அடுத்த போட்டியில் வெற்றிபெற இலங்கை என்ன செய்ய வேண்டும்?

4304

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான  போட்டியில் இலங்கை அணி மிகச்சிறந்த ஆரம்பத்தை பெறுமாயின், தடுமாறி வரும் தென்னாபிரிக்க அணியை வெற்றிக்கொள்ள முடியும் என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹதுருசிங்க கருத்து தெரிவித்துள்ளார்.

உலகின் முதல் நிலை ஒருநாள் அணியான இங்கிலாந்தை கடந்த போட்டியில் வெற்றி கொண்டிருந்த இலங்கை அணி, தங்களுடைய அரையிறுதிக்கான பயணத்தை ஆரம்பித்திருக்கிறது. குறித்த இலக்கினை அடைவதற்கு அடுத்து வரும் போட்டிகளில் கட்டாய வெற்றியினை நோக்கியிருக்கும் இலங்கை, நாளை மறுதினம் (28) தென்னாபிரிக்க அணியை எதிர்கொள்ளவுள்ளது.

“இங்கிலாந்தை வீழ்த்த காரணம் மோர்கனின் கருத்து”: தனன்ஜய

இங்கிலாந்து அணியின் தலைவர் இயன் மோர்கன்……….

தென்னாபிரிக்க அணி ஏற்கனவே உலகக் கிண்ண அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்துள்ள நிலையில், அந்த அணிக்கான சிறந்த திட்டங்களுடன் விளையாடும் பட்சத்தில் இலங்கை அணியால் வெற்றிபெற முடியும் என ஹதுருசிங்க நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

“சிறந்த திட்டங்களுடன் விளையாடும் அணிகளில் ஒன்று இங்கிலாந்து. அவர்களை வீழ்த்துவதற்கு நாம் ஆரம்பத்திலிருந்து அழுத்தத்தை கொடுத்திருந்தோம். குறித்த ஆழுத்தத்தின் ஊடாகவே அவர்களை எம்மால் வெற்றிக்கொள்ள முடிந்தது. அதேபோன்ற ஒரு திட்டத்துடன் அடுத்தப் போட்டியில் களமிறங்கவுள்ளோம்”

ஆனால், கடந்த காலங்களில் இலங்கை அணிக்கு எதிராக பல வெற்றிகளை குவித்துள்ள அணிகளில் ஒன்று தென்னாபிரிக்கா. உலகக் கிண்ணத்தில் அவர்கள் சறுக்கியிருந்தாலும், அவர்களை பலவீனமான அணியென கூறமுடியாது. அவர்களிடமிருந்து ஒரு வெற்றியை பெற வேண்டுமானால், இலங்கை அணி தங்களுடைய முழுத் திறமையையும் வெளிப்படுத்த வேண்டும்

நாம் இந்த தொடர் முழுவதும் சிறந்த ஆரம்பத்தை பெறவேண்டும் என்பதில் அவதானம் செலுத்தி வருகின்றோம். குறிப்பாக, தென்னாபிரிக்க போட்டியில் சிறந்த ஆரம்பத்தை பெற்று, விரைவாக நாம் ஆதிக்கத்தை செலுத்த வேண்டும். ஒவ்வொரு போட்டிகளிலும் நாம் இதைத்தான் எதிர்பார்க்கிறோம். 

அதுமாத்திரமின்றி கடந்த போட்டியில் எதிரணியின் முக்கியமான வீரர்களை கட்டுப்படுத்தியிருந்தோம். அதன் மூலமே வெற்றியினையும் தக்கவைத்தோம். அடுத்தப் போட்டியிலும் எதிரணியில் பிரகாசிக்கக்கூடிய வீரர்களை கட்டுப்படுத்தினால், அவர்களிடமிருந்து வெற்றியை பறிக்க முடியும் என்பதுடன், கடந்த போட்டியை போன்று எமது முன்னணி வீரர்களும் பிரகாசிக்க வேண்டும்” என்றார்.

இதேவேளை, இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசையில் ஆறாவது இடத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு தேவையான மாற்று வீரர்கள் அணியில் இல்லை. ஆனாலும், கடந்த போட்டிகளில் முதல் ஆறு வீரர்களும் ஒவ்வொரு போட்டிகளில் ஓட்டங்களை பெற்றுக்கொண்டிருந்தனர். எனினும், அடுத்த போட்டியில் துடுப்பாட்ட வரிசையில் உள்ள முதல் ஆறு வீரர்களும் ஒரு அணியாக பிரகாசிக்க வேண்டும் என ஹதுருசிங்க சுட்டிக்காட்டியிருந்தார்.

உலகக் கிண்ணத் தொடரில் அதிகம் எதிர்பார்ப்பு இல்லாமல் களமிறங்கிய இலங்கை அணி, தற்போது அரையிறுதிக்கான வாய்ப்புக்காக போராடிக்கொண்டுள்ளது. அடுத்து நடைபெறவுள்ள தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை வெற்றிபெற்றால் புள்ளிப் பட்டியலில் 8 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணியுடன் இணைந்துக்கொள்ள வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<