விஜய், புஜாரா ஆகியோரின் சதங்களோடு இந்தியா இரண்டாம் நாளிலும் ஆதிக்கம்

444
Image Courtesy - ICC

சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நிறைவில், இந்திய அணி முரளி விஜய் மற்றும் செட்டெஸ்வர் புஜாரா ஆகியோரின் சதங்களின் உதவியோடு முதல் இன்னிங்சில் அதி வலுவான நிலையில் காணப்படுகின்றது.

நாக்பூரின் VCA மைதானத்தில் நேற்று ஆரம்பமாகியிருந்த இப்போட்டியில் இந்தியாவின் அபாரப் பந்துவீச்சினால் இலங்கை 205 ஓட்டங்களுடன் முதல் இன்னிங்சில் சுருண்ட பின்னர், தம்முடைய முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்திருந்த இந்திய அணி 11 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்திருந்த போது முதல் நாள் ஆட்டம் முடிவடைந்தது.

இந்தியப் பந்து வீச்சுக்கு மோசமான துடுப்பாட்டத்தைக் காட்டிய இலங்கை

களத்தில் முரளி விஜய் மற்றும் செட்டெஸ்வர் புஜாரா ஆகியோர் தலா 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

துடுப்பாட்டத்துக்கு சாதகமான போட்டியின் இன்றைய இரண்டாம் நாள் ஆடுகளத்தில் இந்தியா தமது முதல் இன்னிங்சை களத்தில் நின்ற வீரர்களுடன் தொடர்ந்தது.

இரண்டு வீரர்களும் விவேகமான முறையில் தமது தரப்புக்கு ஓட்டங்களைச் சேர்க்கத் தொடங்கியிருந்தனர். இதனால் வலுவான இணைப்பாட்டம் ஒன்றை நோக்கி இந்திய அணி சென்று கொண்டிருந்தது.

போட்டியின் மதிய போசண இடைவேளை வரை இவர்கள் இருவரினதும் இணைப்பாட்டங்கள் 100 ஓட்டங்களை எட்டியிருந்ததோடு, முரளி விஜய் தனது அரைச் சதத்தினை அப்போது கடந்திருந்தார்.

தொடர்ந்த போட்டியில் இலங்கை அணிக்கு விக்கெட்டுகளை சாய்ப்பது மிகவும் கடினமாகவே அமைந்திருந்தது. இரண்டு துடுப்பாட்ட வீரர்களும் அதி சிறப்பான முறையில் இலங்கைப் பந்துவீச்சாளர்களை எதிர் கொண்டனர்.

இந்த இன்னிங்சில் தசுன் சானக்கவினால் வீசப்பட்ட 58 ஆவது ஓவரில் முரளி விஜயின் விக்கெட்டை வீழ்த்த பிடியெடுப்பு ஒன்றுக்கு மூன்றாம் நடுவரின் உதவியை இலங்கை நாடியிருந்த போதிலும் அது உபயோகம் இல்லாமல் போயிருந்தது.

தொடர்ந்து முரளி விஜயின் 10 ஆவது டெஸ்ட் சதத்துடன் இந்தியா போட்டியின் தேநீர் இடைவேளையை எடுத்துக் கொண்டது. விக்கெட்டுகள் எதுவும் இல்லாத காரணத்தினால் இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு இன்றைய நாளின் முதல் இரண்டு இடைவேளைகளும் (Sessions) ஏமாற்றமாகவே அமைந்திருந்தது.

இலங்கை அணிக்கு மிகவும் தேவையாக காணப்பட்டிருந்த இந்தியாவின் இன்றைய நாளுக்கான விக்கெட்டை தேநீர் இடைவேளையின் பின்னர் ரங்கன ஹேரத் கைப்பற்றினார். இந்தியாவின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான முரளி விஜய் தில்ருவான் பெரேராவிடம் பிடிகொடுத்து இந்தியாவின் இரண்டாம் விக்கெட்டாக ஓய்வறை நடந்தார்.

ஹேரத் இந்த தொடரில் பெற்ற முதல் விக்கெட்டான முரளி விஜய், 8 மாதங்களின் பின்னர்  இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்பி 221 பந்துகளுக்கு 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 128 ஓட்டங்களை குவித்திருந்ததுடன் இந்திய அணியின் இரண்டாம் விக்கெட்டுக்காக அதி வலுவான 209 ஓட்டங்கள் என்ற இணைப்பாட்டத்தைப் பெறவும் முக்கிய காரணமாக மாறியிருந்தார்.

இந்தியாவின் செலன்ஜர் கிண்ண தொடரில் முதற்தடவையாக பங்கேற்கும் இலங்கை

இலங்கை இந்தியாவின் விக்கெட் ஒன்றை வீழ்த்தியிருந்தாலும் இந்திய அணியினர் முதல் இன்னிங்சில் இலகுவாக இலங்கையின் மொத்த ஓட்டங்களை (205) தாண்டியிருந்தனர்.

இன்னும் இந்திய அணிக்காக செட்டெஸ்வர் புஜாரா தனது 14 ஆவது டெஸ்ட் சதத்தை கடந்து மேலும் ஓட்டங்களை உயர்த்தினார். இந்த சதத்தோடு அணித்தலைவர் விராட் கோஹ்லியும் அரைச்சதம் ஒன்றை விளாச போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தை இந்தியா வெற்றிகரமாக நிறைவு செய்தது.

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 98 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 312 ஓட்டங்களைப் பெற்றிருப்பதுடன் இலங்கை அணியை விட 107 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.

களத்தில் செட்டெஸ்வர் புஜாரா 121 ஓட்டங்களுடனும், விராட் கோஹ்லி 54  ஓட்டங்களோடும் ஆட்டமிழக்காது நிற்கின்றனர்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை (முதல் இன்னிங்ஸ்) – 205 (79.1) – தினேஷ் சந்திமால் 57(122), திமுத் கருணாரத்ன 51(147), நிரோஷன் திக்வெல்ல 24(30), ரவிச்சந்திரன் அஷ்வின் 67/4(28.1), இஷாந்த் சர்மா 37/3(14), ரவீந்திர ஜடேஜா 56/3(21)

இந்தியா (முதல் இன்னிங்ஸ்) – 312/2 (98) – முரளி விஜய் 128(221), செட்டெஸ்வர் புஜாரா 121*(284), விராட் கோஹ்லி 54*(70), ரங்கன ஹேரத் 45/1(24)

போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.