இலங்கைக்கு மிகப்பெரிய வெற்றி இலக்கை வழங்கவுள்ள தென்னாபிரிக்க அணி

4106
sl v sa

போர்ட் எலிசபெத்தின் ஜோஜ் பார்க்கில் நடைபெறும் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளான நேற்று தனது ஏழாவது டெஸ்ட் போட்டிக்காக களமிறங்கிய தென்னாபிரிக்க அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஸ்டேபன் குக்  இவ்வருடத்துக்கான தனது மூன்றாவது சதத்தினையும், அதே நேரம் இலங்கை அணிக்கெதிரான முதல் சதத்தினையும் பதிவு செய்து அணிக்கு வலு சேர்த்துள்ளார்.

மூன்றாவது நாளான நேற்று 7 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 181 ஓட்டங்களுடன் இலங்கை அணி களமிறங்கியது. சிறந்த துடுப்பாட்ட வீரர் தனஞ்சய டி சில்வா, வெர்னன் பிலாண்டரின் முதல் பந்திலேயே விக்கெட் காப்பாளர் டி கொக்கிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். அத்துடன் அதே ஓவரின் இறுதிப் பந்தில் இலங்கை அணி லக்மாலின் விக்கெட்டினையும் இழந்தது. குறித்த அந்த விக்கெட்டுடன் வெர்னன் பிலாண்டர் 11வது முறையாகவும் 5 விக்கெட்டுகளை கைபற்றினார்.

இறுதியாக களத்தில் இருந்த சமீர துஷ்மந்த மற்றும் நுவான் பிரதீப் ஆகியோர் சற்று நிதானமாக ஆடினர். எனினும் 2௦ ஓட்டங்களை பெற்றிருந்த வேளை கைல் அபாட்டின் பந்து வீச்சில் முதலாவது ஸ்லிப்பில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த ஹசிம் அம்லாவிடம் பிடி கொடுத்து சமீரா துஷ்மந்த ஆட்டமிழந்தார்.

சிறப்பாக பந்து வீசிய வெர்னன் பிலாண்டர் 45 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களையும், கைல் அபாட் 63 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

எனவே இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்சிற்கான சகல விக்கெட்டுகளையும் இழந்து 205 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. எனவே தென்னாபிரிக்க அணி இலங்கை அணியை விட 81 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற நிலையில் தனது இரணடாவது இன்னிங்சைத் தொடர்ந்தது.

இதன்போது ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஸ்டேபன் குக்  62 ஓட்டங்களை பெற்றிருந்த போது சுரங்க லக்மாலின் பந்து வீச்சில் கிடைக்க பெற்ற பிடி வாய்ப்பை இலங்கை வீரர்கள் தவறவிட்டனர். இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக்கொண்ட குக்  தனது குறுகிய டெஸ்ட் வாழ்கையில் மூன்றாவது சதத்தினை இலகுவாகப் பெற்றுக்கொண்டார். அத்துடன் முதலாவது விக்கெட்டுக்காக டீன் எல்கர்ருடன் இணைந்து 116 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டார்.

டீன் எல்கர் நான்கு பவுண்டரிகள் உள்ளடங்கலாக 52 ஓட்டங்களை பெற்றிருந்த போது சுரங்க லக்மாலின் பந்து வீச்சில் அணித் தலைவர் அஞ்சேலோ மெதிவ்சிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து  ஸ்டேப்பன் குக்குடன் ஜோடி சேர்ந்த ஹஷிம் அம்லா சிறந்த துடுப்பாட்டதினை வெளிப்படுத்தி 48 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதோடு  இரண்டாவது விக்கெட்டுக்காக 118 பந்துகளில் 1௦5 ஓட்டங்கள இணைப்பாட்டமாக  பகிர்ந்து கொண்டார்.

எனினும் தேனீர் இடைவேளைக்கு முன்னதாக நுவான் பிரதீப் வீசிய இறுதி பந்தில் அம்லா LBW முறையில் ஆட்டமிழந்து சென்றார். இதன்மூலம் LBW முறையில் ஆட்டமிழக்கும் 1௦,௦௦௦வது வீரராக கிரிக்கெட் வரலாற்றில் அம்லா பதியப்பட்டார்.

இரண்டு தடவைகள் மழை காரணமாக போட்டிக்கு தடங்கல் ஏற்பட்டமையினால் போட்டி நேரங்களில் மாற்றங்கள் ஏற்பட்டன. எனினும், தென்னாபிரிக்க அணி தேனீர் இடைவேளைக்கு முன்னதாக 4௦ ஓவர்களில் 182 ஓட்டங்களை பெற்றிருந்தது. மேலும், குறித்த நேரத்தில் இலங்கை அணியின் பந்து வீச்சும் களத்தடுப்பும் ஏமாற்றமளிக்கும் வகையில் அமைத்திருந்தது.

தேனீர் இடைவேளைக்கு பின்னர் தென்னாபிரிக்கா அணி 29 ஓவர்களில் 13௦ ஓட்டங்களை குவித்தது. இலங்கை அணியால் எவ்விதமான அழுத்தத்தினையும் தென்னாபிரிக்கா அணிக்கு கொடுக்க முடியவில்லை.

அதிர்ஷ்டவசமாக துஷ்மந்த சமீரவின் பந்து வீச்சில் ஸ்டேபன் குக்கின் துடுப்பாட்ட மட்டையின் விளிம்பில் பந்து பட்டு விக்கெட் காப்பாளர் தினேஷ் சந்திமல்லினால் பிடியெடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து களமிறங்கிய ஜேபி துமினி மற்றும் தெம்பா பாவுமா ஆகியோர் பகுதி நேர சுழல் பந்து வீச்சாளர் தனஞ்சய டி சில்வாவின் பந்து வீச்சில் சிறிய நேரத்தில் ஆட்டமிழந்து சென்றனர்.

நேற்றைய ஆட்ட நேர நிறைவுக்கு முன்னதாக மேலும் இரு விக்கெட்டுக்களை கைப்பற்றி மீண்டெழுவதற்கு முயற்சித்த போதும், அது நிறைவேறவில்லை. புதிய அணித் தலைவர் டுப்லெசிஸ் மற்றும் விக்கெட் காப்பாளர் குவிண்டான் டி கொக் ஆகியோர் சிறப்பாக துடுப்பாடி முறையே 41 மற்றும் 42 ஓட்டங்களை பெற்று 6ஆவது விக்கெட்டுக்காக தங்களுகிடையே 74 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டதோடு இலங்கைக்கான வெற்றி இலக்கை மேலும் உயர்த்தினர்.

இதன்படி தற்பொழுது தென்னாபிரிக்க அணி இலங்கை அணியை விட 432 ஓட்டங்களால் முன்னிலை வகிக்கிறது. இன்று போட்டியின் நான்காவது நாளாகும்.