ஆசியக் கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டித் இத்தொடரின் 10வது போட்டியில் தினேஷ் சந்திமால் தலைமையிலான இலங்கை அணி, ஷஹீட் அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணியை நேற்று (04) பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் அமைந்துள்ள மீர்பூர் ஷேர் பங்களா தேசிய விளையாட்டரங்கத்தில் எதிர்த்து விளையாடியது.
இலங்கை அணிக்கு தற்காலிகத் தலைவராக செயற்பட்ட எஞ்சலோ மெதிவ்ஸ் காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக இப்போட்டியில் விளையாடவில்லை. போட்டியின் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணித் தலைவர் ஷஹீட் அப்ரிடி இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைப்பு விடுத்தார்.
இந்த அழைப்புக்கு அமைய களமிறங்கிய இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான திலகரத்ன டில்ஷான் மற்றும் தலைவராக செயற்படும் தினேஷ் சந்திமால் ஜோடி மிகச் சிறந்த ஒரு ஆரம்பத்தைப் பெற்று கொடுத்தது. முதல் 10 ஓவர்களில் விக்கட்டுகளை இழக்காமல் சிறப்பாக நிதானமாக அடிக்க வேண்டிய இலகுவான பந்துகளில் பவுண்டரிகளை பெற்று 66 ஓட்டங்களைப் பெற்றார்கள். அதன் பின்னும் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் ஓட்டங்களைப் பெறும் வேகம் அதிகரித்தது. அதன்படி முதல் விக்கட்டுக்காக திலகரத்ன டில்ஷான் மற்றும் தினேஷ்
சந்திமால் 85 பந்துகளில் 110 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் சிறப்பாக விளையாடி வந்த தினேஷ் சந்திமால் வஹாப் ரியாஸின் பந்துவீச்சில் வேகாமாக அடிக்க முனைந்த போது பந்து நேரடியாக சர்ஜீல் கானின் கையில் செல்ல 49 பந்துகளில் 7 பவுண்டரிகள் 1 சிக்ஸ்சர்கள் அடங்கலாக 58 ஓட்டங்களைப் பெற்றுக ஆட்டமிழந்தார். இந்த ஆரம்ப இணைப்பாட்டமானது இப்போட்டிதொடரிலே பெறப்பட்ட சிறந்த ஆரம்ப இணைப்பாட்டமாகக் கருதப்பட்டது. தினேஷ் சந்திமாலின் விக்கட்டை அடுத்து களமிறங்கிய சகலதுறை ஆட்டக்காரர் செஹான் ஜயசூரிய வந்த வேகத்தில் 4 ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார். அதன் பின் துடுப்பெடுத்தாட வந்த சாமர கபுகெதர, தசுன் ஷானாக ஆகியோர் பிரகாசிக்கவில்லை. 160ற்கும் 170ற்குமிடைப்பட்ட ஓட்டங்களை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்ட்டாலும் இறுதியில் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கட்டுகளை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பில் கூடுதலாக கடந்த போட்டிகளில் பிரகாசிக்கத் தவறிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திலகரத்ன டில்ஷான் ஆட்டமிழக்காமல் 56 பந்துகளில் 10 பவுண்டரிகள் 1 சிக்ஸ்சர் அடங்கலாக சுமார் 87 நிமிடங்கள் களத்தில் துடுப்பெடுத்தாடி 75 ஓட்டங்களை பெற்றார். பாகிஸ்தான் அணியின் சார்பில் பந்துவீச்சில் முஹம்மத் இர்பான் மிகச் சிறப்பக பந்துவீசி 4 ஓவர்களில் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளை கைபற்றினார். அவரைத் தவிர வஹாப் ரியாஸ் மற்றும் சொஹைப் மலிக் ஆகியோர் தலா ஒரு விக்கட் வீதம் கைபற்றினர்.
இதனையடுத்து 151 என்ற வெற்றி இலக்கை நாடி தனது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான சர்ஜீல் கான் மற்றும் முஹமத் ஹபீஸ் ஜோடி முதல் விக்கட்டுக்காக 23 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்த நிலையில்
முஹமத் ஹபீஸ் 14 ஓட்டங்களோடு செஹான் ஜயசூரியவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் சர்ஜீல் கான் 31 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். அதனையடுத்து வந்த அனைவரும் சிறப்பாக விளையாடி 4 பந்துகள் மீதமிருக்க 6 விக்கட்டுகளால் பாகிஸ்தான் அணி வெற்றி இலக்கை எட்டியது. பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் சுப்பர் லீகில் பிரகாசித்த உமர் அக்மல் 37 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்ஸ்சர்கள் அடங்கலாக 48 ஓட்டங்களையும், விக்கட் காப்பாளர் சர்ப்ராஸ் அஹமத் 27 பந்துகளில் 6 பவுண்டரிகள் அடங்கலாக 38 ஓட்டங்களையும் பெற்றார்கள். இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் தலைவர் சந்திமால் 8 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தி இருந்தார். அவர்களில் வேகப்பந்து வீச்சாளர் நுவன் குலசேகர மற்றும் சுழல் பந்து வீச்சாளர்களான செஹான் ஜயசூரிய, திலகரத்ன டில்ஷான், மிலிந்த சிறிவர்தன ஆகியோர் ஒரு விக்கட் வீதம் தம்மிடையே பகிர்ந்தார்கள்.
இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக பாகிஸ்தான் அணியின் உமர் அக்மல் தெரிவு செய்யப்பட்டார். ஆசியக்கிண்ண போட்டிகளின் புள்ளிகள் தரவரிசையில் பாகிஸ்தான் அணி 3ஆம் இடத்திலும், இலங்கை அணி 4ஆம் இடத்திலும் ஐக்கிய அரபு இராச்சிய அணி 5ஆம் இடத்திலும் காணப்பட்டன. டி20 ஆசியகிண்ண போட்டித்தொடரின் இறுதிப்போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் மீர்பூர் ஷேர் பங்களா தேசிய விளையாட்டரங்கத்தில் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.