Home Tamil சகலதுறை மிரட்டலால் இலங்கையை இலகுவாக வீழ்த்திய நியூசிலாந்து

சகலதுறை மிரட்டலால் இலங்கையை இலகுவாக வீழ்த்திய நியூசிலாந்து

378

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் மூன்றாவது போட்டியில் இன்று (01) இலங்கை அணியை எதிர்கொண்ட நியூசிலாந்து அணி, பந்து வீச்சாளர்களின் அபாரம் மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான கொலின் மன்ரோ மற்றும் மார்டின் கப்டில் ஆகியோரின் அரைச்சதங்களின் உதவியுடன் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டது.

இரண்டு மில்லியன் இரசிகர்களின் எதிர்பார்ப்புடன் முதல் போட்டியில் இலங்கை

உலக கிரிக்கெட் இரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த கிரிக்கெட்…..

வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி வெறும் 136 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்திருந்ததுடன், நியூசிலாந்து அணி 16.1 ஓவர்களில் விக்கெட்டிழப்பின்றி வெற்றியிலக்கை அடைந்தது.

இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. நியூசிலாந்தின் திட்டத்தின் படி, ஆரம்பத்திலிருந்து இலங்கை அணி விக்கெட்டுகளை பறிகொடுத்து நெருக்கடிக்கு உள்ளாகியது.

இலங்கை அணி

திமுத் கருணாரத்ன (தலைவர்), லஹிரு திரிமான்னே, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, அஞ்செலோ மெதிவ்ஸ், தனன்ஜய டி சில்வா, திசர பெரேரா, ஜீவன் மெண்டிஸ், இசுரு உதான, லசித் மாலிங்க, சுரங்க லக்மால்

நியூசிலாந்து அணி

கொலின் மன்ரோ, மார்ட்டின் கப்டில், கேன் வில்லியம்சன், ரொஸ் டெய்லர், டொம் லேத்தம், ஜேம்ஸ் நீசம், கொலின் டி கிரெண்டோம், மிச்சல் சென்ட்னர், லொக்கி பேர்கஸன், ட்ரென்ட் போல்ட், மெட் ஹென்ரி

இன்றைய தினம் அவிஷ்க பெர்னாண்டோ விளையாடாத நிலையில், அவருக்கு பதிலாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய லஹிரு திரிமான்னே முதல் பந்தில் நான்கு ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அடுத்த பந்தில் LBW முறையில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர், களமிறங்கிய குசல் பெரேரா அதிரடியான ஆரம்பத்தை பெற்றார். திமுத் கருணாரத்ன மற்றும் குசல் பெரேரா ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்காக 42 ஓட்டங்களை பகிர்ந்தது.

எனினும், துரதிஷ்டவசமாக மெட் ஹென்ரி வீசிய பந்தினை சிக்ஸருக்கு விளாச முற்பட்டவேளை, குசல் பெரேரா, கிரெண்டோமிடம் பிடிகொடுத்து 29 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இவரின் விக்கெட்டினை தொடர்ந்து அணியின் தலைவர் என்ற பொறுப்புடன் திமுத் கருணாரத்ன களத்தில் நின்று நிதானமாக பந்துகளை தடுத்தாடி ஓட்டங்களை பெற்றார். ஆனால், குசல் பெரேராவின் விக்கெட்டுக்கு பின்னர் இலங்கை அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

குசல் பெரேரா ஆட்டமிழந்த அடுத்த பந்தில், குசல் மெண்டிஸ் ஓட்டங்கள் இன்றி வெளியேற, தனன்ஜய டி சில்வா 4 ஓட்டங்களுடனும், அஞ்செலோ மெதிவ்ஸ் ஓட்டங்கள் இன்றியும் ஆட்டமிழந்தனர். இதற்கு அடுத்தப்படியாக களமிறங்கிய ஜீவன் மெண்டிஸ், லொக்கி பேர்கஸனின் வேகத்தில் வீழ்ந்தார். இவ்வாறு இலங்கை அணியின் விக்கெட்டுகள் தொடர்ச்சியாக வீழ்த்தப்பட ஒரு கட்டத்தில் இலங்கை அணி 100 ஓட்டங்களை கடப்பதே சந்தேகத்துக்கிடமாகியது.

ஆனால், அடுத்து களமிறங்கிய அதிரடி துடுப்பாட்ட வீரர் திசர பெரேரா, திமுத் கருணராத்னவுடன் இணைந்து ஓட்டங்களை வேகப்படுத்தினார். இவர்கள் இருவரும் வேகமாக ஓட்டங்களை குவிக்க, இலங்கை அணி 100 ஓட்டங்களை கடந்தது. இதற்கு இடையில் பெரேரா, ஜேம்ஸ் நீசம் வீசிய ப்ரீ ஹிட் பந்தில் சிக்ஸரை விளாச, இலங்கை அணியின் மீது நம்பிக்கை ஏற்பட்டது. எனினும், துரதிஷ்டவசமாக, நியூசிலாந்து அணி தங்களுடைய சுழல் பந்து வீச்சாளர் மிச்சல் சென்ட்னரை அழைத்து, திசர பெரேராவின் விக்கெட்டை கைப்பற்றியது.

திசர பெரேரா 23 பந்துகளில் 27 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர், அதிரடியால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இசுரு உதான ஓட்டங்கள் இன்றி ஆட்டமிழக்க இலங்கை அணியின் நம்பிக்கை துடுப்பாட்டத்தில் முற்றுமுழுதாக இழக்கப்பட்டது.

பின்வரிசையில் களமிறங்கிய சுரங்க லக்மால் விக்கெட்டினை பறிகொடுக்க, நிதானமாக துடுப்பெடுத்தாடிய அணித் தலைவர் திமுத் கருணாரத்ன 81 பந்துகளில் அரைச்சதத்தை கடந்தார். எனினும், இறுதியாக களமிறங்கிய லசித் மாலிங்க ஒரு ஓட்டத்துடன் பேர்கஸனின் பந்து வீச்சில் ஆட்டமிழக்க இலங்கை அணி 29.2 ஓவர்களில் 136 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்த ஓட்ட எண்ணிக்கையானது கார்டிப் மைதானத்தில் பெறப்பட்ட குறைந்த ஓட்ட எண்ணிக்கையாக பதிவாகியிருந்தது. இதற்கு முன்னர் கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில், இதே நியூசிலாந்து அணிக்கு எதிராக இலங்கை அணி 138 ஓட்டங்களுக்கு சுருண்டிருந்தது.

இதேவேளை, இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சில், லொக்கி பேர்கஸன் மற்றும் மெட் ஹென்ரி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை பகிர்ந்ததுடன், திமுத் கருணாரத்ன இறுதிவரை ஆட்டமிழக்காமல் 84 பந்துகளில் 52 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இதனையடுத்து சவால் குறைந்த ஓட்ட எண்ணிக்கையை நோக்கிய நியூசிலாந்து அணி மிகச்சிறந்த ஆரம்பத்தை பெற்றது. லசித் மாலிங்க வீசிய முதல் ஓவரில் 10 ஓட்டங்களை பெற்று அந்த அணி தங்களுடைய ஓட்ட எண்ணிக்கையை ஆரம்பித்தது. தொடர்ந்து கொலின் மன்ரோ மற்றும் மார்ட்டின் கப்டில் ஜோடி நிதானம் கலந்த அதிரடியுடன் ஓட்டங்களை குவித்து அரைச்சத இணைப்பாட்டத்தை கடந்தனர்.

Photos: Sri Lanka vs New Zealand | ICC Cricket World Cup 2019 – Match 03

ThePapare.com | 01/06/2019 Editing and re-using images without….

இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள் தொடர்ந்தும் தங்களுடைய முதல் விக்கெட்டினை இலக்காக கொண்டு பந்து வீசிய போதும், அதிர்ஷடவசமான வாய்ப்புகளுடன் நியூசிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களை பெற்றனர். இதில், மார்ட்டின் கப்டில் தனது 35வது ஒருநாள் அரைச்சதத்தை கடந்ததுடன், கொலின் மன்ரோ 8வது ஒருநாள் அரைச்சதத்தை பதிவுசெய்தார்.

இறுதியில் இலங்கை பந்துவீச்சாளர்களால் நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போக, அந்த அணி 16.1 ஓவர்களில் எந்தவித விக்கெட்டிழப்புமின்றி வெற்றியிலக்கை அடைந்தது.

நியூசிலாந்து அணி சார்பில் மார்ட்டின் கப்டில் 73 ஓட்டங்களையும், கொலின் மன்ரோ 57 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.

இதேவேளை, இன்றைய போட்டியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி இம்முறை உலகக் கிண்ண தொடரில் தங்களுடைய இரண்டாவது போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்வரும் 5ம் திகதி எதிர்கொள்ளவுள்ளதுடன், இலங்கை அணி தங்களுடைய அடுத்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்வரும் 04ம் திகதி எதிர்கொள்ளவுள்ளது.

போட்டி சுருக்கம்

Result


Sri Lanka
136/10 (29.2)

New Zealand
137/0 (16.1)

Batsmen R B 4s 6s SR
Lahiru Thirimanne lbw b Matt Henry 4 2 1 0 200.00
Dimuth Karunaratne not out 52 84 4 0 61.90
Kusal Perera c Colin de Grandhomme b Matt Henry 29 24 4 0 120.83
Kusal Mendis c Martin Guptill b Matt Henry 0 1 0 0 0.00
Dhananjaya de Silva lbw b Lockie Ferguson 4 13 1 0 30.77
Angelo Mathews c Tom Latham b Colin de Grandhomme 0 9 0 0 0.00
Jeevan Mendis c Jimmy Neesham b Lockie Ferguson 1 4 0 0 25.00
Thisara Perera c Tim Southee b Mitchell Santner 27 23 0 2 117.39
Isuru Udana c Matt Henry b Jimmy Neesham 0 3 0 0 0.00
Suranga Lakmal c Mitchell Santner b Trent Boult 7 13 1 0 53.85
Lasith Malinga b Lockie Ferguson 1 2 0 0 50.00


Extras 11 (b 1 , lb 0 , nb 2, w 8, pen 0)
Total 136/10 (29.2 Overs, RR: 4.64)
Fall of Wickets 1-4 (0.2) Lahiru Thirimanne, 2-46 (8.1) Kusal Perera, 3-46 (8.2) Kusal Mendis, 4-53 (11.5) Dhananjaya de Silva, 5-59 (14.4) Angelo Mathews, 6-60 (15.2) Jeevan Mendis, 7-112 (23.4) Thisara Perera, 8-114 (24.4) Isuru Udana, 9-130 (28.1) Suranga Lakmal, 10-136 (29.2) Lasith Malinga,

Bowling O M R W Econ
Matt Henry 7 0 29 3 4.14
Trent Boult 9 0 44 1 4.89
Lockie Ferguson 6.2 0 22 3 3.55
Colin de Grandhomme 2 0 14 1 7.00
Jimmy Neesham 3 0 21 0 7.00
Mitchell Santner 2 0 5 1 2.50


Batsmen R B 4s 6s SR
Martin Guptill not out 73 51 8 2 143.14
Colin Munro not out 58 47 6 1 123.40


Extras 6 (b 0 , lb 3 , nb 1, w 2, pen 0)
Total 137/0 (16.1 Overs, RR: 8.47)
Bowling O M R W Econ
Lasith Malinga 5 0 46 0 9.20
Suranga Lakmal 4 0 28 0 7.00
Isuru Udana 3 0 24 0 8.00
Thisara Perera 3 0 25 0 8.33
Jeevan Mendis 1.1 0 11 0 10.00



>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<