்னாபிரிக்க அணியின் தற்போதைய சூழ்நிலையை பயன்படுத்தி இலங்கை அணி குறித்த சவாலை சிறப்பாக எதிர்கொள்ள எதிர்பார்த்துள்ளது.
எதிர்பார்ப்பு வீரர்கள்
லசித் மாலிங்க
நாளைய போட்டியில் இலங்கை அணியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் வீரராக லசித் மாலிங்க இருக்கிறார். இந்த உலகக் கிண்ணத் தொடரில் சிறப்பாக பந்துவீசி வரும் இவர், இங்கிலாந்து அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகளை கைப்பற்றியமை இவர் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
அதுமாத்திரமின்றி லசித் மாலிங்கவின் அனுபவம் மற்றும் அவர் கையாளும் உத்திகள் என்பவற்றை ஏனைய பந்துவீச்சாளர்களுடன் பகிர்ந்துக்கொள்வதன் மூலம் அணியின் பந்துவீச்சை மேலும் பலப்படுத்தும் வீரராக மாலிங்க அமைவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இம்ரான் தாஹீர்
ஒருநாள் போட்டிகளை பொருத்தவரை இலங்கை அணிக்கு சுழல் பந்துவீச்சால் அதிகம் நெருக்கடி கொடுத்து வருபவர் இம்ரான் தாஹீர். இறுதியாக நடைபெற்ற இருதரப்பு தொடரிலும் இலங்கை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இவரது பந்துவீச்சு இருந்தது.
அதேநேரம், இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 15.03 என்ற சராசரியில் 33 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள இம்ரான் தாஹீர், நாளைய போட்டியில் தென்னாபிரிக்க அணியின் முக்கிய துறுப்புச்சீட்டாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தேச பதினொருவர்
இலங்கை அணியை பொருத்தவரை மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இல்லை. கடந்த போட்டியில் எதிர்பார்க்கப்பட்ட மாற்றமான ஜீவன் மெண்டிஸ் சோபிக்க தவறியிருந்தாலும், இந்தப் போட்டியில் அவருக்கான இன்னுமொரு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை அணி
திமுத் கருணாரத்ன (தலைவர்), குசல் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், தனன்ஜய டி சில்வா, திசர பெரேரா, ஜீவன் மெண்டிஸ், இசுரு உதான, லசித் மாலிங்க, நுவான் பிரதீப்
இதேவேளை, தென்னாபிரிக்க அணி இறுதியாக பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டிருந்த நிலையில், குறித்த போட்டியில் விளையாடிய அதே அணி நாளைய போட்டியிலும் விளையாடும் என குறிப்பிடப்படுகிறது.
தென்னாபிரிக்க அணி
குயின்டன் டி கொக், ஹசிம் அம்லா, எய்டன் மர்க்ரம், பெப் டு ப்ளெசிஸ், டேவிட் மில்லர், ரஸ்ஸி வென் டெர் டஸன், எண்டிலே பெஹ்லுக்வாயோ, க்ரிஸ் மொரிஸ், ககிஸோ ரபாடா, லுங்கி என்கிடி, இம்ரான் தாஹீர்
ஆடுகளம் மற்றும் காலநிலை
ரிவர்சைட் மைதானத்தின் ஆடுகளம் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. புற்கள் அற்ற தட்டையான ஆடுகளம் என்பதால் அணிகள் ஓட்டங்கள் பெறவேண்டிய கட்டயாம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், நாளைய போட்டியின் காலநிலையை பொருத்தவரை, போட்டியில் மழை குறுக்கிடுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<