இன்று (10) இடம்பெறவுள்ள வட கொரிய அணிக்கு எதிரான போட்டியில் அணியில் சில மாற்றங்களை ஏற்படுத்தி, தடுப்பு (Defensive) மற்றும் கௌண்டர் அட்டாக் முறையிலான ஒரு ஆட்டத்தையே தாம் விளையாட இருப்பதாக இலங்கை தேசிய கால்பந்து அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் நிசாம் பக்கீர் அலி தெரிவித்துள்ளார்.
துர்க்மெனிஸ்தானிடம் வீழ்ந்தது இலங்கை
பிஃபா உலகக் கிண்ண தகுதிகாண் இரண்டாவது சுற்றில்……
எதிர்வரும் 2022 உலகக் கிண்ண கால்பந்து தொடருக்கான தகுதிகாண் போட்டியில் இலங்கை அணி, தமது அடுத்த மோதலில் வட கொரிய அணியை கொழும்பு குதிரைப் பந்தயத் திடல் அரங்கில் இன்று இடம்பெறவுள்ள மோதலில் சந்திக்கின்றது.
குறித்த போட்டிக்கு முன்னரான இரண்டு அணிகளதும் ஊடக சந்திப்பு நேற்று இலங்கை கால்பந்து இல்லத்தில் இடம்பெற்றது.
இதன்போது, வட கொரிய அணி வீரர்கள் குறித்து குறிப்பிட்ட பக்கீர் அலி, ”வட கொரிய அணியின் ஒரு வீரர் பிரபல ஜுவண்டஸ் அணிக்காவும், மற்றொருவர் சுவிட்சர்லாந்திலும், மற்றொருவர் டோக்கியோவிலும் விளையாடுகின்றனர். அதேபோன்று, ஜப்பானில் உள்ள வட கொரிய வீரர்களினதும் இணைப்புடனான அணியாகவே இது உள்ளது. எனவே, அவர்கள் மிகவும் பலம் மிக்க அணியாகவே உள்ளனர்” என்றார்.
துர்க்மெனிஸ்தான் அணியுடன் கடந்த வாரம் இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணியின் பின்கள வீரர்கள் விட்ட தவிறினாலேயே இரண்டு கோல்கள் பெறப்பட்டன. எனவே, இந்தப் போட்டியில் அவ்வாறான தவறுகளை திருத்தி, முதல் போட்டியை விட மாற்றமான ஒரு ஆட்டத்தையே விளையாட உள்ளதாக பயிற்றுவிப்பாளர் குறிப்பிட்டார்.
”முதல் போட்டியில் விளையாடிய வீரர்களில் மாற்றங்களை ஏற்படுத்தியே வட கொரியாவுடன் மோதவுள்ளோம். குறிப்பாக, கடந்த போட்டியில் தவறுவிட்ட பின்களம் மற்றும் மத்திய களத்தில் மாற்றம் மேற்கொள்ளப்படலாம். மாற்றமொன்றை ஏற்படுத்தி போட்டியில் சிறந்த ஒரு முடிவை எதிர்பார்க்கின்றோம்”
வட கொரிய அணியை எதிர்கொள்வதற்கான உங்களது உத்திகள் எவ்வாறு இருக்கும்? என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பக்கீர் அலி, ”வட கொரியா ஆடிய போட்டிகளின் வீடியோக்களை நான் பார்த்தேன். அவர்கள் Derect Football முறையில் ஆடும் ஒரு அணி. எனவே, நாம் எமது கட்டுப்பாட்டில் பந்தை முடியுமானவரை வைத்திருக்க முயற்சி மேற்கொள்வோம். இந்தப் போட்டியில் நாம் தடுப்பு (Defensive) மற்றும் கௌண்டர் அட்டாக் முறையிலான ஒரு ஆட்டத்தையே வெளிப்படுத்தவுள்ளோம்” என்றார்.
Photo Album : SRI v DPR Pre-Match Press Conference | 2022 FIFA World Cup Qualifier
குறித்த ஊடக சந்திப்பின்போது கருத்து தெரிவித்த இலங்கை அணியின் தலைவர் கவிந்து இஷான், ”துர்க்மெனிஸ்தான் அணியுடனான 2-0 என்ற போட்டி முடிவானது எம்மைப் பொறுத்தவரை ஒரு சிறந்த முடிவாகும். அடுத்த போட்டிகளில் எமது தவறுகளை சரிசெய்து சிறந்த ஒரு போட்டியைக் கொடுக்க எதிர்பார்த்துள்ளோம். அது எந்த அணிக்கு எதிராக இருந்தாலும் சரி.
எம்மால் ஒரு பெரிய மாற்றத்தை மிக விரைவில் ஏற்படுத்த முடியாது. மாறாக, எம்மால் முடியுமான அனைத்து விடயங்களையும் நாம் செய்வோம். எமக்கு அடுத்து தேசிய அணிக்கு வரவுள்ள வீரர்களுக்கான ஒரு சிறந்த இடத்தை ஏற்படுத்திக் கொடுக்கவே நாம் முடியுமானவரை முயற்சி மேற்கொள்கின்றோம்” என்றார்.
>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<