பாகிஸ்தான் கட்புலனற்றோர் அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியிலும் 8 விக்கெட்டுக்களால் தோல்வியைத் தழுவிய இலங்கை கட்புலனற்றோர் அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 3-0 என இழந்தது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் கட்புலனற்றோர் அணி, முன்னதாக நடைபெற்ற 5 போட்டிகள் ஒருநாள் தொடரை 5-0 என வைட் வொஷ் செய்த நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் கடந்த வாரம் ஆரம்பமாகியது.
இலங்கையை ஒருநாள் தொடரில் வைட்வொஷ் செய்த பாகிஸ்தான் கட்புலனற்றோர் அணி
இலங்கைக்கு சுற்றுப் பயணம்…
இதன் முதலிரண்டு போட்டிகளிலும் அபார வெற்றயீட்டிய பாகிஸ்தான் கட்புலனற்றோர் அணி, 3 ஆவது போட்டியிலும் துடுப்பாட்டம், பந்துவீச்சு ஆகிய இரண்டு துறைகளிலும் பிரகாசித்து இலங்கை அணியை வீழ்த்தியது.
கொழும்பு BRC மைதானத்தில் நேற்று (01) நடைபெற்ற 3 ஆவது போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
இதன்படி, களமிறங்கிய இலங்கை கட்புலனற்றோர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 194 ஓட்டங்களைக் குவித்தது. இலங்கை தரப்பின் துடுப்பாட்டத்தில் அஜித் சில்வா இறுதி வரை ஆட்டமிழக்காது நின்று 67 பந்துகளில் 100 ஓட்டங்களை பெற்றிருந்ததோடு, சுரங்க சம்பத் 28 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்று வலுச்சேர்த்தார்.
இதேநேரம், பாகிஸ்தான் கட்புலனற்றோர் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பாக பக்கர் அப்பாஸ் 42 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டினை வீழ்த்தினார்.
பின்னர், போட்டியின் வெற்றி இலக்கான 195 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் கட்புலனற்றோர் கிரிக்கெட் அணி, 14.4 ஓவர்களில் 2 விக்கெட்டினை மாத்திரம் இழந்து 196 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் மொயின் அஸ்லம் 77 ஒட்டங்களையும், சனா உல்லாஹ் கான் 67 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டனர்.
இதன்படி, 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்ற பாகிஸ்தான் கட்புலனற்றோர் அணி, 3 போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரை 3-0 என கைப்பற்றியது.
போட்டியின் ஆட்டநாயகனாக மொயின் அஸ்லம் தெரிவாக, தொடரின் நாயனாக அஜித் சில்வா, நிசார் அலி மற்றும் மொஹமட் ராசித் ஆகியோர் தெரிவாகினர்.
போட்டியின் சுருக்கம்
இலங்கை கட்புலனற்றோர் அணி – 194/2 (20) – அஜித் சில்வா 100*, சந்தன தேஷப்பிரிய 29, சுரங்க சம்பத் 28*, பக்கர் அப்பாஸ் 1/42
பாகிஸ்தான் கட்புலனற்றோர் அணி – 192/2 (14.4) – மொயின் அஸ்லம் 77, சனா உல்லாஹ் கான் 67, ராஜ கருணா 2/43
முடிவு – பாகிஸ்தான் கட்புலனற்றோர் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<