இந்தியாவின் காலிங்க அரங்கில் இடம்பெற்ற 20 வயதின் கீழ் தெற்காசிய கால்பந்து சம்மேளன (SAFF) சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை இளையோர் அணி 3-0 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியடைந்துள்ளது.
கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற ஆரம்ப போட்டியில் நேபாளம் அணி மாலைதீவுகளை 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்ட நிலையிலும், இலங்கை அணி தமது முதல் போட்டியில் பங்களாதேஷிடம் 1-0 என தோல்வி கண்ட நிலையிலும் இந்தப் போட்டியில் களம் கண்டன.
- முதல் போட்டியில் பங்களாதேஷிடம் வீழ்ந்த இலங்கை
- 20 வயதின்கீழ் SAFF சம்பியன்ஷிப்; இலங்கை குழாம் அறிவிப்பு
- இலங்கை 20 வயதின்கீழ் அணியின் பயிற்றுனர் குழாம் அறிவிப்பு
- சுபர் சன்னை வீழ்த்திய செரண்டிப்; இறுதி நேரத்தில் வெற்றியை இழந்த பெலிகன்ஸ்
- முதல் பயிற்சி போட்டியை சமன் செய்த இலங்கை 20 வயதின்கீழ் அணி
புதன்கிழமை (27) புவனேஷ்வர் காலிங்க அரங்கில் ஆரம்பமான இந்தப் போட்டியின் முதல் பாதியில் நேபாள வீரர்கள் அதிக ஆதிக்கம் செலுத்தினர். எனினும், நேபாளம் வீரர்களின் கோல் முயற்சிகள் பலவற்றை இலங்கை கோல் காப்பாளர் ஷேன் பானுக சிறந்த முறையில் தடுத்தார்.
மறுமுனையில் இலங்கை அணிக்கு முதல் பாதியில் கிடைத்த சிறந்த கோல் வாய்ப்பாக, மத்திய களத்தில் மிக வேகமாக செயற்பட்ட முன்ஷிப் முன்னோக்கி எடுத்து வந்து பந்தை கோல் நோக்கி செலுத்த, அது கோலின் இடது பக்க கம்பத்தில் பட்டு வெளியேறியது.
கோல்கள் இன்றி ஆரம்பமான இரண்டாம் பாதி ஆட்டத்தை நேபாள வீரர்கள் முழுமையாக தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
போட்டியின் 57ஆவது நிமிடத்தில் நேபாள அணியின் தலைவர் அயுஸ் காலான் இலங்கை கோல் பரப்பில் இருந்து சக வீரர் வழங்கிய பந்துப் பரிமாற்றத்தின் மூலம் போட்டியின் முதல் கோலைப் பெற்றார்.
அடுத்த 7 நிமிடங்களில் மீண்டும் கிரிடிஷ் ரஷ்னா நேபாள அணிக்கான இரண்டாவது கோலையும் பெற்றுக் கொடுத்தார். தொடர்ந்தும் மிக வேகமாக ஆடிய நேபாளம் அணி மனாங்யா நகராமி மூலம் அடுத்த கோலையும் பெற, போட்டி நிறைவில் 3-0 என வெற்றி பெற்ற நேபாளம் வீரர்கள் தொடரில் தமது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தனர். இலங்கை அணிக்கு இது இரண்டாவது தோல்வியாகும்.
நேபாளம் அணி பெற்ற பல கோல் முயற்சிகளை இலங்கை கோல் காப்பாளர் பானுக தடுத்தமை, இலங்கைக்கு எதிரணி பெற்ற கோல் எண்ணிக்கையை மூன்றாக மட்டுப்படுத்த உதவியாக இருந்தது.
முழு நேரம்: இலங்கை 0 – 3 நேபாளம்
கோல் பெற்றவர்கள்
நேபாளம் – அயுஸ் காலான் 57’, கிரிடிஷ் ரஷ்னா 64’, மனாங்யா நகராமி 83’
இதேவேளை, புதன்கிழமை இடம்பெற்ற அடுத்த போட்டியில் ஏற்கனவே இலங்கையை வீழ்த்திய பங்களாதேஷ் வீரர்கள் பலமான இந்திய அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டனர்.
இரண்டு தோல்விகளை சந்தித்துள்ள இலங்கை அணி தமது அடுத்த போட்டியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (29) போட்டிகளை நடாத்தும் இந்திய அணியை சந்திக்கவுள்ளது.
இதேவேளை, நேபாளம் அணி தமது அடுத்த போட்டியில் எதிர்வரும் 31ஆம் திகதி இந்திய அணியை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<