இந்திய கட்புலனற்றோர் அணியிடம் வைட்-வொஷ் தோல்வியடைந்த இலங்கை கட்புலனற்றோர் அணி

200

இலங்கை கட்புலனற்றோர் அணிக்கு எதிரான ஐந்தாவதும், இறுதியுமான T20 போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய கட்புலனற்றோர் அணி தொடரை 5-0 என வைட்-வொஷ் செய்துள்ளது.

இந்திய கட்புலனற்றோர் அணிக்கு எதிரான நான்கு T20 போட்டிகளிலும் தோல்வியடைந்திருந்த இலங்கை கட்புலனற்றோர் அணி, இந்தப் போட்டியில் ஆறுதல் வெற்றியை நோக்கி விளையாடியது. பரிதாபத் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இலங்கை கட்புலனற்றோர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 152 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் பிரகாசிக்காத போதும், மத்தியவரிசையில் துடுப்பெடுத்தாடிய சந்தன தேஷப்பரியவின் அரைச்சதம் மற்றும் சமன் துஷாரவின் 38 ஓட்டங்கள் அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலுச் சேர்த்தது. வேகமாக துடுப்பெடுத்தாடிய சந்தன தேஷப்பரிய 35 பந்துகளுக்கு 6 பௌண்டரிகள் அடங்கலாக 52 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் வெளியேறி அணிக்கு ஏமாற்றமளித்தனர்.

இந்தியாவிடம் இலங்கை கட்புலனற்றோர் அணிக்கு மீண்டும் தோல்வி

பந்து வீச்சில் இந்திய அணியின் அஜய் குமார் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், தீபக் மலிக் மற்றும் அமர் கர்ச்சி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய கட்புலனற்றோர் அணி எந்தவித விக்கெட்டிழப்பும் இன்றி,  14.3 ஓவர்களில் 155 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றது. இந்திய கட்புலனற்றோர் அணி சார்பில் அதிரடியாக ஆடிய தீபக் மலிக் 50 பந்துகளில் 14 பௌண்டரிகள் அடங்கலாக 88 ஓட்டங்களை குவித்ததுடன், அவருடன் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய அஜய் குமார் 37 பந்துகளில் 8 பௌண்டரிகள் அடங்கலாக 52 ஓட்டங்களை விளாசினார்.

இதனடிப்படையில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய கட்புலனற்றோர் அணி, 5 போட்டிகள் கொண்ட T20 தொடரை 5-0 என கைப்பற்றி, இலங்கை அணியை வைட்-வொஷ் செய்துள்ளது. இதேவேளை இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை (23) ஆரம்பமாகிறது.

போட்டி சுருக்கம்

இலங்கை – 153/8 (20) – சந்தன தேஷப்பரிய 52, சமன் துஷார 38, அஜய் குமார் 20/2

இந்தியா – 155/0 (14.3) – தீபக் மலிக் 88*, அஜய் குமார் 52*

முடிவு – இந்திய கட்புலனற்றோர் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<