அயர்லாந்திடம் அதிர்ச்சித் தோல்வியடைந்த இலங்கை மகளிர் அணி

424

மகளிர் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான அயர்லாந்துடனான பயிற்சிப் போட்டியில் இலங்கை மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்துள்ளது.  

>> நியூஸிலாந்துடனான பயிற்சிப் போட்டியில் இலங்கை மகளிர் அணி தோல்வி

ஆறாவது ICC மகளிர் டி-20 உலகக் கிண்ணப் போட்டி நாளை (9) மேற்கிந்திய தீவுகளில் ஆரம்பமாகவுள்ளது. இதில் பங்கேற்கும் சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணி மேற்கிந்திய தீவுகள் நேரப்படி நேற்று (07) அயர்லாந்து மகளிர் அணியுடன் தனது இரண்டாவது பயிற்சிப் போட்டியில் பங்கேற்றது.

அன்டிகுவாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அயர்லாந்து அணித்தலைவி லோரா டிலானி இலங்கையை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தார்.

ஆரம்பத்தில் ஸ்திரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி 7 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 40 ஓட்டங்களை பெற்றிருந்தது. எனினும், 14 ஓட்டங்களை பெற்றிருந்த சமரி அத்தப்பத்து ஆட்டமிழந்ததை அடுத்து இலங்கை துடுப்பாட்ட வரிசை மிக வேகமாக சரிய ஆரம்பித்தது.

இதன்படி அடுத்த 11.1 ஓவர்களில் மேலும் 45 ஓட்டங்களுக்கு இலங்கை அணி எஞ்சிய 9 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இடதுகை துடுப்பாட்ட வீராங்கனை ஹாசினி பெரேரா 34 பந்துகளில் 31 ஓட்டங்களை பெற்ற நிலையில் ரன் அவுட் ஆனது இலங்கைக்கு பின்னடைவை தேடித்தந்தது.

>> சுழல் பந்துவீச்சாளர்களின் அபாரத்தினால் இரண்டாம் நாளிலும் இங்கிலாந்து அணி ஆதிக்கம்

நிறைவில், இலங்கை மகளிர் அணி 18.2 ஓவர்களில் 85 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. 17 வயது வீராங்கனையான மரிட்ஸ் தனது மிதவேகப் பந்துவீச்சு மூலம் 8 பந்துகளில் ஒரு ஓட்டத்தை மாத்திரம் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

தொடர்ந்து 86 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்தாட வந்த அயர்லாந்து அணியின் ஆரம்ப வீராங்கனை செசலியா ஜோய்ஸின் விக்கெட்டை முதல் ஓவரிலேயே டக் அவுட் செய்வதற்கு உதேசிக்கா பிரபோதனியால் முடிந்தது. எனினும் கிளேயார் ஷிலிங்டன் மற்றும் கோபி லுவில் ஆகியோர் 6 ஓவர்களுக்குள் 43 ஓட்ட இணைப்பாட்டத்தை பெற்று அயர்லாந்து அணியின் வெற்றியை இலகுவாக்க உதவினர்.

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற டி-20 உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் தொடர் நாயகியாக தெரிவான ஷிலிங்டன் 7 பௌண்டரிகளுடன் ஆட்டமிழக்காது 50 ஓட்டங்களை குவித்தார். அவர் டிலானியுடன் சேர்ந்து பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக 41 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டு அயர்லாந்து அணியின் வெற்றை உறுதி செய்தார்.

>> அவுஸ்திரேலியாவுடனான முதலாவது ஒரு நாள் போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி

இதன்மூலம் அயர்லாந்து மகளிர் அணி 13.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கான 86 ஓட்டங்களை பெற்றது.

முன்னதாக இலங்கை மகளிர் அணி நியுஸிலாந்து அணிக்கு எதிராக தனது முதலாவது பயிற்சிப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இம்முறை மகளிர் டி-20 போட்டியில் இலங்கை மகளிர் அணி இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகள் உள்ள A குழுவில் ஆடவுள்ளது. இலங்கை தனது முதல் போட்டியில் வரும் ஞாயிற்றுக்கிழமை (11) பலம்மிக்க இங்கிலாந்து மகளிர் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை மகளிர் – 85 (18.2) – ஹாசினி பெரேரா 31, சமரி அத்தபத்து 14, லாரா மரிட்ஸ் 3/1, செலஸ்ட் ராக் 2/16

அயர்லாந்து மகளிர் – 86/2 (13.2) – கிளெயர் ஷிலிங்டன் 50*, லோரா டிலானி 15*, உதேஷிக்கா பிரபோதனி 1/8

முடிவு அயர்லாந்து மகளிர் 8 விக்கெட்டுகளால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<