ரங்கன ஹேரத்தின் அதிரடிப் பந்துவீச்சினால் போராடி வென்ற இலங்கை அணி

1589
Sri Lanka Celebrations (1)

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி நகரில் நடைபெற்று முடிந்திருக்கும், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில், கடும் போராட்டத்தினை வெளிப்படுத்திய இலங்கை அணியானது 21 ஓட்டங்களால் பாகிஸ்தானை வீழ்த்தியது. எனவே, இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

போட்டியின் நான்காம் நாள் நிறைவில் தமது இரண்டாம் இன்னிங்சில் ஆடியிருந்த இலங்கை வீரர்கள் 40 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து 69 ஓட்டங்களுடன் காணப்பட்டிருந்தனர். களத்தில் குசல் மெண்டிஸ் 16 ஓட்டங்களுடனும், சுரங்க லக்மால் 2 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பாகிஸ்தானுக்கு வலுச்சேர்த்த ஹரிஸ் சொஹைல்; தடுமாற்றமான நிலையில் இலங்கை

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி நகரில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு

இலங்கை அணியானது  பாகிஸ்தானை  விட 66 ஓட்டங்கள் முன்னிலையுடன் போட்டியின் இறுதி நாளில் தமது இரண்டாம் இன்னிங்சினை சவலான வெற்றி இலக்கு ஒன்றினை எதிரணிக்கு வழங்கும் நோக்கோடு தொடங்கியது. முக்கிய முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களை இழந்த இலங்கை  இன்றைய நாளின் ஆரம்பத்திலேயே குசல் மெண்டிசையும் பறிகொடுத்தது. பாகிஸ்தானின் வலதுகை வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் அப்பாஸினால் LBW முறையில் வீழ்த்தப்பட்ட மெண்டிஸ் மூன்றாம் நடுவரின் உதவியை நாடிய போதிலும் அதிஷ்டம் கைகொடுக்காமல் 18 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

தொடர்ந்து வந்த இலங்கை துடுப்பாட்ட வீரர்களில் நிரோஷன் திக்வெல்ல தவிர்ந்த ஏனைய அனைவரும் மிகவும் நெருக்கடியான பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சினை தாண்டி ஓட்டங்கள் சேர்க்க மிகவும் சிரமப்பட்டனர். இதனால், 66.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த இலங்கை அணி 138 ஓட்டங்களை மாத்திரமே தமது இரண்டாம் இன்னிங்சுக்காகப் பெற்றுக்கொண்டது.

இலங்கை அணிக்காக தனியொருவராக இறுதிவரை போராடி ஆட்டமிழக்காமல் நின்ற நிரோஷன் திக்வெல்ல 76 பந்துகளில் 4 பெளண்டரிகள் உள்ளடங்கலாக 40 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார்.

பாகிஸ்தான் அணி சார்பாக அதி சிறப்பான பந்து வீச்சினை வெளிக்காட்டிய யாசிர் சாஹ் வெறும் 51 ஓட்டங்களுக்கு இலங்கையின் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார். அதேபோன்று, மொஹமட் அப்பாஸூம் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றி தனது பங்குக்கு சிறப்பாக செயற்பட்டிருந்தார்.

இலங்கை அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் முடிவுடன் போட்டியின் மதிய போசண இடைவேளையும் எடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, பாகிஸ்தான் தமது இரண்டாம் இன்னிங்சினை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 136 ஓட்டங்களை பெறும் நோக்கோடு ஆரம்பித்தது.

ஷான் மசூத் மற்றும் சமி அஸ்லம் ஆகிய வீரர்களுடன் மைதானம் விரைந்த பாகிஸ்தான் அணி போட்டியின் நான்காவது ஓவரிலேயே தமது முதல் விக்கெட்டினைப் பறிகொடுத்து மோசமான ஆரம்பத்தினைப் பெற்றுக் கொண்டது. ரங்கன ஹேரத்தின் சுழலில் வீழ்ந்த சமி அஸ்லம் வெறும் 2 ஓட்டங்களுடன் ஓய்வறை நோக்கி நடந்தார்.

அடுத்ததாக பாகிஸ்தான் அணிக்காக துடுப்பாட களம் நுழைந்த அசார் அலி ஓட்டமேதுமின்றி வெளியேறினார். இன்னும் பாகிஸ்தான் அணிக்காக சிறப்பாக செயற்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட அசாத் சபீக், பாபர் அசாம் மற்றும் ஏனைய ஆரம்ப வீரர் ஷான் மசூத் ஆகியோரும் சொதப்பலான ஆட்டத்துடன் மைதானத்தினை விட்டு வெளியேறினர். இதனால் ஒரு கட்டத்தில்  பாகிஸ்தான் அணியானது 36 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து மிகவும் இக்கட்டான நிலையொன்றுக்கு மாறியிருந்தது.

பாகிஸ்தான் அணியில் தொடரும் வீரர்களுக்கான போட்டித்தடையும், அபராதமும்

உலகிலுள்ள அனைத்து மக்களையும் இன, மத, மொழி வேறுபாடின்றி இணைக்கின்ற சக்தியும், வல்லமையும் விளையாட்டுக்கு உண்டு…

இவ்வாறான சிக்கலான நிலையை உணர்ந்து பொறுமையான ஆட்டத்தினை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணித்தலைவர் சர்பராஸ் அஹ்மட் மற்றும் ஹரிஸ் சொஹைல் ஆகியோர் அணியின் ஓட்ட  எண்ணிக்கையை போட்டியின் தேநீர் இடைவேளை வரை மெதுவாக உயர்த்தினர். இதனால் போட்டி சற்று பாகிஸ்தானின் பக்கம் மாறத்தொடங்கியது.

தேநீர் இடைவேளையைத் தொடர்ந்து ரங்கன ஹேரத் வீசிய பந்தில் நிரோஷன் திக்வெல்ல மேற்கொண்ட அழகிய ஸ்டம்ப் ஒன்றின் மூலம் பாகிஸ்தானின் அணித்தலைவர் சர்பராஸ் அஹ்மட் 19 ஓட்டங்களுடன் வீழ்த்தப்பட்டார். இதனால் 42 ஓட்டங்கள் வரையில் நீடித்த பாகிஸ்தானின் ஆறாம் விக்கெட்டுக்கான இணைப்பாட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

சர்பராஸ் அஹ்மட் வீழ்ந்தாலும் ஹரிஸ் சொஹைல் களத்தில் நின்ற காரணத்தினால் பாகிஸ்தான் அணியினர் இலக்கினை மீண்டும் நெருங்கத் தொடங்கினர். எனினும், இப்போது இலங்கைக்கு கைகொடுத்த தில்ருவான் பெரேரா சொஹைலின் விக்கெட்டினை கைப்பற்றினார். இந்த விக்கெட்டில் மூன்றாம் நடுவரின் உதவியினை பாகிஸ்தான் அணி நாடியிருந்த போதிலும் சொஹைலுக்கு அது பிரயோஜனம் தரவில்லை.

அடுத்து பாகிஸ்தான் அணியின் பின்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் அனைவரையும் ஹேரத் தனது மாய சுழலினால் வீழ்த்த முடிவில், 47.4 ஓவர்களில் தமது அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 112 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற பாகிஸ்தான் இலங்கை அணியிடம் தோல்வியினை தழுவியது.

பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர்களில் அதிகபட்சமாக ஹரிஸ் சொஹைல் 34 ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்டார்.

இலங்கை அணிக்கு எதிர்பாராத இன்றைய வெற்றியினைப் பெற்றுக்கொடுக்க முன்னிலை வகித்த ரங்கன ஹேரத் இலங்கை சார்பான பந்துவீச்சில் மொத்தமாக 43 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார். இந்தப் போட்டி மூலம் டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டுக்களை சாய்த்த முதலாவது இடது கை சுழல் வீரராக ரங்கன ஹேரத் வரலாற்று சாதனை ஒன்றினையும் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதோடு தில்ருவான் பெரேராவும் மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவியிருந்தார்.

Photo Album – Sri Lanka vs Pakistan – 1st Test Day 5

ஆட்ட நாயகனாக இந்தப் போட்டியில் தனது அதி சிறப்பான பந்து வீச்சு மூலம்  மொத்தமாக 11 விக்கெட்டுக்களை பெற்ற ரங்கன ஹேரத் தேர்வு செய்யப்பட்டார்.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (6) துபாயில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.

ஸ்கோர் விபரம்

Scorecard