பயிற்சிப் போட்டியில் இலங்கை அணிக்குத் தோல்வி

969
CRICKET-WT20-2016-PAK-SRI

ஐ.சி.சி  டி20 உலகக் கிண்ணத்தின் சூப்பர் 10 போட்டிகள்  நாளை இந்தியாவில் ஆரம்பமாகவுள்ளது.

நேற்று நடந்து முடிந்த தெரிவுகான் போட்டிகளின் படி குழு ஒன்றில் இலங்கை அணியோடு ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளும்  குழு இரண்டில் பாகிஸ்தான், இந்தியா, அவுஸ்திரேலியா, நியுசிலாந்து மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன.

இவ்வாறு இருக்கும் நிலையில் டி20 உலகக் கிண்ண போட்டிகளுக்கு முன் நடைபெறும் பயிற்சி ஆட்டங்களில் இன்று நடைபெற்ற போட்டி ஒன்றில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் கொல்கட்டாவில் அமைந்துள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மோதின. பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமான இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியின் தலைவர்  ஷெஹிட் அப்ரிடி தாம் முதலில் துடுப்பாடப் போவதாக கூறியிருந்தார்.

அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கட்டுகளை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றனர். துடுப்பாட்டத்தில் முஹமத் ஹபீஸ் 49 பந்துகளில் 70 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற மற்ற வீரர்களில் சர்ஜீல் கான் 23 ஓட்டங்களையும், உமர் அக்மல் 19 ஓட்டங்களையும், அஹமத் ஷெசாத் 18 ஓட்டங்களையும், விக்கட் காப்பாளர் சர்ப்ராஸ் அஹமத் 13 ஓட்டங்களையும் பெற தலைவர் ஷெஹிட் அப்ரிடி ஓட்டமேதும் பெறாமல் ஆட்டமிழந்தார். இலங்கை அணியின் பந்துவீச்சில் திசர பெரேரா 21 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளைக் கைபற்ற சசித்திரா சேனாநாயக்க, ரங்கன ஹேரத் மற்றும் துஸ்மந்த சமீர ஆகியோர் தலா 1 விக்கட்டுகள் வீதம் கைபற்றினர்.

பின்பு 120 பந்துகளில் 158 என்ற ஓட்டங்களை நோக்கி தமது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணியினர் 2 ஓட்டங்களை பெற்ற நிலையில் தமது முதல் விக்கட்டை இழந்தனர். கடந்த நியுசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் 4 பந்துகளில் ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திலகரத்ன தில்ஷான் இன்றைய போட்டியில் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஓட்டமேதும் பெறாமல் ஆட்டமிழந்து இலங்கை அணிக்கு ஆரம்பத்திலேயே பெரும் ஏமாற்றம் அளித்தார். அதன் பின் களமிறங்கிய திரிமன்ன சிறப்பாக விளையாடி தினேஷ் சந்திமாலோடு சேர்ந்து இலங்கை அணியை சற்று சிறந்த நிலைக்கு எடுத்து சென்றார்கள்.  ஒரு நிலையில் இலங்கை அணி 10 ஒவர்களில் 2 விக்கட்டுகளை இழந்து 74 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் போட்டியில் வெற்றி பெறுவார்கள் என்று காணப்பட்டாலும், அதன் பின்  இலங்கை அணி குறிப்பிட்ட இடைவெளிகளில் விக்கட்டுகளை இழந்து  இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்டுகளை இழந்து 142 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இலங்கை அணி சார்பாக மீண்டும் அணிக்குள் அழைக்கப்பட்ட லஹிறு திரிமன்ன 37 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸ்சர்கள் அடங்கலாக 45 ஓட்டங்களைப் பெற்றார். மற்ற வீரர்களில் உப தலைவர் தினேஷ் சந்திமால் 30 ஓட்டங்களையும், சாமர கபுகெதர 14 ஓட்டங்களையும், டசுன் சானக ஆட்டமிழக்கமால் 13 ஓட்டங்களையும், சசித்திரா சேனாநாயக்க மற்றும் தலைவர் எஞ்சலோ மெதிவ்ஸ் ஆகியோர் 10 ஓட்டங்களையும் பெற்றனர். பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் மிகச் சிறப்பாகப் பந்து வீசிய இடதுகை சுழற்பந்து வீச்சாளர் இமாத் வசீம் 4 ஓவர்கள் பந்து வீசி 25 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளைக் கைபற்றினார். முஹமத் இர்பான் அவருக்கு துணையாக 18 ஓட்டங்ககளுக்கு 2 விக்கட்டுகளைக் கைபற்ற வஹாப் ரியாசும் 1 விக்கட்டிற்கு சொந்தக்காரரானார்.

இதன் படி பாகிஸ்தான் அணி இப்போட்டியில் 15 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. நாளை ஆரம்பமாகும் 6ஆவது டி20 உலகக் கிண்ணப் போட்டித்தொடரில் இலங்கை அணிக்கான முதல் போட்டி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக எதிர்வரும் 17ஆம் திகதி வியாழக்கிழமை இன்று போட்டி நடைபெற்ற அதே கொல்கட்டா  ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது குறிபிடத்தக்க விடயமாகும்.