இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் விராத் கோலி, முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான முத்தரப்புத் தொடரில் ஏற்கனவே ஆரம்பமாகியுள்ள டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை இழந்துள்ள இலங்கை, தொடரை சமன் செய்யும் நோக்குடன் SSC மைதானத்தில் இன்று ஆரம்பமாகியுள்ள போட்டியில் களம் கண்டுள்ளது.
இலங்கை அணியின் முக்கிய வீராகக் கருதப்பட்ட சகலதுறை ஆட்டக்காரர் அசேல குனரட்ன காயத்தின் காரணமாக இந்த தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ள நிலையில், அவருக்குப் பதிலாக இந்தப் போட்டிக்கு தனன்ஜய டி சில்வா மத்திய வரிசைத் துடுப்பாட்ட வீரராக அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
அது போன்றே, முதல் போட்டியில் விளையாடிய லஹிரு குமுார அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக 30 வயதுடைய சகலதுறை வீரர் மலின்த புஷ்பகுமார இலங்கை அணிக்காக இன்றைய ஆட்டத்தின்மூலம் தனது கன்னிப் போட்டியில் களம் கண்டுள்ளார்.
இதுவரை 99 முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ள மலின்த புஷ்பகுமார 178 இன்னிங்ஸ்களில் 558 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
அது போன்றே, சுகவீனம் காரணமாக முதல் டெஸ்டில் விளையாடாத இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் லோகேஷ் ராகுல் மீண்டும் இந்தப் போட்டியில் விளையாடுகின்றார். இதன் காரணமாக முதல் போட்டியில் விளையாடியிருந்த அபினாவ் முகுந்த் இப் போட்டியில் வாய்ப்பை இழந்துள்ளார்.
இலங்கை அணி
திமுத் கருனாரத்ன, உபுல் தரங்க, குசல் மென்டிஸ், தினேஷ் சந்திமால் (அணித் தலைவர்), அஞ்செலோ மெதிவ்ஸ், தனன்ஜய டி சில்வா, நிரோஷன் திக்செல்ல (விக்கெட் காப்பாளர்), டில்ருவன் பெரேரா, ரங்கன ஹேரத், மலிந்த புஷ்பகுமார, நுவன் பிரதீப்
இந்திய அணி
லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், செதேஷ்வர் புஜாரா, விராத் கோலி (அணித் தலைவர்), அஜின்கியா ரஹானே, ரவிஷ்சந்திரன் அஷ்வின், ஷாஹா, ஹர்த்திக் பாண்டியா, ரவிந்திர ஜடேஜா, மொஹமட் சாமி, உமேஷ் யாதவ்