சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியில், இறுதி வரை போராட்டத்தை வெளிக்காட்டிய இந்திய அணி இலங்கை அணியை டக்வத் லூவிஸ் முறையில் 3 விக்கெட்டுகளால் வீழ்த்தியதுடன், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரிலும் 2-0 என முன்னேறியுள்ளது.
கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் தொடங்கியிருந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் தலைவர் விராத் கோஹ்லி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை இலங்கைக்கு வழங்கினார்.
சுழலிற்கு சாதகமான இன்றைய ஆடுகளத்தில் தமது 800ஆவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி களம் கண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாவது ஒரு நாள் போட்டியில் திருப்தியற்ற ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்த திசர பெரேரா, வனிந்து ஹஸரங்க மற்றும் லக்ஷான் சந்தகன் ஆகியோருக்கு பிரதியீடாக இன்றைய போட்டியில் துஷ்மந்த சமீர, அகில தனன்ஞய மற்றும் மிலிந்த சிறிவர்தன ஆகியோர் இலங்கை அணியில் உள்வாங்கப்பட்டிருந்தனர்.
அதேபோன்று, முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்த அதே இந்திய அணிக்குழாம் எந்தவித மாற்றமும் இன்றி, இலங்கை வீரர்களுக்கு இம்முறையும் சவால் விட தயாராகியிருந்தது.
சங்காவை அடுத்து இலங்கை அணியை உற்சாகமூட்டும் மஹேல
இளம் வீரர்களை அதிகமாகக் கொண்ட இலங்கை அணிக்கு அண்மைக்காலமாக இடம்பெற்ற…
தொடர்ந்து, மைதானம் விரைந்த நிரோஷன் திக்வெல்ல மற்றும் தனுஷ்க குணத்திலக ஆகியோர் பலத்த எதிர்பார்ப்புகளுடன் இலங்கை அணியின் துடுப்பாட்டத்தினை ஆரம்பம் செய்தனர்.
விரைவாக ஓட்டங்கள் சேர்க்க ஆரம்பித்திருந்த இலங்கை அணியின் விக்கெட் காப்பாளரான நிரோஷன் திக்வெல்ல, பவுண்டரி எல்லைகளை பதம் பார்த்து இலங்கை அணிக்கு அதிரடியான ஆரம்பம் ஒன்றினை வழங்கியிருந்தார்.
எனினும், போட்டியின் எட்டாவது ஓவரில் ஜஸ்பிரிட் பும்ரா வீசிய பந்தினை எதிர்கொண்ட திக்வெல்ல அதனை துரதிஷ்டவசமாக ஷிக்கர் தவானிடம் பிடிகொடுத்து ஓய்வறை திரும்பினார். திக்வெல்ல ஆட்டமிழக்கும் போது 24 பந்துகளுக்கு 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 31 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிறிது நேரத்தில் ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான தனுஷ்க குணத்திலக 19 ஓட்டங்களுடன் ஏமாற்றி வெளியேற, அதன் பிறகு துடுப்பாட வந்த இலங்கை அணியின் தலைவர் உபுல் தரங்க இலகுவான பிடியொன்றினை எதிரணிக்கு வழங்கி மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்த இரண்டு விரைவான விக்கெட்டுகளையும் அடுத்து, குசல் மெண்டிசு மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் அணிக்காக கொஞ்சம் போராடியிருந்தனர். அவர்கள் இருவரையும் இந்திய அணியின் சுழல் வீரர்கள் ஓய்வறை நோக்கி அனுப்ப ஒரு கட்டத்தில், இலங்கை அணி 121 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான ஒரு நிலைக்கு சென்றிருந்தது.
இவ்வாறனதொரு இக்கட்டான நிலையில் பொறுமையாக இலங்கை அணியை மீட்டு எடுக்கும் நோக்கோடு ஆடியிருந்த மிலிந்த சிறிவர்தன மற்றும் சாமர கப்புகெதர ஜோடி பொறுப்பான முறையில் ஓட்டங்களை சேர்த்தது.
ஆறாவது விக்கெட்டுக்காக இந்த ஜோடியினால் 91 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பகிரப்பட்டது. இதனால், பாரிய நெருக்கடி ஒன்றிற்கு உள்ளாக இருந்த இலங்கை அணி அதிலிருந்து மீண்டு கொண்டது.
ஆறாவது விக்கெட்டாக பறிபோன சிறிவர்தன தனக்கு இன்றைய போட்டியில் கிடைத்த வாய்ப்பின் மூலம், தனது முன்றாவது ஒரு நாள் அரைச் சதத்தை பூர்த்தி செய்து கொண்டதுடன் மொத்தமாக 58 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 58 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
சிறிவர்தனவை அடுத்து துரித கதியில், தமது பின்வரிசை வீரர்களை இழந்த இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை பறிகொடுத்து 236 ஓட்டங்களைக் குவித்துக் கொண்டது.
இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில், தனது 100ஆவது ஒரு நாள் போட்டியில் விளையாடும் சாமர கப்புகெதர இரண்டு பவுண்டரிகள் உடன் 40 ஓட்டங்களைப் பெற்று அணிக்கு பெறுமதி சேர்த்திருந்தார்.
அணித் தலைமையில் இருந்து டி வில்லியர்ஸ் இராஜினாமா
பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரும், அதிரடித் துடுப்பாட்ட..
இந்திய அணி சார்பாக பந்து வீச்சில் வலது கை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா 43 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்ததுடன், சுழல் வீரர் யுஸ்வேந்திர சாஹல் இரண்டு விக்கெட்டுகளை பதம் பார்த்திருந்தார்.
முதல் இன்னிங்சினை அடுத்து மழை குறுக்கிட்ட காரணத்தினால், போட்டியின் இரண்டாம் இன்னிங்ஸ் ஆரம்பிக்க சற்று தாமதமானதோடு, இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 47 ஓவர்களில் 231 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது.
வெற்றி இலக்கை அடைவதற்கு மைதானம் விரைந்த இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான, ரோஹித் சர்மா மற்றும் ஷிக்கர் தவான் ஆகியோர் அதிரடியான முறையில் ஓட்டங்களை சேர்த்தனர்.
முதல் விக்கெட்டுக்காக 109 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்தவேளை, போட்டியின் 16ஆவது ஓவரை வீசிய இலங்கை அணியின் சுழல் வீரர் அகில தனஞ்சய ரோஹித் சர்மாவை LBW முறையில் ஆட்டமிழக்கச் செய்து தடுத்து நிறுத்தியிருந்தார்.
ஆட்டமிழக்கும் போது, அரைச்சதம் தாண்டியிருந்த ரோஹித் சர்மா மொத்தமாக 45 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 54 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
ரோஹித் சர்மாவின் விக்கெட்டைத் தொடர்ந்து மறுமுனையில், பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட மிலிந்த சிறிவர்தனவினால், இந்திய அணியின் மற்றைய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷிக்கர் தவானும் அஞ்செலோ மெதிவ்ஸ் எடுத்த அபார பிடியெடுப்பினால் வீழ்த்தப்பட்டிருந்தார். ஆட்டமிழக்கும் போது, தவான் 49 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து போட்டியின் 18ஆவது ஓவரை மீண்டும் வீசிய அகில தனன்ஞய அந்த ஓவரில் இந்திய அணியின் முக்கிய மூன்று வீரர்களான லோக்கேஷ் ராகுல், கேதர் ஜாதவ் மற்றும் அணித்தலைவர் விராத் கோஹ்லி ஆகியோரை முறையே 4,1,4 ஆகிய ஓட்டங்களுடன் போல்ட் செய்து ஓய்வறை அனுப்பினார். இதனால், இந்திய அணிக்கு சார்பாக இருந்த இப்போட்டியின் போக்கே முழுமையாக மாறியிருந்தது.
மேலும், இந்திய அணியின் இரண்டு விக்கெட்டுகளை அகில தனஞ்சய பதம் பார்த்த காரணத்தினால் இந்திய அணியானது, ஒரு கட்டத்தில் 131 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது.
இவ்வாறனதொரு நிலையில், மைதானத்தில் நின்ற மஹேந்திர சிங் தோனி உடன் கைகோர்த்த புவ்னேஸ்வர் குமார் நிதானமான முறையில் துடுப்பாடி எட்டாவது விக்கெட்டிற்காக வீழ்த்தப்படாத 100 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்தார்.
இதனால், இந்திய அணி 44.2 ஓவர்களில் 231 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.
இந்திய அணி சார்பில், போராட்டத்தை வெளிப்படுத்தியிருந்த புவ்னேஸ்வர் குமார் தனது கன்னி அரைச்சதத்துடன் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 53 ஓட்டங்களையும், மஹேந்திர சிங் தோனி 45 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.
இலங்கை அணி சார்பில், பந்து வீசிய அகில தனஞ்சய 54 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஒரு நாள் போட்டிகளில் தனது சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்திருந்ததுடன், மிலிந்த சிறிவர்தன ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியிருந்தார்.
போட்டி முடிவு – இந்தியா டக்வத் லூவிஸ் முறையில் 3 விக்கெட்டுகளால் வெற்றி