கேப் டவுனில் நடைபெற்ற இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளான இன்று ககிஸோ ரபாடாவின் அபார பந்து வீச்சின் மூலம் தென்னாபிரிக்க அணி 282 ஓட்டங்களால் இலகுவாக வெற்றியீட்டியது.
தமது இரண்டாவது இன்னிங்சிற்காக 130 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்த நிலையில், இன்று களமிறங்கிய இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களை மதிய போசன இடைவேளைக்கு முன்னதாக வீழ்த்தி, ஒன்றரை நாள் எஞ்சிய நிலையில் தென்னாபிரிக்க அணி போட்டியை வெற்றி கொண்டது. இதன்மூலம், மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை வென்று, 2-0 என்ற அடிப்படையில் அவ்வணி முன்னிலை பெற்றுள்ளது.
இலங்கையுடனான டெஸ்ட் தொடரை கைப்பற்றுவதற்கு தென்னாபிரிக்காவுக்கு இன்னும் 6 விக்கெட்டுகள் தேவை
இன்றைய நாளுக்காக கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் தினேஷ் சந்திமல் ஆகியோர் ஐந்தாவது விக்கெட்டுக்காக 75 ஓட்டங்களைப் பகிர்ந்துகொண்டிருந்த வேளை, ககிஸோ ரபாடாவின் பந்து வீச்சில் சந்திமல் நேரடியாக ஸ்கெயார் லெக்கில் பிடி கொடுத்து இன்றைய முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.
அதனை தொடர்ந்து களமிறங்கிய உபுல் தரங்க அதிரடியாக பெற்றுக்கொண்ட மூன்று பவுண்டரிகளுடன் 12 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை மீண்டும் ககிஸோ ரபாடாவின் பந்து வீச்சில், ஸ்லிப்பில் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். அதே ஓவரில் அஞ்செலோ மெதிவ்ஸ் 49 ஓட்டங்களுடன் அரை சதம் பெறும் வாய்ப்பை இழந்து துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார். இது ரபாடாவின் ஐந்தாவது விக்கெட்டாக இருந்தது.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ரங்கன ஹேரத், இலங்கை அணி தோல்வியடைவதை தனது துடுப்பாட்டத்தின் மூலம் சற்றே தாமதப்படுத்தினார். 45 பந்துகளை எதிர்கொண்ட அவர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் நான்கு பவுண்டரிகள் உள்ளடங்கலாக 35 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட போதிலும், பின் வரிசையின் ஏனைய துடுப்பாட்ட வீரர்களை தென்னாபிரிக்க அணி இலகுவாக வீழ்த்தியது.
சுரங்க லக்மாலின் விக்கெட்டினை வீழ்த்தியதன் மூலம் ரபாடா டெஸ்ட் போட்டியில் இரண்டாவது முறையாக 10 விக்கெட்டுக்களை பெற்றுக்கொண்டார். இந்த 10 விக்கெட்டுக்களை தனது கிரிகெட் வாழ்கையில் 13ஆவது சர்வதேச டெஸ்ட் போட்டியிலேயே ரபாடா கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணியை 110 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்திய தென்னாபிரிக்க அணி பந்து வீச்சாளர்கள்
ஒன்பதாவது விக்கெட்டுக்காக ரங்கன ஹேரத் மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் 33 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். இறுதி இரண்டு விக்கெட்டுகளையும் கேசவ் மகாராஜ் மற்றும் வெர்னன் பிலெண்டர் ஆகியோர் விழ்த்தினர்.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி எதிர்வரும் 12ஆம் திகதி ஜோகனஸ்பர்க்கில் நடைபெறவுள்ளது.