தொடரை தக்க வைக்க இலங்கையின் போராட்டம் எவ்வாறு அமையும்?

1629

இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஓரு நாள் போட்டியில், நியூசிலாந்து அணி வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை அடைந்துள்ளது.

இந்நிலையில் இலங்கை அணி, நியூசிலாந்து அணியுடனான ஒரு நாள் தொடரை தக்கவைக்க கட்டாய வெற்றி பெற வேண்டியவாறு தொடரின் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் நாளை மோதுகின்றது.

போட்டி விபரம்

  • இடம் பேய் ஓவல் (Bay Oval) மைதானம், மௌண்ட் மங்கனூய்
  • திகதி – ஜனவரி 5 (சனிக்கிழமை)
  • நேரம் – மதியம் 2 மணி (இலங்கை நேரப்படி காலை 6.30 மணி)

முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணிக்கு ஐ.சி.சி அபராதம்.

நியூசிலாந்து அணியுடனான முதலாவது…

தொடரின் முன்னைய போட்டி பற்றி  

கடந்த போட்டியும், எதிர்பார்ப்புக்களும்

மலர்ந்திருக்கும் புதிய ஆண்டில் இலங்கைநியூசிலாந்து அணிகள் இடையே நடைபெற்ற இந்த ஒரு நாள் தொடரின் முதல் போட்டியே, இந்த ஆண்டின் முதலாவது ஒரு நாள் சர்வதேச போட்டியாக அமைந்திருந்தது.

குறித்த போட்டியில் நியூசிலாந்து அணி நிர்ணயம் செய்த இமலாய வெற்றி இலக்கினை (372) அடைய போராடிய இலங்கை வீரர்கள் துரதிஷ்டவசமாக குறுகிய ஓட்ட வித்தியாசத்தில் (45) தோல்வியினை தழுவியிருந்தனர்.

இப்போட்டியில் நியூசிலாந்து அணி சகலதுறைகளிலும் சிறப்பாக செயற்பட்டிருக்க, இலங்கை அணியிலும் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தது அவதானிக்கப்பட்டிருந்தது.

இதேநேரம், நியூசிலாந்து அணியுடனான முதலாவது ஒரு நாள் போட்டி, புதிய அணித்தலைவர் ஒருவரோடு இந்த ஆண்டினை ஆரம்பித்திருக்கும் இலங்கை அணிக்கு இந்த ஆண்டில் இடம்பெறவிருக்கும் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் சிறப்பாக செயற்பட எப்படியான ஒரு அணியை கட்டமைக்க வேண்டும் என்பதற்கு தேவையான விடயங்கள் பலவற்றை கற்றுத்தந்திருந்தது.

குசல் பெரேரா சதமடித்தும் முதல் போட்டியில் தோல்வியை தழுவிய இலங்கை

சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து…

உலகக் கிண்ணத்திற்கான ஒரு அணியினை கட்டமைப்பது ஒருபுறமிருக்க இலங்கை அணியினர் இந்த ஒரு நாள் தொடரினை தக்கவைக்க நாளைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டிய நிலையில் இருக்கின்றனர். இதற்காக, சகலதுறைகளிலும் வலிமையாக இருக்கும் நியூசிலாந்து அணியின் பலவீனங்களை அறிவது இலங்கை வீரர்களுக்கு தேவையாக இருக்கின்றது.

மறுமுனையில், மிகவும் வலிமையான ஒரு அணியாக இருக்கும் நியூசிலாந்து அணி, முதலாவது ஒரு நாள் போட்டி போன்று நாளைய போட்டியிலும் இலங்கை அணிக்கு கடின சவால் ஒன்றினை வழங்க காத்திருக்கின்றது.

இலங்கை அணி

நாளை இடம்பெறவுள்ள போட்டியில் தொடரின் முதல் ஒரு நாள் போட்டியில் களமிறங்கியிருந்த இலங்கை அணியில், மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக இலங்கை அணித்தலைவர் லசித் மாலிங்க முதல் போட்டியின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சாடை ஒன்றை வைத்து குறிப்பிட்டிருந்தார்.

அந்தவகையில் முதல் போட்டியில் எதிர்பார்த்த ஆட்டத்தை வழங்க தவறியிருந்த சீக்குகே பிரசன்ன, அசேல குணரத்ன மற்றும் நுவான் பிரதீப் ஆகிய வீரர்களுக்குப் பதிலாக வேறு வீரர்கள் நாளைய போட்டிக்கான இலங்கை அணியில் இடம்பெறுவதை எதிர்பார்க்க முடியும். இதனடிப்படையில் தனன்ஞய டி சில்வா, தசுன் சானக்க மற்றும் கசுன் ராஜித ஆகிய வீரர்கள் இலங்கை அணியில் உள்வாங்கப்படலாம் என நம்பப்படுகின்றது.

>>காணொளிகளைப் பார்வையிட<<

நாளை இடம்பெறவுள்ள போட்டியில் இலங்கை அணியின் துடுப்பாட்டத்துறையின் முன்வரிசை நிரோஷன் திக்வெல்ல, தனுஷ்க குணத்திலக்க மற்றும் குசல் ஜனித் பெரேரா ஆகிய வீரர்களால் முதல் ஒரு நாள் போட்டி போன்று பலப்படுத்தப்பட, அணித்தலைவர் லசித் மாலிங்க இலங்கை தரப்பின் பந்துவீச்சுத்துறையினை முன்னெடுக்கும் முக்கிய வீரராக காணப்படுவார்.

எதிர்பார்க்கப்படும் இலங்கை அணி

நிரோஷன் திக்வெல்ல, தனுஷ்க குணத்திலக்க, குசல் ஜனித் பெரேரா, குசல் மெண்டிஸ், தனன்ஞய டி சில்வா, தினேஷ் சந்திமால், தசுன் சானக்க, திசர பெரேரா, லசித் மாலிங்க (அணித்தலைவர்), லக்ஷான் சந்தகன், கசுன் ராஜித

நியூசிலாந்து அணி

தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணிக்காக ஒரு நாள் போட்டிகளில் அறிமுகமாகியிருந்த டிம் ஸ்டெபெய்ர்ட் துடுப்பாட்டத்தில் ஜொலிக்காத போதிலும் அவர் நாளைய போட்டியிலும் அணியில் தொடர்ந்து நீடிப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில் நியூசிலாந்து அணி தமது அடுத்த போட்டியிலும் முதல் போட்டியில் ஆடிய அதே அணியினையே களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

அணியின் வீழ்ச்சிக்கு ஓய்வுபெற்ற வீரர்கள் காரணமில்லை ; மாலிங்க

சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை அணி…

இலங்கை அணியுடனான நாளைய போட்டியில் நியூசிலாந்து வீரர்களில் மார்டின் குப்டில், கொலின் முன்ரோ மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் துடுப்பாட்டத்துறைக்கு பலம் சேர்ப்பவர்களாக இருக்க ஜேம்ஸ் நீஷம், ட்ரென்ட் போல்ட் ஆகியோர் பந்துவீச்சுத்துறையில் வலுச்சேர்க்க காத்திருக்கின்றனர்.

எதிர்பார்க்கப்படும் நியூசிலாந்து அணி

மார்டின் குப்டில், கொலின் முன்ரோ, கேன் வில்லியம்சன் (அணித்தலைவர்), ரோஸ் டெய்லர், ஹென்ரி நிக்கோல்ஸ், டிம் செய்பேர்ட், ஜேம்ஸ் நீஷம், மேட் ஹென்ரி, இஸ் சோதி, லோக்கி பெர்குஷன், ட்ரென்ட் போல்ட்

எதிர்பார்ப்பு வீரர்கள்

Courtesy – AFP

குசல் ஜனித் பெரேரா (இலங்கை) கடந்த ஆண்டில் இங்கிலாந்து அணியுடனான ஒரு நாள் தொடரின் போது உபாதைக்குள்ளாகிய குசல் ஜனித் பெரேரா, இலங்கை அணிக்காக நாளைய போட்டியில் பிரகாசிக்க கூடிய முக்கிய வீரராக இருக்கின்றார்.

கடந்த ஆண்டில் இலங்கை அணிக்காக ஒரு நாள் போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர்களில் ஒருவராக காணப்படும் குசல், நியூசிலாந்து அணியுடனான ஒரு நாள் தொடரின் முதல் போட்டியிலும் இலங்கை அணிக்காக சதம் (102) ஒன்றுடன் போராடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து) – நியூசிலாந்து அணியின் தலைவரான கேன் வில்லியம்சன், அணிக்காக அடுத்த போட்டியில் ஜொலிக்க எதிர்பார்க்கப்படும் பிரதான வீரராக உள்ளார்.

நியூசிலாந்து மண்ணில் இலங்கை அணிக்கு எதிராக இடம்பெற்ற ஒரு நாள் போட்டிகளில் 50 இற்கு மேலான துடுப்பாட்ட சராசரியினை காட்டியிருக்கும் கேன் வில்லியம்சன், தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற அரைச்சதம் (76) ஒன்றுடன் உதவியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மைதான நிலைமைகள்

தொடரின் முதலாவது ஒரு நாள் போட்டி இடம்பெற்ற பேய் ஓவல் (Bay Oval) மைதானத்திலேயே நாளைய போட்டியும் இடம்பெறும்.

முதல் ஒரு நாள் போட்டி போன்று நாளைய போட்டியிலும் மைதானம் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக காணப்படும் எனக் கூறப்பட்டிருக்கின்றது.

இதேநேரம், மழையின் இடையூறும் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இருக்காது என எதிர்வு கூறப்பட்டிருப்பதால் விறுவிறுப்பான கிரிக்கெட் போட்டியொன்று இரசிகர்களுக்காக காத்திருக்கின்றது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<