நீண்ட நாட்களின் பின்னர் கால்பந்து ரசிகர்களை மகிழ்வித்த இலங்கை அணி

292
AFC

லெபனான் அணிக்கு எதிராக இடம்பெற்ற 2022 கால்பந்து உலகக் கிண்ணத் தொடருக்கான ஆசியப் பிராந்திய அணிகளை தெரிவு செய்யும் பூர்வாங்க தகுதிகாண் சுற்றுத்தொடர் மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான ஆசிய கால்பந்து சம்பியன்ஷிப் தொடருக்கான தகுதிகாண் போட்டியில் இலங்கை அணி 3-2 என்ற கோல்கள் கணக்கில் தோல்வி கண்டுள்ளது.

எனினும், இவ்வளவு காலமும் மிக மோசமான ஆட்டத்தை காண்பித்து மிகப் பெரிய கோல் வித்தியாசத்தில் தோல்விகளை சந்தித்து வந்த இலங்கைக்கு இது ஒரு ஆறுதல் கொடுத்த போட்டியாக இருந்தது. 

>> இலங்கையில் கால்பந்து முன்னேற இன்னும் 4, 5 வருடங்கள் தேவை – அமிர்

தென் கொரியாவின் கொயங் அரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டி ஆரம்பமாகிய 10 நிமிடங்களில் மத்திய களத்தில் இருந்து கவிந்து இஷான் வழங்கிய பந்தை வசீம் ராசிக் எதிரணியின் கோல் எல்லைவரை எடுத்துச் சென்று போட்டியின் முதல் கோலைப் பெற்றார். 

வசீமின் இந்த கோலானது, இந்த சுற்றுத் தொடரிலேயே இலங்கை அணி பெற்ற முதல் கோலாகப் பதிவானது. 

இலங்கை அணியின் கோல் பெற்று அடுத்த நிமிடத்தில், லெபனான் அணிக்கு கிடைத்த பிரீ கிக் வாய்ப்பின்போது ஹைதர் அனுப்பிய பந்தினை ஹெடர் செய்த ஜொவான் உமரி அவ்வணிக்கான முதல் கோலைப் பெற்றார்

அடுத்த 6 நிமிடங்களில் சக வீரர் மூலம் உள்ளனுப்பப்பட்ட பந்தை MOHAMAD KDOUOH ஹெடர் செய்து லெபனான் அணிக்கான அடுத்த கோலையும் பெற்றார். 

மீண்டும் லெபனான் வீரர் இலங்கையின் கோலுக்குள் செலுத்திய பந்தை இலங்கை பின்கள வீரர் டக்சன் பயுஸ்லஸ் கோலுக்கு அண்மையில் இருந்து வெளியேற்றினார்.  

அதன் பின்னர் லெபனான் வீரர்கள் கோலுக்காக எடுத்த பல முயற்சிகளை இலங்கை அணியின் தலைவர் சுஜான் பெரேரா சிறப்பாகத் தடுத்தார். 

எனினும் ஆட்டத்தின் 44ஆவது நிமிடத்தில் கிடைத்த கோணர் வாய்ப்பின்போது  உள்வந்த பந்தை இலங்கை வீரர்கள் தடுக்கத் தவறியமையினால் உமரி பந்தை கோலுக்குள் செலுத்தி லெபனான் அணிக்கான மூன்றாவது கோலையும் பெற்றுக் கொடுத்தார். 

முதல் பாதி: லெபனான் 3 – 1 இலங்கை 

இரண்டாம் பாதியின் 62ஆவது நிமிடத்தில் மத்திய களத்தில் இருந்து வசீம் பந்தை எடுத்துச் செல்லும்போது எதிரணியின் கோல் எல்லையில் வைத்து முறையற்ற விதத்தில் வீழ்த்தப்பட்டார். இதன்போது கிடைத்த பெனால்டியை வசீம் கோலாக்கி தனது இரண்டாவது கோலையும் பதிவு செய்தார். 

>> இலங்கை கால்பந்து அணியில் இடம்பிடித்த தமிழ் பேசும் வீரர்கள்…!  

இரண்டாம் பாதியில் இலங்கை வீரர்கள் முதல் பாதியை விடவும் அதிகமாக எதிரணியின் திசையில் கோலுக்கான முயற்சிகளை மேற்கொண்டனர். 

அதேபோன்று, மாற்று வீரராக மைதானத்திற்குள் வந்த இங்கிலாந்தில் கால்பந்து ஆடும் டிலொன் டி சில்வா கோலுக்கான சில முயற்சிகளை எடுத்தாலும் அவற்றை எதிரணியின் கோல் காப்பாளர் தடுத்தார்.

முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் இலங்கை வீரர்கள் பின்களத்திலும் சிறப்பாக ஆடியமையினால் லெபனான் வீரர்களால் எந்தவொரு கோலையும் பெற முடியாமல் போனது. 

எனவே, போட்டி நிறைவில், லெபனான் 3-2 என்ற கோல்கள கணக்கில் இலங்கை அணியை  வீழ்த்தியது. 

இலங்கை வீரர்கள் இந்த தொடரில் தமது இறுதி மோதலில் எதிர்வரும் 9ஆம் திகதி தென் கொரிய அணியை இதே மைதானத்தில் சந்திக்கவுள்ளது. 

முழு நேரம்: லெபனான் 3 – 2 இலங்கை

கோல் பெற்றவர்கள் 

  • லெபனான் – ஜொவான் உமரி 9’ & 44’, MOHAMAD KDOUOH 17’
  • இலங்கை – வசீம் ராசிக் 10’ & 63’ (P)’ 

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<