அணிக்கு முழுமையாக பங்களிக்க முடியாமல் மைதானத்திலிருந்து வெளியேறிய திக்வெல்ல

1879

இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில், நேற்று (01) தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில், தென்னாபிரிக்க அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரில் 2-0 என முன்னிலைபெற்றுள்ளது.

டி கொக்கின் அதிரடியுடன் இரண்டாவது வெற்றியை சுவைத்த தென்னாபிரிக்கா

இலங்கை அணிக்கு எதிராக தம்புள்ளை ரங்கிரி சர்வதேச…

முதல் போட்டியில் துடுப்பாட்ட வீரர்களின் கவனக்குறைவினால், வெற்றியை தவறவிட்டிருந்த இலங்கை அணி, நேற்றைய தினம் துடுப்பாட்டம், பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பு என அனைத்து துறைகளிலும் மோசமாக செயற்பட்டு தோல்வியை தழுவியது.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த நிரோஷன் டிக்வெல்ல (69 ஓட்டங்கள்), போட்டி நிறைவடைந்த பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடுகையில், தோல்விக்கான காரணம் அணி வீரர்களின் மோசமான களத்தடுப்பு என்பதை தெளிவுப்படுத்தியுள்ளார்.

அங்கு அவர் குறிப்பிடுகையில்,

எமது அணியின் களத்தடுப்பு முதல் 10 ஓவர்களில் மிகவும் மோசமாக இருந்ததை அவதானிக்க முடிந்தது. போட்டியின் போது களத்தடுப்பில் சிறிய தவறுகள் இடம்பெறுவது வழமை. ஆனால் அணியாக நாம் தவறுகளை திருத்திக்கொண்டு விளையாட வேண்டும். அடுத்த முறை நாம் இந்த தவறுகளை விடாமல் விளையாடுவதற்கு முயற்சிக்க வேண்டும்

அத்துடன் நாம் ஆறு துடுப்பாட்ட வீரர்களுடன் போட்டியில் விளையாடினோம். இதில் மூன்று பேர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றால் அணியால் அதிகமான ஓட்டங்களை குவிக்க இயலாது. தம்புள்ளை ஆடுகளமானது இரவிலும் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக இருந்தது. நாம் தவறுகளுக்கு தொடர்ந்து இடமளிக்க முடியாது. அடிப்படையில் இருந்து நாம் ஆட்டத்தை கட்டியெழுப்ப வேண்டும். சிறந்த ஓட்ட இலக்கை நிர்ணயிக்க முடிந்தால்தான், எதிரணியை கட்டுப்படுத்த முடியும்என்றார்.

நேற்றைய போட்டியில் துடுப்பெடுத்தாடும் போது, வியாம் முல்டரின் பந்து வீச்சை எதிர்கொண்ட நிரோஷன் டிக்வெல்லவின் மார்பு பகுதியில் பந்து கடுமையாக தாக்கியது. இதனால் மைதானத்தில் சுருண்டு விழுந்த டிக்வெல்ல, மீண்டும் எழுந்து துடுப்பெடுத்தாடினார். எனினும் பின்னர் ஆட்டமிழந்து வெளியேறிய அவர், விக்கெட் காப்பாளராக செயற்பட்டுக் கொண்டிருந்த போது திடீரென மைதானத்தை விட்டு வெளியேறினார். இது தொடர்பில் குறிப்பிட்ட அவர்,

பந்து தாக்கிய பிறகும் துடுப்பெடுத்தாடினேன். பின்னர் ஆட்டமிழந்து வெளியேறிய பிறகு, என்னால் விக்கெட் காப்பாளராக செயற்பட முடியும் என நினைத்தேன். விக்கெட் காப்பாளராக செயற்பட்ட போது, அணிக்கு நூறு சதவீதத்தை கொடுக்க முடியாது என்று உணர்ந்தேன். இதனால் அணித் தலைவரிடம் கூறிவிட்டு மைதானத்திலிருந்து வெளியேறினேன். இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட எக்ஸ்ரே பரிசோதனையில் காயம் எதுவும் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. அடுத்த போட்டி எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது. குறித்த போட்டியில் விளையாட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது

இதேவேளை தொடர்ந்து ஓட்டங்களை பெறுவதில் சிக்கலை எதிர்கொண்டிருந்த டிக்வெல்ல, நேற்றைய தினம் அரைச்சதம் ஒன்றினை பெற்றுக்கொடுத்திருந்தார். இதுகுறித்து கூறிய அவர்,

அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் திலான் சமரவீர மற்றும் தலைமை பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்க ஆகியோரிடம் எனது துடுப்பாட்டம் குறித்து கலந்துரையாடினேன். எனது துடுப்பாட்டத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தேன். குறித்த மாற்றங்கள் எனக்கு உதவவில்லை. இதனால் பயிற்றுவிப்பாளர்களுடன் கலந்துரையாடி, நான் ஆரம்பத்தில் கையாண்ட துடுப்பாட்ட யுத்திகளுடன் மீண்டும் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தேன். இந்த மாற்றம் எனக்கு இன்று (நேற்று) உதவியது.” என குறிப்பிட்டார்.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி கண்டி பல்லேகலை மைதானத்தில் எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<