வேகப்பந்து வீச்சாளர்களால் முதல் நாளில் வலுப்பெற்றுள்ள இலங்கை அணி

2106

சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் முதல் நாள் ஆட்ட நிறைவில் இலங்கை அணி வேகப்பந்து வீச்சாளர்களின் அபாரத்தினால் முன்னிலை பெற்றுள்ளது.

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர் என்பவற்றில் ஆடுகின்றது.

“எமது துடுப்பாட்ட வீரர்களால் ஓட்டங்களை குவிக்க முடியும்” – திமுத் நம்பிக்கை

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக இன்று (13)..

இந்த சுற்றுப் பயணத்தின் முதல் கட்டமாக நடைபெறும் இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி டர்பன் நகரில் இன்று (13) ஆரம்பமாகியிருந்தது.

போட்டியின்  நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை டெஸ்ட் அணியின் புதிய தலைவர் திமுத் கருணாரத்ன முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தென்னாபிரிக்க அணிக்கு வழங்கினார். இந்த டெஸ்ட் போட்டி மூலம் கருணாரத்ன இலங்கை அணியினை டெஸ்ட் போட்டிகளில் வழிநடாத்திய 17ஆவது தலைவராக மாறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்காவுடனான இந்தப் போட்டியில் இலங்கை அணி இரண்டு புதுமுக வீரர்களுக்கு இப்போட்டியில் வாய்ப்பு வழங்கியிருந்தது. அந்தவகையில் இளம் இடதுகை சுழல் வீரரான லசித் எம்புல்தெனிய மற்றும் வலதுகை துடுப்பாட்ட வீரர் ஓஷத பெர்னாந்து ஆகியோர் தமது கன்னி சர்வதேச டெஸ்ட் போட்டியில் களமிறங்கியிருந்தனர்.

இலங்கை அணி – திமுத் கருணாரத்ன (அணித்தலைவர்), லஹிரு திரிமான்ன, தனன்ஞய டி சில்வா, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, ஓஷத பெர்னாந்து , நிரோஷன் திக்வெல்ல, சுரங்க லக்மால், லசித் எம்புல்தெனிய, கசுன் ராஜித, விஷ்வ பெர்னாந்து

Photos: Sri Lanka tour of South Africa 2019 | 1st Test – Day 1

மறுமுனையில் பாப் டூ ப்ளெசிஸ் தலைமையிலான தென்னாபிரிக்க அணி நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் சுழல் பந்துவீச்சாளரான கேசவ் மஹராஜையும் அணிக்கு அழைத்திருந்தது.

தென்னாபிரிக்க அணி – டீன் எல்கார், எய்டன் மார்க்ரம், ஹஷிம் அம்லா, பாப் டூ ப்ளெசிஸ் (அணித்தலைவர்), டெம்பா பெவுமா, குயின்டன் டீ கொக், வெர்னன் பிலாந்தர், கேசவ் மஹராஜ், டேல் ஸ்டெய்ன், டுஆன்னே ஒலிவர், ககிஸோ றபாடா

இதனை அடுத்து நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தென்னாபிரிக்க அணி டீன் எல்கார் மற்றும் எய்டன் மார்க்ரம் ஆகியோருடன் ஆரம்பம் செய்தது.

எனினும் தென்னாபிரிக்க அணிக்கு எதிர்பார்த்த ஆரம்பம் அமையவில்லை. போட்டியின் இரண்டாவது ஓவரில் இலங்கை அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் விஷ்வ பெர்னாந்துவின் பந்தினை எதிர்கொண்ட டீன் எல்கார் அதனை விக்கெட்காப்பாளர் நிரோஷன் திக்வெல்லவிடம் பிடிகொடுத்து ஓட்டம் எதனையும் பெறாமல் ஆட்டமிழந்தார்.

>>நாங்கள் முன்னேறியே வந்திருக்கின்றோம்: சந்திக ஹதுருசிங்க

இதன் பின்னர் புதிய துடுப்பாட்ட வீரராக வந்த அனுபவ வீரர் ஹஷிம் அம்லாவும் நிலைக்கவில்லை. இலங்கை அணியின் சிரேஷ்ட வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மாலின் பந்துவீச்சை எதிர்கொண்ட அம்லா, அதனை ஸ்லிப் களத்தடுப்பாளராக இருந்த குசல் மெண்டிஸிடம் பிடிகொடுத்தார். இந்த ஆட்டமிழப்பை களநடுவர் நிராகரித்த போதிலும், போட்டியின் மூன்றாம் நடுவரின் உதவியோடு அது ஆட்டமிழப்பு என உறுதி செய்யப்பட்டது. இதனால், ஹஷிம் அம்லா வெறும் 3 ஓட்டங்களுடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

சிறிது நேரத்தில் தென்னாபிரிக்க அணியின் ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் எய்டன் மார்க்ரமின் விக்கெட்டும் 11 ஓட்டங்களுடன் விஷ்வ பெர்னாந்துவினால் பறிபோனது. இதனால், ஒரு கட்டத்தில் தென்னாபிரிக்க அணி 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை பறிகொடுத்து தடுமாறியது.

எனினும், புதிய துடுப்பாட்ட வீரர்களாக களம் வந்த அணித்தலைவர் பாப் டூ ப்ளெசிஸ் மற்றும் டெம்பா பெவுமா ஆகியோர் பொறுமையான முறையில் இணைப்பாட்டம் ஒன்றினை தென்னாபிரிக்க அணியின் நான்காம் விக்கெட்டுக்காக உருவாக்கினர். இந்த இணைப்பாட்டம் போட்டியின் முதல் நாள் மதிய உணவு இடைவேளைக்கு முன்னதாக டூ ப்ளெசிஸின் விக்கெட்டோடு முடிவுக்கு வந்தது. தென்னாபிரிக்க அணியின் நான்காம் விக்கெட்டுக்காக 72 ஓட்டங்களை பகிர்ந்த டூ ப்ளெசிஸ் 35 ஓட்டங்களுடன் கசுன் ராஜிதவின் வேகத்திற்கு இரையாகியிருந்தார்.

மதிய உணவு இடைவேளையை அடுத்து தொடர்ந்த போட்டியில் குயின்டன் டி கொக் உடன் ஜோடி சேர்ந்திருந்த டெம்பா பெவுமா அரைச்சதம் ஒன்றினை நெருங்கி வந்த நிலையில் விஷ்வ பெர்னாந்து செய்த ரன் அவுட் ஒன்றின் காரணமாக 47 ஓட்டங்களுடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

இதனால் மேலும் தடுமாறிய தென்னாபிரிக்க அணிக்கு  குயின்டன் டி கொக் நிதானமான முறையில் துடுப்பாடி சற்று ஆறுதல் தந்தார். எனினும், தென்னாபிரிக்க அணியின் பின்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான கசுன் ராஜித, விஷ்வ பெர்னாந்து ஆகியோருக்கு முகம்கொடுக்க முடியாமல் தங்களது விக்கெட்டுக்களை அடுத்தடுத்து பறிகொடுத்தனர்.

கடைசியில் குயின்டன் டி கொக்கின் விக்கெட்டினையும் முதல் நாளினுடைய தேநீர் இடைவேளைக்கு பின்னர் பறிகொடுத்த தென்னாபிரிக்க அணி 59.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 235 ஓட்டங்களை தமது முதல் இன்னிங்சுக்காக குவித்துக் கொண்டது.

தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டத்தில் போராட்டம் ஒன்றை காண்பித்திருந்த குயின்டன் டி கொக்,  தன்னுடைய 15ஆவது டெஸ்ட் அரைச்சதத்தோடு 8 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 80 ஓட்டங்களை குவித்திருந்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் விஷ்வ பெர்னாந்து 62 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், கசுன் ராஜித 3 விக்கெட்டுக்களையும் அறிமுக வீரர் லசித் எம்புல்தெனிய மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் சாய்த்திருந்தனர்.

இதன் பின்னர் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி போட்டியின் முதல் நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மையினால் கைவிடப்படும் போது 16 ஓவர்களுக்கு ஒரு விக்கெட்டினை பறிகொடுத்து 49 ஓட்டங்களை குவித்து நல்ல நிலையில் காணப்படுகின்றது.

இலங்கை தரப்பின் துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 28 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழக்காமல் நம்பிக்கை தர, அறிமுக வீரர் ஓஷத பெர்னாந்து 17 ஓட்டங்களுடன் களத்தில் காணப்படுகின்றார்.

>>தொடர் தோல்வியால் டெஸ்ட் தரவரிசையில் இங்கிலாந்துக்கு பாரிய பின்னடைவு

போட்டியின் முதல் நாளில் இலங்கை அணியில் பறிபோன விக்கெட்டாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமான்ன (0) அமைந்திருந்தார்.

தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில் டேல் ஸ்டெய்ன் இலங்கை அணியில் பறிபோயிருந்த லஹிரு திரிமான்னவின் விக்கெட்டினை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<