தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரில் இலங்கையின் தோல்வி ஓட்டம் முடிவுக்கு வருமா?

3060

சிரேஷ்ட வீரர்களின் ஓய்வுக்கு பின்னர் சர்வதேச அரங்கில் தொடர்ந்தும் தடுமாறி வந்த இலங்கை அணி மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் நல்ல பதிவுகளை காட்டாத போதிலும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாகவே செயற்பட்டு வந்திருந்தது.

எனினும், அண்மைய அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடருடன் இலங்கை அணி தாம் கடைசியாக விளையாடிய மூன்று டெஸ்ட் தொடர்களையும் பறிகொடுத்து மோசமான முடிவுகளை காட்டியிருக்கின்றது.

தொடர்ச்சியான தமது இந்த டெஸ்ட் தோல்விகளை தடுக்க உடனடி மாற்றங்கள் சிலவற்றை மேற்கொண்டுள்ள இலங்கை அணி புதிய பரிமாணத்தில் தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கின்றது.

இலங்கை அணியின் ஆலோசகராக செயற்பட விரும்பும் முரளிதரன்

போட்டி விபரம்

இடம் –  கிங்ஸ்மீட் மைதானம், டர்பன்

திகதி – பெப்ரவரி 13 தொடக்கம் 17ஆம் திகதி வரை

நேரம் – ஒவ்வொரு நாளும் மதியம் 1.30 மணி (இலங்கை நேரப்படி)

இரண்டு அணிகளதும் கடந்த கால மோதல்கள்

தென்னாபிரிக்க அணி கிரிக்கெட் போட்டிகளுக்கு மீள் பிரவேசம் மேற்கொண்டதன் பின் இரண்டு அணிகளும் இதுவரையில் 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருப்பதோடு, இவற்றில் தென்னாபிரிக்க அணி 14 வெற்றிகளையும் இலங்கை அணி 7 வெற்றிகளையும் பதிவு செய்திருக்கின்றது. இதேநேரம் 6 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்திருக்கின்றன.

அதேநேரம் தென்னாபிரிக்க மண்ணை நோக்கும் போது இரு அணிகளும் 13 டெஸ்ட் போட்டிகளில் அங்கே விளையாடியுள்ளன. இதில் தென்னாபிரிக்க அணி 11 வெற்றிகளையும் இலங்கை அணி ஒரு வெற்றியையும் பதிவு செய்திருக்கின்றது குறிப்பிடத்தக்க விடயமாகும். எஞ்சிய ஒரு போட்டி சமநிலையில் நிறைவடைந்திருக்கின்றது.

இலங்கை அணி

கடைசியாக தென்னாபிரிக்க வீரர்களை இலங்கை அணியினர் தமது சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என வைட்வொஷ் செய்திருந்திருந்தனர்.  ஆனாலும் மேற்குறிப்பிட்ட கடந்தகாலப் பதிவுகள் தென்னாபிரிக்க மண்ணில் இலங்கை அணி இதுவரையில் ஓரேயொரு டெஸ்ட் வெற்றியினை மாத்திரம் பெற்றிருப்பதையே காட்டுகின்றது.

அத்தோடு தென்னாபிரிக்கா போன்று வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான நியூசிலாந்து, அவுஸ்திரேலிய ஆடுகளங்களிலேயே இலங்கை அணி தமது அண்மைய டெஸ்ட் தொடர்களை பறிகொடுத்திருக்கின்றது.

இவற்றை வைத்துப் பார்க்கும் போது இலங்கை அணி அவர்களுடைய அண்மைய  டெஸ்ட் தொடர்களில் இருந்து பாடங்கள் ஏதாவது கற்றுக் கொண்டிருந்தால் மாத்திரமே தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயற்பட முடியும்.

இதேநேரம் தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரில் விளையாடும் இலங்கை அணியில் பல மாற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றது. இலங்கை அணிக்காக ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இரண்டு வீரர்கள் மீண்டும் அணிக்குள் உள்வாங்கப்பட இவர்களுக்கு மேலதிகமாக நான்கு அறிமுக வீரர்களும் அணிக்குள் இணைக்கப்பட்டிருக்கின்றனர்.

மேலும் இலங்கை டெஸ்ட் அணித்தலைவர் தினேஷ் சந்திமாலுக்கு தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரில் ஓய்வு வழங்கப்பட்டிருப்பதோடு, அனுபவ சகலதுறை வீரர் அஞ்செலோ மெதிவ்ஸும் காயம் காரணமாக இத்தொடரில் விளையாடவில்லை. இதேவேளை, சுழல் வீரரான டில்ருவான் பெரேராவிற்கும் தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரில் ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது.

நான்கு சிரேஷ்ட வீரர்களுடன் விளையாட்டுத்துறை அமைச்சர் முக்கிய சந்திப்பு

தென்னாபிரிக்க டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியின் தலைவராக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன செயற்பட, பிரதி தலைவராக விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர் நிரோஷன் திக்வெல்ல இருக்கின்றார்.

இலங்கைத் தரப்பில் துடுப்பாட்டத்தை பலப்படுத்தும் வீரர்களாக லஹிரு திரிமான்ன, அணித்தலைவர் திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ் மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோரை குறிப்பிட முடியும்.

இதேநேரம் அணிக்கு மீள அழைக்கப்பட்டுள்ள கெளஷால் சில்வா, அறிமுக வீரர்களான ஓஷத பெர்னாந்து மற்றும் அஞ்செலோ பெரேரா போன்றோரும் வாய்ப்பளிக்கப்படும் பட்சத்தில் அவர்களும் இலங்கை அணியின் துடுப்பாட்டத்தை பலப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம்.

மறுமுனையில் தென்னாபிரிக்க ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சிற்கு சாதகமான இடம் என்பதால் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சுத்துறை சுரங்க லக்மாலினால் முன்னெடுக்கப்படவுள்ளது. லக்மாலிற்கு உறுதுணையாக அறிமுக வீரர் மொஹமட் சிராஸ், விஷ்வ பெர்னாந்து, கசுன் ராஜித மற்றும் சாமிக கருணாரத்ன ஆகியோர் காணப்படுகின்றனர்.

இதேநேரம் இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சுத்துறை லக்ஷான் சந்தகன் மற்றும் அறிமுக இடதுகை சுழல் வீரர் லசித் எம்புல்தெனிய ஆகியோரால் பலம் பெறுகின்றது.

உத்தேச இலங்கை அணி – திமுத் கருணாரத்ன (அணித்தலைவர்), லஹிரு திரிமான்ன, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, தனன்ஞய டி சில்வா, நிரோஷன் திக்வெல்ல, சுரங்க லக்மால், விஷ்வ பெர்னாந்து, சாமிக கருணாரத்ன, லக்ஷான் சந்தகன்

தென்னாபிரிக்க அணி

இலங்கையுடன் தமது கடைசி டெஸ்ட் தொடரை தென்னாபிரிக்க அணி இழந்த போதிலும் அவர்களது சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் அசைக்க முடியாத அணியாகவே காணப்படுகின்றது.

ஐ.சி.சி. இன் டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் இரண்டாம் இடத்தில் காணப்படும் தென்னாபிரிக்க அணி கடந்த ஆறு ஆண்டுகளில் தமது சொந்த மண்ணில் இடம்பெற்ற எந்த டெஸ்ட் தொடர்களிலும் தோல்வியடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பாகிஸ்தான் அணியினையும் தென்னாபிரிக்க மண்ணில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரில் (3-0 என) வைட்-வொஷ் செய்த தென்னாபிரிக்க அணி இலங்கை அணியுடனான சவாலையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றது.

இலங்கை அணியுடனான டெஸ்ட் போட்டிகளில் தென்னாபிரிக்க தரப்பின் துடுப்பாட்டத்தை பலப்படுத்தும் வீரர்களாக அணித்தலைவர் பாப் டூ பிளேசிஸ், ஹஷிம் அம்லா, எய்டன் மார்க்ரம், சுபைய்ர் ஹம்சா மற்றும் டீன் எல்கார் ஆகியோர் காணப்படுகின்றனர்.

இவர்களோடு அறிமுக சகலதுறை வீரர் வில்லியம் மூல்டரும் தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டத்திற்கு வலுச்சேர்க்க எதிர்பார்க்கப்படும் ஏனைய வீரர்களில் ஒருவராக இருக்கின்றார்

பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் குல்தீப் யாதவ் இரண்டாமிடத்தில்

இதே நேரம் டேல் ஸ்டெய்ன், ககிஸோ றபாடா மற்றும் வெர்னோன் பிலான்தர் போன்ற உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சுத்துறையினை பலப்படுத்த கேசவ் மஹராஜ் சுழல் வீரராக தனது பங்களிப்பினை வழங்கவுள்ளார்.

உத்தேச தென்னாபிரிக்க அணி – பாப் டூ பிளேசிஸ் (அணித்தலைவர்), ஹஷிம் அம்லா, டீன் எல்கார், எய்டன் மார்க்ரம், டெம்பா பெவூமா, சுபைய்ர் ஹம்சா, குயின்டன் டி கொக், டேல் ஸ்டெய்ன், ககிஸோ றபாடா, வெர்னோன் பிலான்தர், கேசவ் மஹராஜ்

எதிர்பார்ப்பு வீரர்கள்

திமுத் கருணாரத்ன (இலங்கை) – இலங்கை அணியின் அனுபவ துடுப்பாட்ட வீரர்களான தினேஷ் சந்திமால், அஞ்செலோ மெதிவ்ஸ் போன்ற வீரர்கள் அணியில் இல்லாதிருப்பதால் தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் போட்டிகளில் ஓட்டங்கள் குவிக்கும் முக்கிய பொறுப்பு திமுத் கருணாரத்னவிற்கு காணப்படுகின்றது.

டெஸ்ட் போட்டிகளில் 4,000 இற்கும் கிட்டவான ஓட்டங்களை அண்மித்திருக்கும் கருணாரத்ன, அண்மைக்காலமாகவும் இலங்கை டெஸ்ட் அணியை பலப்படுத்தி வருவதால் நாளைய போட்டியில் ஜொலிக்க எதிர்பார்க்கப்படும் முக்கிய வீரராக காணப்படுகின்றார்.

டேல் ஸ்டெய்ன் (தென்னாபிரிக்கா) – தென்னாபிரிக்க அணியின் அனுபவ வேகப்பந்துவீச்சாளரான டேல் ஸ்டெய்ன் இலங்கை அணிக்கு ஏனைய வேகப்பந்து வீச்சாளர்களுடன் சேர்ந்து நெருக்கடி தரக்கூடிய முக்கிய வீரராக இருக்கின்றார்.

தென்னாபிரிக்க அணிக்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்கும் டேல் ஸ்டெய்ன், பாகிஸ்தான் அணியினை தென்னாபிரிக்கா அவர்களது கடைசி டெஸ்ட் தொடரில் வைட்வொஷ் செய்ய மொத்தமாக 12 விக்கெட்டுக்களை கைப்பற்றி உதவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டி நடைபெறும் மைதானத்தில் இரு அணிகளினதும் கடந்த காலம்

போட்டி நடைபெறும் டர்பன் மைதானத்தில் இதற்கு முன்னர் 2 டெஸ்ட் போட்டிகளிலேயே இரு அணிகளும் மோதியிருக்கின்றன. இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி வீதம் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் இந்த மைதானத்தில் வைத்து கிடைத்த வெற்றியே இலங்கை அணிக்கு தென்னாபிரிக்க மண்ணில் கிடைத்த முதல் டெஸ்ட் வெற்றியாக அமைந்திருந்தது.

மைதான நிலைமைகள் பற்றி…

டர்பன் மைதானம் பொதுவாக வேகப்பந்து வீச்சாளர்களின் சொர்க்கமாக கருதப்படும் ஒரு இடமாகும். எனவே, நடைபெறவுள்ள போட்டியிலும் இரு அணிகளதும் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என கூறப்படுகின்றது.

இந்த டெஸ்ட் போட்டி நடைபெறும் நாட்களில் டர்பன் நகரில் மழைக்கான அறிகுறிகள் எதிர்வு கூறப்பட்டிருக்கின்ற போதிலும், காலநிலை இடம்கொடுக்கும் பட்சத்தில் புதிய பரிணாமத்திலான இலங்கை அணி என்ன செய்யும் என்பதை கிரிக்கெட் ரசிகர்களாகிய அனைவருக்கும் பார்க்க கூடியதாக இருக்கும்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<