இங்கிலாந்து- இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவருகிறது. இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில் இன்று 3ஆவது போட்டி நடைபெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் தலைவர் இயோன் மோர்கன் முதலில் பந்துவீச்சைத் தீர்மானம் செய்தார். அதன்படி இலங்கை அணியின் பெரேரா, குணதிலகா ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களம் இறங்கினார்கள்.
பெரேரா 9 ஓட்டங்களை எடுத்த நிலையிலும், குணதிலகா 1 ஓட்டத்தை எடுத்த நிலையிலும் ஆட்டம் இழந்தனர். அடுத்த வந்த குசால் மெண்டிஸ் 66 பந்துகளில் 53 ஓட்டங்களோடும், சந்திமால் 77 பந்துகளில் 62 ஓட்டங்களோடும், தலைவர் மெதிவ்ஸ் 67 பந்துகளில் 56 ஓட்டங்களோடும் ஆட்டம் இழந்தனர். இதனால் இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கை கௌரவமாக சென்று கொண்டிருந்தது.
அதன்பின் தரங்க (40) தவிர மற்ற வீரர்கள் ஒற்றைப்பட எண்ணில் வெளியேற இலங்க அணியால் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 248 ஓட்டங்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இங்கிலாந்து அணி சார்பில் பிளங்கெட், வோக்ஸ் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்கள்.
பின் 249 என்ற வெற்றி இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களமிறங்கியது. முதல் ஓவரின் 3ஆவது பந்தில் கடந்த போட்டியில் சதம் அடித்த அலெக்ஸ் ஹேல்ஸ் ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டம் இழந்தார். பின் இங்கிலாந்து அணி 4 ஓவர்கள் முடிவில் 1 விக்கட் இழப்பிற்கு 16 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் மழை பெய்தது. அதன் பின் தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி கைவிடப்பட்டது.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 4ஆவது ஒருநாள் போட்டி 29ஆம் திகதி நடைபெறவுள்ளது.