இந்திய கட்புலனற்றோர் அணிக்கு எதிரான தீர்க்கமான மூன்றாவது டி-20 போட்டியில் இலங்கை கட்புலனற்றோர் அணி 9 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இதன் மூலம் முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த இலங்கை அணி ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் வெற்றி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.
எனினும் இந்த தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றிருக்கும் நிலையில் இலங்கை அணி தொடரை வெல்வதற்கு அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெறுவது கட்டாயமாகும்.
இந்த தொடரில் தொடர்ச்சியாக மற்றொரு தடவையும் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணித்தலைவர் இலங்கையை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தார்.
இதன்படி கொழும்பு, BRC மைதானத்தில் திங்கட்கிழமை (23) நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை கட்புலனற்றோர் அணி 20 ஓவர்களுக்கும் 8 விக்கெட்டுகளை இழந்து வலுவான 190 ஓட்டங்களை குவித்தது. இந்த தொடரில் சோபித்து வரும் அஜித் சில்வா மற்றொரு அரைச்சதத்தை பெற்றார். அவர் கடந்த போட்டியிலும் 64 ஓட்டங்களை குவித்திருந்தார். கடந்த போட்டியில் ஆட்டமிழக்காது 41 ஓட்டங்களை பெற்ற சந்தன தேஷப்ரிய பெறுமதியான 43 ஓட்டங்களை குவித்தார்.
உபாதைகளின் பின்னர் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் ஆடவுள்ள அசேல குணரத்ன
சவாலான இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய கட்புலனற்றோர் அணி முக்கிய இடைவெளிகளில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் அந்த அணிக்கு தேவைப்படும் ஓட்ட வேகத்தை பெற முடியாமல் போனது. எனினும் இந்திய அணி வெற்றிக்காக கடைசி வரை போராடியது.
இறுதியில் இந்திய கட்புலனற்றோர் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 181 ஓட்டங்களை பெற்றது. மற்றொரு அரைச்சதத்துடன் சுனில் ரமேஷ் தொடர்ந்து சோபித்து வருகிறார். எனினும் இந்திய அணி வெற்றிபெற அந்த ஓட்டங்கள் போதுமாக இருக்கவில்லை.
இலங்கை சார்பில் சஹன் குமார 38 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். துடுப்பாட்டத்தில் சோபித்த அஜித் சில்வா தனது தந்திரமான பந்துவீச்சு மூலம் 42 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
சகலதுறையிலும் சோபித்த அஜித் சில்வா போட்டியின் ஆட்ட நாயகன் விருதை வென்றார். இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது டி-20 போட்டி இதே BRC மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (24) நடைபெறவுள்ளது. எஞ்சிய போட்டிகளின் விபரம், புகைப்படம் மற்றும் நேரடி தகவல்களை பெற www.thepapare.com உடன் இணைந்திருங்கள்.
போட்டியின் சுருக்கம்
இலங்கை – 190/8 (20) – அஜித் சில்வா 74, சந்தன தேசப்ரிய 43, சுனில் ரமேஷ் 1/37
இந்தியா – 181/6 (20) – சுனில் ரமேஷ் 51*, சஹன் குமார 2/38, அஜித் சில்வா 2/42
முடிவு – இலங்கை கட்புலனற்றோர் அணி 9 ஓட்டங்களால் வெற்றி
போட்டியின் ஆட்ட நாயகன் – அஜித் சில்வா
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<